நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் மரண தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட் – AanthaiReporter.Com

நிர்பயா வழக்கு: குற்றவாளிகள் மரண தண்டனையை உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட்

சர்வதேச அளவில் அதிர்வை ஏற்படுத்திய செய்தி அது. போன 2012-ம் ஆண்டு டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா கூட்டுப்பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனையை இன்று உறுதி செய்தது சுப்ரீம் கோர்ட். குற்றவாளிகள் 4 பேரில் 3 பேர் தங்களுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என்று சீராய்வு மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவைத் தள்ளுபடி செய்த தலைமைநீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, தூக்குத் தண்டனையை உறுதி செய்தது.

கடந்த 2012-ம் ஆண்டு, டிசம்பர் 12-ம் தேதி மருத்துவக்கல்லூரி மாணவி நிர்பயாவை 6 பேர் கொண்ட கும்பல் கடத்திச் சென்று ஓடும் பஸ்ஸில் கூட்டுப்பலாத்காரம் செய்து சாலையில் தூக்கிவீசிவிட்டு சென்றனர். அவர் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் டிசம்பர் 29-ம் தேதி மரணமடைந்தார். நாடுமுழுவதும் பெரும் அதிர்வலையை இந்தவழக்கு ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து பேருந்தின் ஓட்டுநர் ராம் சிங், ஒரு மைனர் சிறுவன், முகேஷ்(29), பவன்குமார் குப்தா(22), வினய் சர்மா(23) அக்சய் குமார் சிங்(23) ஆகியோர் கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை நடக்கும் போதே, பேருந்தின் ஓட்டுநர் ராம் சிங் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். மற்ற 5 பேரில் ஒருவர் சிறுவன் என்பதால் அந்த வழக்கு சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

வழக்கை விசாரித்த டெல்லி ஐகோர்ட் குற்றவாளிகள் முகேஷ், பவன்குமார் குப்தா, வினய் சர்மா, அக்சய் குமார் சிங் ஆகியோருக்குத் தூக்கு தண்டனை விதித்துத் தீர்ப்பளித்து, இந்தத் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டும் உறுதி செய்தது.சிறார் நீதிமன்றத்தில் அந்த சிறுவனுக்கு எதிராக நடந்த வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அந்த தண்டனைக் காலம் முடிந்து அவனும் விடுதலையாகிவிட்டார்.

இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரி, முகேஷ், பவன்குமார் குப்தா, வினய் சர்மா சார்பில் சீராய்வு மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், அக்சய் குமார் மட்டும் தாக்கல் செய்யவில்லை. இந்த மனுவை விசாரிக்கக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்றுக்கொண்டது.

இந்த மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஆர் பானுமதி, அசோக் பூஷன் கொண்ட அமர்வில் நடந்து வந்தது. இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், கடந்த மே மாதம் 18-ம் தேதி தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் ஆர் பாணுமதி, அசோக் பூஷன் கொண்ட அமர்வு இன்று தீர்ப்பளித்தது. அதில் அவர்கள் கூறியிருப்பதாவது, உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மனு தாரர்கள் தங்களுக்கு எதிராக தவறான ஆதாரங்கள் இருப்பதாக ஏதும் நிரூபிக்கவில்லை. ஆதலால், வழக்கைத் தள்ளுபடி செய்து, உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்கிறோம் என உத்தரவிட்டனர்.

இதற்கிடையே நிர்பயாவின் தாய் ஆஷா தேவி இன்று மீடியாக்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், எங்களின் போராட்டம் இந்த இடத்துடன் முடிந்துவிடவில்லை. நீதி வழங்குவது தாமதிக்கப்பட்டுள்ளது. இந்த தாமதத்தால், சமூகத்தில் என் மகளைப் போல் பல மகள்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். நீதித்துறையை இன்னும் வலிமையாக்க வேண்டும் என நீதிமன்றத்தைக் கேட்டுக்கொள்கிறேன். நிர்பயாவின் சாவுக்கு காரணமாக 4 குற்றவாளிகளையும் விரைவில் தூக்கில் போட வேண்டும் மற்ற பெண்களுக்கும், சிறுமிகளுக்கும் இதன் மூலம் உதவ வேண்டும்” எனத் தெரிவித்தார்.