விஐபி கலாச்சாரத்தை அனைவரும் கைவிட வேண்டும்!- பிரதமர் மோடி பேச்சு! – AanthaiReporter.Com

விஐபி கலாச்சாரத்தை அனைவரும் கைவிட வேண்டும்!- பிரதமர் மோடி பேச்சு!

பார்லிமெண்ட் தேர்தலில் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது. இதை அடுத்து டெல்லியில் தேசிய ஜனநாயக் கூட்டணி எம்.பி.க்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் பா.ஜ.க. நாடாளுமன்ற குழு தலைவராக பிரதமர் மோடியின் பெயரை அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் முன்மொழிந்த னர். இந்த கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள், பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜக எம்.பிக்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

இதன் பின் உரையாற்றிய மோடி, “இந்திய அரசிலமைப்பிற்கு தலைவணங்கிய பின் உங்கள் முன் பேசுகிறேன் முந்தையை தேர்தலில் பெற்ற சாதனையை நாமே இந்த மக்களவை தேர்தலில் முறியடித்துள்ளோம். நம்மை நம்பியவர்களுக்கு மட்டுமன்றி நம் மீது நம்பிக்கை இல்லாதவர் களுக்கும் சேர்த்து தான் நாம் இங்கு கூடியுள்ளோம். நம் அனைவரின் நோக்கம் தேசத்தின் வளர்ச்சி மீது தான் இருக்க வேண்டும். அதுவே நமது முழக்கமாகவும் இருக்க வேண்டும். அதிகாரத்தில் இருக்கும் போது மக்களுக்கு சேவை புரிவதை விட சிறந்த பாதை இல்லை.

பொதுவாக தேர்தல் மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்தும். ஆனால் 2019ம் ஆண்டு தேர்தல் மக்களை ஒருங்கிணைத்துள்ளது. ஆட்சியில் இருந்தவர்கள் மீதான நம்பிக்கை அலை இந்த தேர்தலில் காண முடிந்தது. கூட்டணி தலைவர்கள் அனைவரும் ஊடகம் முன்பு பேசும் போது நிதானத்தை கடைபிடிக்க வேண்டும். சிலர் விளம்பரத்துக்காக பேசும் விஷயங்கள் பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அதை தவிர்க்க வேண்டும்.

அமைச்சர் பதவிக்கு சிலரது பெயர்கள் பரிந்துரைக்கப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி வருகிறது. அதை நம்ப வேண்டாம். ஒருவரின் தகுதி அடிப்படையில் தான் அவருக்கு பொறுப்புகள் வழங்கப்படும்.

விஐபி கலாச்சாரத்தை அனைவரும் கைவிட வேண்டும். தேவைப்படும் இடங்களில் மக்களுடன் மக்களாக வரிசையில் நிற்க வேண்டும். நாம் ஏழை மக்களுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆட்சி செய்தோம். அதனால் ஏழை மக்கள் மீண்டும் இந்த் அரசை தேர்ந்தெடுத்துள்ளனர்.

வாக்கு வங்கிக்காக அரசியல் செய்பவர்கள் பரப்பிய பொய் பிரச்சாரத்தால் சிறுபான்மையினர் பயத்துடன் வாழும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த தவறான பிம்பத்தை நாம் உடைக்க வேண்டும். அனைவரையும் ஒன்றாக வளர்ச்சி நோக்கி கொண்டு செல்ல வேண்டும்” என மோடி தெரிவித்தார்.

முன்னதாக டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் அலுவலக ஊழியர்கள் மத்தியில் பேசிய நரேந்திர மோடி, ‘‘என்னுடன் 5 ஆண்டுகள் குடும்ப உறுப்பினர்களாக இருந்து கடினமாக உழைத்த அலுவலக ஊழியர்களுக்கு நன்றி. அரசின் பொறுப்புகளை உணர்ந்து ஊழியர்கள் அனைவரும் தங்கள் கடமைகளை சிறப்பாக செயல்படுத்தினீர்கள். குடும்பத்தையும் மறந்து நேரம் காலம் பார்க்காமல், பணி புரிந்தீர்கள். பிரதமர் அலுவலகம் திறமையாக செயல்பட வேண்டும் என்பதே தனது விருப்பம். இந்தத் தேர்தல் வெற்றி மூலம் திறமையான செயல்பாடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத் திறமை மிக்க தலைமையே வெற்றிக்கு வழிகாட்டும் திறவுகோல். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றிக்கு ஆற்றல் வாய்ந்த தலைமையே காரணம். அடுத்த 5 ஆண்டுகள் சிறப்பாக அமையும் வகையில் செயல்படுவோம். கூட்டு தலைமைக்கு முக்கியத்துவம் அளித்து புதிய திட்டங்களை நிறைவேற்றுவோம்’’ என்று பேசினார் மோடி.

பிரதமர் மோடியின் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதன்மை செயலாளர் நிர்பேந்திர மிஸ்ரா, கூடுதல் முதன்மை செயலாளர் பி.கே. மிஸ்ரா, பிரதமரின் செயலாளர் பாஸ்கர் குல்பே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.