சின்னத்திரையில் விருப்பப்பட்ட சேனல்களை தேர்வு செய்து அதற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும்! – AanthaiReporter.Com

சின்னத்திரையில் விருப்பப்பட்ட சேனல்களை தேர்வு செய்து அதற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும்!

சின்னத் திரையில் DTH சேவையினை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் இனி தாங்கள் பார்க்கும் சேனல்களுக்கு மட்டும் பணம் செலுத்தினால் போதும் என ட்ராய் தெரிவித்துள்ளது!

ஒட்டு மொத்த இந்தியாவில் கேபிள் டி.வி. மூலம் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை காணக்கூடிய சாதாரண ஏழை, எளிய மக்கள் கோடிக்கணக்கானோர் உள்ளனர். மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் வருகிற 1-ந்தேதி முதல் நாடு முழுவதும் இலவச சேனல்களை மட்டும் காண முடியும் என்று அறிவித் துள்ளது. அதற்கு கேபிள் டி.வி. ஆபரேட்டர்களுக்கு 100 ரூபாய் கட்டணம் என்ற அடிப்படையில் மக்கள் வழங்க வேண்டும் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டு உள்ளது. மறுபுறம் கட்டண சேனல்களாக இருக்கக்கூடிய 400-க்கும் மேற்பட்ட சேனல்களை எம்.ஆர்.பி. முறையில் வரையறுக்கப்பட்டு ஒவ்வொரு சேனலுக்காக 20 ரூபாய் கட்டணம் செலுத்தக் கூடிய கட்டாயத்திற்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த அதிகப்படியான கேபிள் டி.வி. கட்டணத்தை உயர்த்தி மக்களின் தலையில் மாதம் ரூ.500 முதல் ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கக்கூடிய அபாயம் உள்ளது என்று தகவல் வெளியான நிலையில் இந்த புதிய விதிமுறைகளால் வாடிக்கையாளர்கள் தற்போது பார்த்து வரும் சேனல் சேவையில், எந்த விதத்திலும் இடையூறுகளைச் சந்திக்கமாட்டார்கள் என்று ட்ராய் தெளிவாகத் குறிப்பிட்டுள்ளது.

அதாவது தற்போது DTH சேவையினை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும், மாதம் ஒரு தொகுப்பான கட்டணத்தை DTH சேவைக்குச் செலுத்தி வருகின்றனர். அதில் தங்களுக்கு விருப்பமான சேனல்களும் இருக்கும், பார்க்க விரும்பாத, மொழிபுரியாத சேனல்களும் இருக்கும்.

ஆனால், இனிமேல் அவ்வாறான நடைமுறை இருக்க கூடாது என ட்ராய் அறிவுறுத்தியுள்ளது. வாடிக்கையாளர்கள் தாங்கள் எந்த சேனலைப் பார்க்க விரும்புகிறார்களோ அந்த சேனலைத் தேர்வு செய்து அதற்குரிய மாதாந்திரக் கட்டணத்தை மட்டும் செலுத்தினால் போதுமானது. இதற்காக ஒளிபரப்பாளர்கள் ஒவ்வொரு சேனலின் தனிப்பட்ட மாதாந்திர வாடகை விவரத்தையும், ஒட்டுமொத்த மாதாந்திர விவரத்தையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும் என்று அது தெரிவித்துள்ளது.

இது குறித்து ட்ராய் வெளியிட்ட அறிவிப்பில், “டிசம்பர் 29-ஆம் தேதிக்குப் பின்னர் TRAI-ன் புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தால், ஏற்கெனவே மக்கள் பார்த்துக்கொண்டிருக்கும் பல்வேறு சேனல்கள் சேவை நிறுத்தப்படும் என்ற செய்தி ஊடகங்களில் வெளிவருகிறது. TRAI-ன் புதிய விதிகளின் படி தற்போது வாடிக்கையாளர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் சேனல்களில் எதையுமே 29-ம் தேதிக்குப் பின்பு துண்டிக்கக் கூடாது.

வாடிக்கையாளர்களின் நலன் கருதி DTH மாதாந்திர கட்டண விவரத்தை எளிதாக TRAI மாற்றி அமைத்துள்ளது. இந்த மாதாந்திர வாடகைத் திட்டம் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையான சேவையை மட்டும் தேர்வு செய்து பயன் படுத்திக்கொள்ள அருமையான வாய்ப்பாகும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான கூடுதல் கட்டணம் விதிக்கப் படாது.

பேக்கேஜ்களை பொறுத்தமட்டில் 100 சேனல்களுக்கு அதிகபட்சமாக ரூ.130 வரை கட்டணமாக வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கலாம். இதில் இலவச ஏர் சேனல், கட்டணம் செலுத்தி பார்க்கும் சேனல் அல்லது இரண்டும் சேர்த்ததாகக் கூட இருக்கலாம். ஒருவேளை கட்டணம் செலுத்திப் பார்க்கும் சேனலாக இருந்தால், கூடுதல் தொகையை வாடிக்கையாளர்கள் செலுத்த வேண்டியது இருக்கும்.

இந்தப் புதிய விதிமுறையின்படி வாடிக்கையாளர்கள் தங்களுக்கு தேவையில்லாத சேனல்களைப் பார்க்கும் வகையில் வற்புறுத்தத் தேவையில்லை. தங்களுக்கு விருப்பப்பட்ட சேனல்களை மட்டும் தேர்வு செய்து அதற்கு மட்டும் பணம் செலுத்தினால் போதுமானது, என குறிப்பிட்டுள்ளது.

புதியதாக DTH சேவையினை பெற விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு, DTH உபகரணங்கள் சேவைதொடக்க கட்டணம் ரூ.500 மிகாமல் வசூளிக்க வேண்டும் எனவும் TRAI குறிப்பிட்டுள்ளது, அதாவது இன்ஸ்டாலேசன் சார்ஜ் 350-க்கு மிகாமலும், ஆக்டிவேசன் சார்ஜ் 150-க்கு மிகாமலும் வசூலிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டள்ளது.