சர்வதேச அளவில் முதல்முறையாக ‘சமோசா வாரம்’ – இங்கிலாந்தில் கொண்டாட்டம்! – AanthaiReporter.Com

சர்வதேச அளவில் முதல்முறையாக ‘சமோசா வாரம்’ – இங்கிலாந்தில் கொண்டாட்டம்!

நம் கண்ணில் படும் எல்லா டீக்கடைகளிலும் சமோசா- என்ற தின்பண்டமும் இருப்பது வாடிக்கையாகி விட்டது. அதிலும்.’மூணு பத்து ரூபா’ என தக்கணுண்டு சைஸில் பேப்பர் கவரில் விற்கப்படுவது தொடங்கி, உள்ளங்கை கொள்ளாத சைஸ் வரை விதவிதமான வகைகள் உண்டு எல்லா இடங்களிலும்ம் எல்லா நேரங்களிலும் கிடைக்கும் விஷயமாகி விட்டது. அதிலும் கொஞ்சம் மிடில் கிளாஸ் சினிமா தியேட்டர்களில் இடைவேளையில் சமோசா கடித்தப்படியே, டீ குடித்த தமிழ் ரசிகர்கள் அதிகம். மதுரைப் பக்கம் வெதுவெதுப்பான சூட்டில் வெங்காய மசாலா வைத்துப் பரிமாறப்படும் `சமோசா’, அலாதிச் சுவைகொண்டது. சென்னை சௌகார்பேட்டை பகுதியில் மொறு மொறு சுவையுடன் பச்சைச் சட்னி, சாஸுடன் கிடைக்கும் வட இந்திய வகைக்கு, பிரத்யேக ரசிகர்கள் இருக்கிறார்கள். சென்னையில் பல இடங்களில் சமோசா-சுண்டல் காம்பினேஷனை கேட்டு வாங்கி உண்பர்கள் எக்க்சக்கம். `

`சமோசா’- ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பகுதியிலும் அழைக்கப்படும் இதன் பெயர் குறித்து . சமஸ்கிருதத்தில், `கட்டக்கா’, பெங்காலியில் `ஷிங்காரா’, உஸ்பெஸ்கிஸ்தானில் `சொம்சா’, அரபியில் `சம்புசாக்’, பர்மிய மொழியில் `சமோஷா’! சப்பாத்திக்கு இடுவது மாதிரி, கோதுமை மாவை (மைதாவும் இப்போது சேர்க்கப்படுகிறது) இட்டு, அதில் மசாலா வைத்து முக்கோணமாக மடித்துப் பொரித்து எடுத்தால், அது சமோசா. சைவம் எனில் மசாலாவில் வேகவைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி, பச்சைமிளகாய், வெங்காயம், இன்னும் சில வாசனைப் பொருள்கள் கலந்தும் மசாலா தயாரிக்கிறார்கள். அசைவம் எனில், இறைச்சியில் செய்யப்பட்ட மசாலா! இந்தியாவில் பெரும்பாலும் சைவ சமோசாதான் புழக்கத்தில் இருக்கிறது.

கடந்த எட்டு நூற்றாண்டுகளாக தெற்காசிய சமையலில் சமோசா வெகு பிரபலம். என்றாலும், `இதன் பூர்வீகம் எது?’ என நோண்டிப் பார்த்தால், மத்தியக் கிழக்கு நாடுகளைத்தான் காட்டுகிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். ஈரானிய வரலாற்றியலாளர் அபுல்ஃபாஸல் பேஹாக் (Abulfazl Beyhaqi), `தாரிக்-ஏ பேஹாக்’ (Tariq-e Beyhaqi) என்ற வரலாற்று நூலில், 10-ம் நூற்றாண்டுக்கு முன்னரே சமோசா இருந்ததைக் குறிப்பிட்டிருக்கிறார். 13, 14-ம் நூற்றாண்டில்தான் வியாபாரிகள் மூலமாக இந்தியாவுக்குள் மூக்கை நுழைத்திருக்கிறது சமோசா. அப்படி அல்ல… டெல்லி சுல்தான்களுக்காக சமைக்க வந்த மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளைச் சேர்ந்த சமையல்காரர்கள்தான் இதை அறிமுகப்படுத்தினார்கள் என்றும் சொல்கிறார்கள்.

டெல்லி சுல்தான்கள் சபையில் இருந்த அரசவைக் கவிஞர் அமிர் குஸ்ரோ (Amir Khusro), உலகைச் சுற்றிவந்த யாத்ரீகர் இபின் பதூதா (Ibn Battuta)… எனப் பலரும் சமோசா பற்றிய குறிப்பை எழுதிவைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். முகமது பின் துக்ளக்கின் அரண்மனைச் சமையலில் சமோசாவுக்கும் இடம் இருந்ததாகச் சொல்கிறார் இபின் பதூதா.

ஆரம்பத்தில் படைவீரர்கள், வியாபாரிகள், ஊர் ஊராகப் பயணம் செய்கிறவர்கள் இரவில் தங்க நேரிடும்போது, சமோசாக்களை செய்து வைத்துக் கொள்வார்களாம். அடுத்த நாளில் பகல் உணவுக்கு உபயோகப்படும் என்பதற்காக இந்த ஏற்பாடு. அரசர்கள், சுல்தான்களுக்கு மட்டுமல்ல… சாமான்யர்களுக்கும் பிடித்த நொறுக்குத் தீனி சமோசா. இந்தியாவில் இது அறிமுகமானபோது, உத்தரப்பிரதேச மாநில மக்கள், அதை சைவ வடிவத்துக்கு மாற்றி ஏற்றுக் கொண்டார்கள். சில நூற்றாண்டுகளிலேயே சமோசா இந்தியாவில் பிரபலமாகிவிட்டது. வட இந்தியாவில் சமோசா மாவுக்குப் பெரும்பாலும் மைதாவைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

வட இந்தியாவில் சில நகரங்களிலும் பாகிஸ்தானிலும் அசைவ சமோசா வெகு பிரபலம். ஆடு, மாடு, கோழி இறைச்சிகளை ஸ்டஃபிங்கில் சேர்க்கிறார்கள். பஞ்சாப்பில் சமோசாவுடன் சென்னா பரிமாறப்படுகிறது. மும்பையில், `சமோசா பாவ்’ பிரசித்திபெற்ற ஒன்று. பன்னில் வைத்துத் தரப்படும் இதை `இந்தியன் பர்கர்’ என்றுகூடச் சொல்லலாம். தீபாவளிப் பண்டிகையின்போது வட இந்தியாவில் சில இடங்களில் இனிப்பு சமோசா தயாரித்து, பரிமாறும் வழக்கம் இன்றைக்கும் இருக்கிறது.

இதனிடையே இங்கிலாந்தின் லீசெஸ்டரில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். இங்குள்ள சமோசா ரசிகர் மன்றத்தினர் இந்தியாவின் புகழ்பெற்ற சிற்றுண்டியான சமோசாவை கொண்டு அற்புதமான ஒரு நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டுள்ளனர்.இதன்படி, முதல் முறையாக அடுத்த மாதம் தேசிய சமோசா வாரம் கொண்டாடப்பட உள்ளது. 9 முதல் 13ம் தேதி வரை சமோசா வாரம் கடைப்பிடிக்கப்படும். அந்த வாரம் முழுவதும் சமோசா விற்பனை, தயார் செய்வது மற்றும் சமோசா விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் அறக்கட்டளைக்கு வழங்கப்பட உள்ளது. இங்கிலாந்தில் சமோசா வாரம் கொண்டாடப்படுவது இதுவே முதல் முறை.