கடந்த 3 ஆண்டுகளில் 23,000 கோடீஸ்வர இந்தியர்கள் இந்திய குடியுரிமை துறப்பு!

கடந்த 3 ஆண்டுகளில்  23,000 கோடீஸ்வர இந்தியர்கள் இந்திய குடியுரிமை துறப்பு!

உள்ளதை உள்ளபடிச் சொல்லும் பத்திரிகைகளில் முக்கியமானதான போர்ப்ஸ் இதழ் 2018-ம் ஆண்டின் உலகின் கோடிஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டு இருந்தது. அந்த பட்டியலில் 121 இந்தியர்கள் உள்ளனர் என்றும் கடந்த வருடம் இந்த பட்டியலில் 102 பேர் இருந்தனர் என்று சொல்லி இருந்த நிலையில் சுமார் 23,000 கோடீஸ்வர இந்தியர்கள் 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு தங்களது குடியுரிமையைத் துறந்து விட்டதாக நிதிச் சேவை நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி நிறுவனத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது. இதில் 2017ஆம் ஆண்டில் மட்டும் 7,000 பணக்காரர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளது.

இந்தப் போக்கு குறித்து எச்சரிக்கை கொண்ட மத்திய நேரடி வரிகள் வாரியம், மார்ச் மாதத்தில் ஐந்து பேர் அடங்கிய குழு ஒன்றை அமைத்துள்ளது. சமீப காலமாக தொடர்ந்து கோடீஸ்வரர்கள் இந்த இந்தியாவின் வரி வளையத்தை விட்டு வெளியேறுவது குறித்தும் பொருளாதாரத்தில் அதன் தாக்கம் குறித்தும் மதிப்பிட இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள குறிப்பில், “சமீப காலங்களாக, அதிக செல்வம் படைத்த நபர்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குக் குடிபெயரும் போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் வரி முறையில் பெரும் ஆபத்து இருக்கிறது. அந்நபர்களுக்கு இந்தியாவுடன் தனிப்பட்ட மற்றும் பொருளாதார உறவுகள் இருந்தாலும் கூட, வரி விதிப்பு முறையைக் கையாளத் தன்னை வெளிநாடு வாழ் இந்தியர்களாகக் காட்டிக்கொள்கின்றனர்” என்று தெரிவித்துள்ளது.

அண்மையில் பல செல்வம் படைத்த நபர்களும் வெளிநாடுகளுக்குக் குடிபெயர்ந்து விடுகின்றனர். சமீபத்தில் ரியல் எஸ்டேட் தொழிலதிபரும், ஹிரானந்தனி குழுமத்தின் துணை நிறுவனருமான சுரேந்திர ஹிரானந்தனி வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். 63 வயதான ஹிரானந்தனி, மத்திய தரைக்கடலில் உள்ள தீவு நாடான சிப்ரஸில் குடியுரிமை பெறத் தன்னுடைய இந்திய பாஸ்போர்ட்டைத் துறந்துவிட்டார். இந்தப் போக்கு தொடர்ந்து வருவதால் இதுகுறித்து ஆய்வு செய்ய மத்திய நேரடி வரிகள் வாரியம் இக்குழுவை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!