ஜெயா டிவிக்கு மாற்றாகத்தான் ‘நியூஸ் ஜெ’ சேனல்! – எடப்பாடி ஓப்பன் டாக்! – AanthaiReporter.Com

ஜெயா டிவிக்கு மாற்றாகத்தான் ‘நியூஸ் ஜெ’ சேனல்! – எடப்பாடி ஓப்பன் டாக்!

புரட்சித்தலைவி ஒரு சேனலை உருவாக்கி, அந்த டிவி யாரிடம் செல்லக் கூடாது என்று நினைத்தாரோ அவரிடமே சென்றுவிட்டது. அதற்கு மாற்றாகத்தான் நியூஸ் ஜெ தொடங்கப் பட்டுள்ளது.நாட்டு நடப்புகள், அரசின் நலத்திட்டங்களை உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்த அஇஅதிமுக-வுக்கு ஒரு சேனல் இல்லை என்ற குறையை நியூஸ் ஜெ தொலைக்காட்சி போக்கும் என்று முதல்வர் எடப்பாடி தெரிவித்தார்.

ஆளும் அதிமுக சார்பில் புதிதாக தொடங்கும் நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் லோகோவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர். நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் இணைய தளம் மற்றும் செயலி யையும் அவர்கள் தொடங்கி வைத்தனர். அதிமுகவின் கொள்கைகளையும், மறைந்த முதலமைச் சர் ஜெயலலிதாவின் லட்சியங்களையும் விளக்கிடும் வகையில், நியூஸ் ஜெ தொலைக் காட்சி விரைவில் தொடங்கப்பட உள்ளது. செய்தி தொலைக்காட்சி, பொழுது போக்கு தொலைக்காட்சி, இசை தொலைக்காட்சி என மூன்று பிரிவுகளில் இவை செயல்பட உள்ளன. அதன்படி, நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் லோகோ அறிமுகம், இணையதளம் மற்றும் செயலி தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ”தமிழகத்தில் பல்வேறு தொலைக்காட்சிகள் இருந்தாலும், அரசின் திட்டங்களை முழுமையாக மக்களிடம் சென்று சேர்ப்பதில்லை. எல்லா கட்சிகளுக்கும் டிவி உள்ளது. புரட்சித்தலைவி ஒரு சேனலை உருவாக்கி, அந்த டிவி யாரிடம் செல்லக்கூடாது என்று நினைத்தாரோ அவரிடமே சென்றுவிட்டது. அதற்கு மாற்றாகத்தான் நியூஸ் ஜெ தொடங்கப்பட்டுள்ளது.நாட்டு நடப்புகள், அரசின் நலத்திட்டங்களை உடனுக்குடன் மக்களுக்கு தெரியப்படுத்த அஇஅதிமுக-வுக்கு ஒரு சேனல் இல்லை என்ற குறையை நியூஸ் ஜெ தொலைக்காட்சி போக்கும்.

புரட்சித் தலைவி ஆசியோடு அரசு செயல்படுத்தும் நல்ல பல திட்டங்களும், கட்சி நிகழ்ச்சிகளும், பொதுக்கூட்டங்களும் நியூஸ் ஜெ மூலம் வெளிவர இருக்கிறது. பல தொலைக்காட்சிகள் இருந்தாலும், அரசின் நல்ல திட்டங்களை ஒரு முறைதான் காண்பிக்கிறார்கள்.எதிர்க்கட்சிகள் ஒரு குறை சொன்னால் அதை பல முறை காண்பிக்கிறார்கள். கஷ்டப்பட்டு செயல்படுத்தும் திட்டங்களை முழுமையாக காண்பிக்க நியூஸ் ஜெ உதவும். விறுவிறுப்பான செய்தி வேண்டும் என்கிறார்கள், அரசு எப்படி விறுவிறுப்பான செய்தி கொடுக்கும்?

புரட்சித் தலைவி ஜெயலலிதா மறைவுக்குப் பிறகும், தமிழக அரசு பல சாதனைகளை செய்து வருகிறது. வேளாண்துறை, மருத்துவத்துறை, உள்ளாட்சித் துறை, உயர்கல்வித்துறை, மின்துறை, போக்குவரத்துத் துறை ஆகியவை பல தேசிய விருதுகளை பெற்றுள்ளன. காவிரி நதி நீர்ப் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.சாதனைகள் மூலம் கிடைத்த விருதுகள் பற்றிய செய்திகளை குறுகிய அளவில் காட்டுகிறார்கள். எனவே, சாதனைகளை அடிக்கடி ஒளிபரப்பி மக்கள் மனதில் பதியச் செய்ய நியூஸ் ஜெ உறுதுணையாக இருக்கும். இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்குகிறது என்பதை மற்ற தொலைக்காட்சிகளும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். நியூஸ் ஜெ வெற்றி பெற வாழ்த்துகள்”இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்புரையாற்றினார்.

விழாவில் சிறப்புரை ஆற்றிய ஓ.பன்னீர்செல்வம் பேசும் போது, “எம்.ஜி.ஆர்-ஆல் உருவாக்கப்பட்டு புரட்சித் தலைவி ஜெயலலிதாவால் வளர்தெடுக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க. வின் கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் ஊடகம் ஒன்றுக்காக நீண்ட நாட்களாக, கழகத் தொண்டர்களும், தமிழக மக்களும் காத்திருந்தனர்.

அந்த வருத்தத்தை போக்கும் விதமாகவும், ஒன்றைரை கோடி தொண்டர்களையும், ஏழரை கோடி தமிழர்களின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யும் விதமாகவும் நியூஸ் ஜெ தொலைக்காட்சி தொடங்கப்பட உள்ளது. அதன் முன்னோட்டமாக நியூஸ் ஜெ தொலைக்காட்சியின் இலச்சினை, கைப்பேசி செயலி மற்றும் இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

ஒருசார்பு செய்தியைப் பார்த்து மக்கள் புளித்து போயுள்ளனர். பரபரப்புக்காக தகவல்களை திரித்து ஒரு சார்பாக செய்திகளைத் தரும் நிலையை மாற்றி, நடுநிலை மாறாமல், உள்ளது உள்ளபடி மக்கள் மத்தியில் செய்திகளை எடுத்துச் செல்லும் நிறைவான ஊடகமாக மக்கள் மனதில் நியூஸ் ஜெ தொலைக்காட்சி இடம் பிடிக்கும்.

அம்மா ஆட்சியின் போற்றத்தக்க சாதனைகளை எடுத்துச் செல்ல ஒரு தொலைக்காட்சி தேவை என்ற கனவு நனவாகப்போகிறது. எப்போது சோதனை ஓட்டம் தொடங்கும், எப்போது ஒளிபரப்பு தொடங்கும் என ஒன்றரை கோடி தொண்டர்களோடு நானும் காத்திருக்கிறேன்.

பத்தோடு பதினொன்றாக இல்லாமல், நியூஸ் ஜெ தொலைக்காட்சி சிறந்து விளங்கும். புரட்சித் தலைவி ஜெயலலிதாவின் புகழையும், அஇஅதிமுக-வின் கொள்கை, கோட்பாடுகளையும் நியூஸ் ஜெ உலகறியச் செய்யும். மக்கள் நலத்திட்டம் மற்றும் அதன் பயன்களை அனைவருக்கும் அறியச் செய்து மக்கள் பயனடைய நியூஸ் ஜெ உதவும். நியூஸ் ஜெ வளர்ச்சி பெற வாழ்த்துகள்” என்றார்.