திராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது! – ஆய்வு முடிவு! – AanthaiReporter.Com

திராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது! – ஆய்வு முடிவு!

நம் நாட்டில் இன்றைய சூழ்நிலையில் 1,700 மொழிகள் பேசப்படுவதாக சில ஆண்டுகளுக்கு முன் கணக்கிடப்பட்டிருந்தது.. இவற்றில் பல தனிமொழிகளாகவும், சில கிளை மொழிகளாகவும் உள்ளன. இந்தியாவில் வழங்கி வரும் மொழிகளை, 1. இந்தோ ஆரியமொழிகள்(இந்தோ ஐரோப்பிய மொழிகள்), 2. திபெத்தியபர்மிய மொழிகள், 3.ஆஸ்டிரிக் மொழிகள், திராவிட மொழிகள் என, மூவகையாக பிரிப்பர். இதில் இந்தோ ஆரிய மொழிகளை 73 சதவீதத்தினரும், திராவிட மொழிகளை 25 சதவீதத்தினரும் பேசுகின்றனர். “திராவிடம்’ என்ற சொல் நீண்ட காலமாக வழங்கி வருகிறது. மொழியியல் அறிஞர் கால்டுவெல் தென்னிந்திய மொழிகளைக் குறிப்பதற்கு இச்சொல்லைப் பயன்படுத்தினார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் முதலிய மொழிகளை திராவிட மொழிகள் என அழைத்தார். தென்னிந்திய பேச்சு மொழிகளைக் குறிக்கும் போது, வட மொழி ஆய்வாளர்கள் “திராவிடி’ என்ற சொல்லால் குறிப்பிட்டனர். தற்காலத்தில் 23க்கும் அதிகமான மொழிகள், திராவிட மொழிகள் என அழைக்கப்படுகின்றன. அவையாவன, 1.தமிழ், 2.மலையாளம், 3.கன்னடம், 4.தெலுகு, 5.கோண்டி, 6.குரூக், 7.துளு, 8.கூயி, 9.பிராகூய், 10.கூவி, 11.கோயா, 12.மால்தோ, 13.குடகு, 14.கோலாமி, 15.பர்ஜி, 16.கொண்டா(கூபி), 17.கதபா, 18.நாயக்கி, 19.பெங்கோ, 20.கோத்தா,21.தோடா, 22.மண்டா, 23.கொரகா என்பனவாகும்.

இவற்றுள், தமிழ், மலையாளம், கன்னடம், குடகு, துளு, தோடா, கோத்தா, கொரகா என்ற எட்டு மொழிகளும் தென்திராவிட மொழிகள்; தெலுகு, கோண்டி, கோயா, கூயி, கூவி, கோலமி, பர்ஜி, கதபா, கொண்டா, நாயக்கி, பெங்கோ, மண்டா என்ற 12 மொழிகளும் நடுத்திராவிட மொழிகள்; குரூக், மால்தோ, பிராகூய் என்ற மூன்றும் வட திராவிட மொழிகள் என்ற பகுப்பில் உள்ளடங்குகின்றன என்றெல்லாம் ஏற்கெனவே தகவல்கள் வெளியான நிலையில் நம் இந்தியாவில் சுமார் 22 கோடி மக்களால் பேசப்படும் திராவிட மொழி குடும்பம் 4,500 ஆண்டுகள் பழமையானது என்று அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த மானிட வரலாற்று அறிவியல் ஆய்வகமான மேக்ஸ் பிலாங்க் இன்ஸ்டிடியூட் மற்றும் இந்தியாவின் டேராடூனில் உள்ள ஆய்வு நிலையம் ஆகியவை சேர்ந்து உலக மொழிகளின் பழமை குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு குழுவினர் திராவிட கிளை குடும்பங்களில் தங்களது தாய்மொழியை பேச்சுவழக்கில் கொண்டுள்ள ஏராளமான மக்களை நேர்காணல் செய்தனர். அதன் மூலம் தமிழ், கன்னடம், மலையாளம், மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளின் இலக்கியத்தின் பாரம்பரியம் பல நூற்றாண்டுகளாக உள்ளன. இதில் தமிழ் மொழி மிகவும் பழமைவாய்ந்த மொழி என்றும் கூறியுள்ளனர்.

உலகின் தொன்மை மிக்க செம்மொழியாக தமிழ் விளங்கி வருவதாகவும், காலப்போக்கில் அழிந்து போகாமல் பண்டைய காலத்திற்கும் நவீன யுகத்திற்கும் இடையில் இணைப்பு பாலமாக உள்ளது. செய்யுள்கள், கவிதைகள், மதசார்பற்ற மற்றும் பக்திசார்ந்த உரைநடைகள், இலக்கியங்கள், பாடல்கள் ஆகியவை தமிழ்மொழியில் எழுத்து வடிவில் இருந்து வருவதாகவும் இந்த ஆய்வு குழுவினர் பதிவு செய்துள்ளனர்.

இதன் மூலம் தென்னிந்தியா மற்றும் இந்தியாவின் மத்திய பகுதிகளிலும் அருகாமையிலும் உள்ள நாடுகளிலும் 80 மொழி வகைகளாக சுமார் 22 கோடி மக்களால் பேசப்பட்டுவரும் திராவிட மொழி குடும்பம் சுமார் 4500 ஆண்டுகள் பழமையானது என்பதை இந்த ஆய்வின் முடிவில் கண்டுபிடித்துள்ளனர். திராவிட மொழியின் தோற்றக்காலம் குறித்து கூற இயலாவிட்டாலும், தற்போது இருப்பதைவிட முந்தைய காலக்கட்டத்தில் மேற்கத்திய நாடுகளில் திராவிட மொழிகள் அதிகமாக பரவியதாகவும் இவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

திராவிட மொழி குடும்பம் 4000 முதல் 4500 ஆண்டுகள்வரை பழமையானது என்பதை உறுதிப்படுத்தும் வகையில் தொல்லியல் ஆதாரங்களும், திராவிட பாரம்பரியம் மற்றும் கலாச்சார மேம்பாடுகளில் ஆரம்ப காலகட்டமும் ஒத்துப்போவதாகவும் இக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் மூலம் சுமார் 3,500 ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோ-ஆரியர்கள் (இந்தோ-ஐரோப்பிய மொழி பேசியவர்கள்) எனப்படும் ஆரியர்களின் வருகைக்கு முன்னதாகவே இந்திய துணை கண்டத்தில் திராவிட இன மக்கள் பூர்வகுடிகளாக இருந்துள்ளனர் என்பது மீண்டும் ஒருமுறை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.