மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி! – AanthaiReporter.Com

மாநிலங்களவைத் துணைத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் வெற்றி!

மாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தலில் நீண்ட காலத்துக்கு பின்னர் பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் 20 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பாராளுமன்றத்தின் மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த பி.ஜே.குரியன் கடந்த ஜூலை மாதம் 1ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார். தற்போது காலியாக இருக்கும் அந்த பதவிக்கு நடப்பு கூட்டத்தொடரில் தேர்தல் நடத்த முடிவுசெய்யப்பட்டு, தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப் பட்டது.துணைத் தலைவர் பதவிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் ஹரிவன்ஷ் நாராயண் சிங்கும் எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் உறுப்பினர் பி.கே.ஹரிபிரசாத்தும் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மாநிலங்களவையில் தனிப்பெரும் கட்சியாக பாஜக இருந்தபோதும், அங்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு போதிய பலம் இல்லை. எனவே பிராந்திய கட்சிகளின் ஆதரவை பெற பாஜக முனைப்பு காட்டியது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தலைமையில் உறுப்பினர்களிடையே வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில், பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் 125 வாக்குகள் பெற்றார். எதிர்க்கட்சி வேட்பாளர் ஹரிபிரசாத் 105 வாக்குகள் பெற்றார். இதனால் ஹரிவன்ஷ் 20 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

பிரதமர் மோடி வாழ்த்து

ஹரிவன்ஷ்-க்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ட்விட்டரில்,”மாநிலங்களவை துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஹரிவன்ஷ் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சிறந்த பாராளுமன்ற உறுப்பினர், எழுத்தாளர், பத்திரிக்கையாளரான அவர் அவையின் நடவடிக்கைகளை மேலும் வலுபடுத்துவார் என முழுமையாக நம்புகிறேன். அவருக்கு ஆதரவு அளித்த மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.