கருப்பை புற்று நோய்க்கு புது ட்ரீட்மென்ட் !- பிரிட்டன் கண்டுபிடிப்பு – AanthaiReporter.Com

கருப்பை புற்று நோய்க்கு புது ட்ரீட்மென்ட் !- பிரிட்டன் கண்டுபிடிப்பு

பெண்கள் உடலில், கருமுட்டைகளை உருவாக்கும் கருப்பையில் ஏற்படும் புற்று நோயால், உலகளவில் லட்சக்கணக்கான பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள். இந்த வகை புற்றுநோய்க்கு கீமோதெரபி, கதீர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படும். இதன்மூலம் புற்றுநோய் கட்டிகள் அழிக்கப்படும். ஆனால் இந்த சிகிச்சையால் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படும்.பெரும்பாலும் இந்த வகை புற்றுநோயாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் கருப்பை அகற்றப்படும், இதன் மூலம் பல பெண்கள் குழந்தை பெறும் தகுதியை இழக்கும் சூழ்நிலை உருவாகிறது. இந்நி லையில் தற்போது கருப்பை புற்றுநோய்க்கு புதிய வகை சிகிச்சை முறையை பிரிட்டனில் உள்ள புற்றுநோய் ஆய்வு மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

புற்று நோய் செல்கள் அதிகளவு போலிக் அமிலத்தை (Folic acid) ஈர்க்கும் திறன் கொண்டவை. எனவே புற்று நோய் செல்களில் அதிகளவில் போலிக் அமிலத்தை உள்வாங்கும் ரிசப்டார்கள்(Receptors) அமைந்திருக்கும்.தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள புதிய மருந்தான ONX-0801, போலிக் அமிலம் போலவே செயல்பட்டு புற்றுநோய் செல்களுக்குள் நுழைந்துவிடும் ஆற்றல் கொண்டது. செல்களுல் நுழைந்த பின் புற்றுநோய் செல்களின் டி.என்.ஏ வை இவை அழித்து விடும். இதனால் புற்றுநோய் கட்டிகள் சுருங்க ஆரம்பிக்கும்.

‘‘இந்த மருந்து புற்றுநோய் செல்களை குறிவைத்து தாக்குவதால் மற்ற ஆரோக்கியமான செல்களை இந்த மருந்து பாதிக்காது. அதனால் இந்த மருந்தின் மூலம் பக்கவிளைவுகள் ஏற்படாது. இந்த கண்டுபிடிப்பால் தற்போதுள்ள கடுமையான சிகிச்சை முறைகளில் இருந்து நோயாளிகளுக்கு விடுதலை கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் சிகிச்சை பலனளிக்காத அளவு நோய் தீவிரமடைந்த நிலையில் உள்ள பெண்களுக்கும் இந்த சிகிச்சை பலனளிக்கும் ’’ என ஆய்வு பிரிவின் துணை தலைவர் உதய் பானர்ஜி தெரிவித்தார்.

இந்த மருந்தை புற்றுநோய் முற்றிய நிலையில் உள்ள 15 பெண்களுக்கு அளித்து சோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் முடிவில் 15ல் ஏழு பெண்களுக்கு புற்றுநோய் கட்டி நன்றாக சுருங்கியது. இந்த கண்டுபிடிப்பால் எதிர்காலத்தில் கருப்பை புற்றுநோய்க்கு தீர்வாக இந்த சிகிச்சை அமையும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை அடைந்துள்ளனர்.

இதனிடையே  இந்தியாவில் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் காரணமாக ஆண்டு தோறும் புதிதாக 1.32 லட்சம் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். இதில் 74  ஆயிரம்  பேர் உயிரிழக்கின்றனர். இந்த புற்றுநோயைக் கண்டறிய குறைந்த செலவில் பரிசோதனைகள் இல்லாததே இதற்கு முக்கியக் காரணமாகும். கர்ப்பப்பை வாய் புற்று நோயை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதன் மூலம் முழுமையாகக் குணப்படுத்தி உயிரிழப்பைத் தடுக்க முடியும். பெரும்பா லான வளரும் நாடுகளில் புற்றுநோயால் பெண்கள் உயிரிழப்பு என்றாலே அது கர்ப்ப வாய் புற்றுநோயாகத்தான் உள்ளது.
.
உலக அளவில் பெண்களுக்கு ஏற்படும் புற்றுநோய்களில் கர்ப்பப்பை வாய் புற்று நோய் 2-வது இடத்தைப் பிடிக்கிறது. இந்த புற்று நோய் துவக்கத்தில் அறிகுறிகள் ஏதுமின்றி காணப்படும். இதுவே அதிக எண்ணிக்கையில் பெண்கள் உயிரிழப்பதற்கு காரணமாகி விடுகிறது.முன்னரே குறிப்பிடத்து போல் உலக அளவில் கர்ப்பப்பை வாய் புற்று நோயால் ஆண்டுதோறும் 5 லட்சம் பேர் பாதிப்புக்குள்ளாவதாக தெரிய வந்துள்ளது. உரிய நேரத்தில் இந்த புற்றுநோய் கண்டறியப்படா விட்டால், பெண்கள் கருத்தரித்தல் இயலாமல் போய் விடும். ஆரம்ப நிலையிலேயே இந்நோயைக் கண்டுபிடித்தால், சிகிச்சை அளிப்பது எளிது. குணப்படுத்தி விடலாம். சிகிச்சைக்குப் பின் அந்தப் பெண் குழந்தைப் பேறு பெற முடியும். எந்த புற்றுநோயானாலும், அந்நோய் பரவாமல் தடுப்பதற்கு சிகிச்சை அளிக்கப்படும். அதேநேரத்தில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம். இந்த நோயின் பாதிப்பால் பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளுக்கே அதிகம் பாதிப்பு ஏற்படக்கூடும்.
எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படுதல், புகைப்பழக்கம் உடையோர், பால்வினை நோய் இருப்பவர்களுக்கு இந்த வகை புற்றுநோய் ஏற்படுவது மிகவும் சாதாரணமாகும்.அதுபோன்றவர்கள் வழக்கமான கர்ப்பப்பை பரிசோதனைகளை மேற்கொள்வதன் மூலம் புற்றுநோய் ஏற்படுவதைத் தவிர்க்கலாம்.