45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2017-2018ஆம் ஆண்டில் வேலையில்லாதோர் விகிதம் அதிகரிப்பு!

45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2017-2018ஆம் ஆண்டில் வேலையில்லாதோர் விகிதம் அதிகரிப்பு!

இந்தியாவில் வேலையின்மை விகிதம் 2016- ம் ஆண்டில் 17.7 மில்லியன் ஆக இருந்தது. 2017-ம் ஆண்டில் இது 17.8 மில்லியனாகவும், 2018-ம் ஆண்டில் 18 மில்லியனாகவும் அதிகரிக்கும் என கடந்த ஆண்டே ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்திருந்த தகவலை அரசு உதாசினப்படுத்தி விட்டது. இதனிடையே நம் நாட்டில் தற்போது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 2017-2018ஆம் ஆண்டில் வேலையில்லாதோர் விகிதம் அதிகரித்துள்ளதாக, தேசிய மாதிரி புள்ளியியல் ஆய்வு அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நம்  இந்தியா திருநாட்டில்  வேலை யில்லாத்  திண்டாட்டம் பெரும் பிரச்சினையாக உள்ளது.. இது ஆண்டு தோறும் அதிகரித்த வண்ணம் இருக்கும் நிலையில் வளர்ந்து வரும் நாடுகளில் வேலையின்மை விகிதம் 3.6 மில்லியன் ஆக உள்ளது. அதே சமயம் வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருக்கும் நாடுகளில் இரண்டு பேரில் ஒருவர் வேலையில்லாமல் உள்ளனர். இந்தியா போன்ற நாடுகளில் ஐந்தில் இரண்டு பேர் வேலையில்லாமல் உள்ளனர். ஆனால் தற்போது அதிர்ச்சியூட்டும் அளவிலான ஒரு தகவல் அறிக்கையை வெளியிட மத்திய அரசு தாமதப்படுத்துவதாக கூறி, தேசிய புள்ளிவிவர ஆணைய உறுப்பினர் பதவியில் இருந்து, பி.சி.மோகனன், ஜே.வி.மீனாட்சி ஆகியோர் பதவி விலகிய நிலையில், Business Standard செய்தி நிறுவனம் இதனை வெளியிட்டு விட்டது.

அதன்படி, 2017-2018-ஆம் நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், வேலைவாய்ப்பின்மை 6.1 சதவிகிதமாக உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 1972-ஆம் ஆண்டு மட்டுமே இதே போல 5 சதவிகிதத்திற்கும் அதிகமாக நாட்டில் வேலைவாய்ப்பின்மை நிலவியது.

தற்போது வெளியாகியுள்ள அறிக்கையின்படி, 2017-18-ஆம் நிதியாண்டில் நகரங்களில் வேலை யில்லாத ஆண்களின் விகிதம் 18.7 சதவிகிதமாகவும், பெண்களின் விகிதம் 27.2 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் வேலையில்லாத ஆண்களின் விகிதம் 17.4 சதவிகிதமாகவும், பெண்களின் விகிதம் 13.6 சதவிகிதமாகவும் அதிகரித்துள்ளது.

பணமதிப்பிழப்பு அறிவிப்பிற்கு பின் மேற்கொள்ளப்பட்ட முதல் அதிகாரப்பூர்வ ஆய்வில், வேலை வாய்ப்பின்மை உயர்ந்தது குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.மேலும் இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் எனப்படும் அமைப்பு, கடந்த ஆண்டில் ஒரு கோடியே பத்து இலட்சம் வேலைவாய்ப்பு இழப்பு ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

error: Content is protected !!