ஸ்டெர்லைட்: தமிழக அரசு ஆலையை மூட பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது!- தேசிய பசுமை தீர்ப்பாயம் – AanthaiReporter.Com

ஸ்டெர்லைட்: தமிழக அரசு ஆலையை மூட பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க முடியாது!- தேசிய பசுமை தீர்ப்பாயம்

100 நாள் தொடர் போராட்டம் மற்றும் 13 பேர் சுட்டு கொலைக்குப் பின்னர் ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு இடைக்கால தடைவிதிக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று மறுத்துவிட்டது. தமிழக அரசு பிறப்பித்த அரசாணைக்கு தடை கோரி ஸ்டெர்லைட் ஆலை தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கக் கோரி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பும்படி தேசிய பசுமை தீர்ப்பாயம் இன்று உத்தரவிட்டது. ஸ்டெர்லைட் ஆலையின் மனு மீதான விசாரணையை ஜூலை 17 ஆம் தேதிக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் ஒத்திவைத்தது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம் மற்றும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களை தொடர்ந்து அந்த ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. பின்னர், அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதை எதிர்த்து டில்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகமான வேதாந்தா குழுமம் நேற்று மனு தாக்கல் செய்தது.

அந்த மனுவில்,”ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு தமிழக அரசு கடந்த மே மாதம் 28ந்தேதி பிறப்பித்த உத்தரவு சட்டத்துக்கு புறம்பானது. ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்துக்கு புகார்களூக்கு விளக்கம் அளிக்க போதிய வாய்ப்பு அளிக்கப்படவில்லை. திடீரென்று ஆலை மூடப்பட்டதால் அங்கு பணியாற்றி வந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத வகையில் ஸ்டெர்லைட் ஆலை இயக்கப்பட்டு வந்தது” என ஸ்டெர்லைட் ஆலை தாக்கல் செய்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும்,”இந்த வழக்கில் இறுதி தீர்ப்பு வரும்வரை, ஆலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள இடைக்கால அனுமதி வழங்க வேண்டும்” என்றும் அந்த மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

இந்த மனு தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் நீதிபதிகள் ஜவாத் ரஹீம், ரகுவேந்திர எஸ்.ரத்தோர், சத்யவான் சிங் கர்ப்யால் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஸ்டெர்லைட் ஆலை மூடுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுப்பு தெரிவித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், 10 நாட்களுக்குள் இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என கூறி, வரும் ஜூலை 17ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தது.