அசிஸ்டெண்ட் புரொபசர் ‘மாமி’ நிர்மலாதேவி-க்கு ஜாமின்! – AanthaiReporter.Com

அசிஸ்டெண்ட் புரொபசர் ‘மாமி’ நிர்மலாதேவி-க்கு ஜாமின்!

பலான  செயலுக்கு அழைக்கும் விதமாக மாணவிகளுடன் அருப்புக்கோட்டை உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி பேசிய ஆடியோ கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப் பட்டிருந்த நிலையில் அவருக்கு மதுரை ஐகோர்ட் கிளை ஜாமின் வழங்கியது .

தமிழகத்தில் கல்லூரி மாணவிகளிடையே நிர்மலா தேவி போனில் பேசிய விவகார வழக்கு கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, சிபிசிஐடி குழு விசாரணை நடத்தி வருகிறது. பின்னர் பேராசிரியை நிர்மலா தேவி தொடர்பான வழக்கை சிபிஐக்கு மாற்றுமாறு வழக்கு தொடரப்பட்டது. ஆனால் நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்ற முடியாது என தெரிவித்து விட்டது. ஆனால் தனக்கு ஜாமின் வழங்க கோரி ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நிர்மலாதேவி பலமுறை மனு தாக்கல் செய்தார். அந்த மனுக்கள் நீதிமன்றங்களால் நிராகரிக்கப் பட்டுள்ளன.

இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில், தனது ஜாமின் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப் பட்டு வருகின்றன. எனவே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நிர்மலா தேவி ஜாமீன் குறித்து பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அடுத்து தமிழக அரசு சார்பில், நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்குவதில் அரசு தரப்பில் எந்தவித தடையும் இல்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தான் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது எனக் கூறியது. மேலும் நிர்மலா தேவிக்கு ஜாமீன் குறித்து சிபிசிஐடி தரப்பு மார்ச் 11 ஆம் தேதி பதிலளிக்குமாறு கூறியது.

இந்தநிலையில், நேற்று நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்குவது குறித்த வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் சுந்தர் அமர்வு, பேராசிரியை நிர்மலா தேவியை இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நீதிபதிகள் உத்தரவை அடுத்து, இன்று நிர்மலா தேவிக்கு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். பின்னர் மாணவிகளை தவறான செயலுக்கு அழைத்த பேராசிரியர் நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கியது நீதிமன்றம். மேலும் விசாரணைக்கு தொடர்ந்து ஒத்துழைப்பு தரவேண்டும். வழக்கை பாதிக்கும் வகையில் பேட்டிகள் அளிக்கக் கூடாது என்று கூறியது மதுரை உயர் நீதிமன்றம்.

பேராசிரியர் நிர்மலா தேவிக்கு சுமார் 11 மாத சிறைவாசத்துக்கு பின்னர் ஜாமீன் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.