மோடி ‘இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்’ – சர்ச்சையை கிளப்பிய டைம் இதழ்! – AanthaiReporter.Com

மோடி ‘இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்’ – சர்ச்சையை கிளப்பிய டைம் இதழ்!

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் டைம் பத்திரிக்கை, ‘இந்திய பிளவு சக்திகளின் தலைவர் மோடி’ என்ற பெயரில் வெளியான ஒரு கட்டுரை இந்திய அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கட்டுரையை இந்திய பத்திரிகையாளர் தவ்லீன் சிங்கின் மகன் ஆதிஷ் தசீர் எழுதி உள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு மோடி குறித்து முதன் முறையாக கட்டுரை வெளியிட்ட டைம் இதழ், அதில் அவரை புகழ்ந்து எழுதியிருந்தது. ஆனால், தற்போது மோடியின் கொள்கைகளை விமர்சிக்கும் வகையில் கட்டுரை வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் உலகப் புகழ் பெற்ற டைம் பத்திரிக்கை, மே 20-ம் தேதியிட்ட இதழில், பிரதமர் மோடி குறித்து கட்டுரை வெளியிட்டுள்ளது. அதன் அட்டைப் படத்தில், பிரதமர் மோடி காவித் துண்டுடன் இருக்கும் மிகவும் ஒரு அழுத்தமான ஓவியம் இடம் பெற்றுள்ளது. மேலும், இந்தியாவின் பிரித்தாளும் தலைவர்’ என வாசகம் அதில் இடம்பெற்றுள்ளது. அதில், ‘இந்தியாவில் கொடிய மதவாத சூழல் உருவாக மோடி உதவியுள்ளார். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத மோடி, மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி விட்டார். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, மோடி அரசின் மற்றொரு 5 ஆண்டு கால ஆட்சியை தாங்குமா? என ஆதிஷ் தசீர் விமர்சித்துள்ளார்

இதுதவிர, ஐந்து ஆண்டுகளும் மோடியின் ஆட்சியை சகித்துக் கொள்ளுமா? என்று துணை தலைப்பையும் வைத்துள்ளது. மோடி குறித்த கட்டுரையில், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் மதசார்பற்ற கொள்கை; இந்தியாவில் இணக்கமான சமூகத்தை உருவாக்கியது, இந்து – இஸ்லாமிய மதத்தினருக்கு இடையே இருந்த சகோதரத்துவத்தை மோடியின் கொள்கைகள் தரைமட்டமாக்கியது என எழுதப்பட்டுள்ளதுதான் சர்ச்சையை கிளப்பியுள்ளது.