ஒடிசாவில் டீ விற்பனை செய்து வரும் முதியவரை பாராட்டிய பிரதமர் மோடி! காரணம் என்ன தெரியுமா?

ஒடிசாவில் டீ விற்பனை செய்து வரும் முதியவரை பாராட்டிய பிரதமர் மோடி! காரணம் என்ன தெரியுமா?

பிரதமர் மோடி ரேடியோவில் மனதின் குரல் என்ற பெயரில் பேச வேண்டிய விஷயங்களை பொது மக்களே ஆன் லைனில் சொல்லுவது வழக்கம். அந்த வகையில் ஒடிசாவைச் சேர்ந்த டீ விற்பனை செய்யும் முதியவர் ஒருவர் குறித்து பிரதமர் மோடி தனது மான்-கி-பாத் வானொலி நிகழ்ச்சியில் புகழாரம் சூட்டியுள்ளார். எதற்காக பிரதமர் அவரை பாராட்டினார் என்பதை தெரிந்து கொள்வோமா?

ஒடிசா மாநிலத்தின் கட்டாக் நகரில் உள்ள பக்ஸி பஜார் எனும் குடிசைப் பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் ராவ், இவர் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக டீ விற்பனை செய்து வரும் ஒரு எளிமையான மனிதர் ஆவார். டீ விற்பனை செய்து கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தனது குடும்பத்தினரின் செலவுகளோடு சேர்த்து தனது சுய முயற்சியில் 70 குழந்தைகளுக்காக ஒரு பள்ளி தொடங்கி அவர்களுக்கு கல்வி போதித்து வருகிறார் பிரகாஷ் ராவ். அவரின் வருமானத்தில் 50% அக்குழந்தைகளின் கல்விக்காக இவர் செலவிட்டு வருகிறார்.

கடந்த சனிக்கிழமையன்று ஒரிசாவில் உள்ள கட்டாக் நகருக்கு சென்ற பிரதமர் மோடி, ராவ் குறித்த கேள்விப்படவே அவரை நேரில் சென்று சந்தித்துள்ளார். அவரின் முயற்சியை வெகுவாக பாராட்டினார்.

இந்நிலையில், நேற்று வானொலியில் உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக டீ விற்பனை செய்து வரும் பிரகாஷை தான் நேரில் சந்திக்கும் நல்ல சந்தர்ப்பம் அமைந்ததாகவும், தன்னுடைய கடின முயற்சியால் 70 குழந்தைகளுக்கு கல்வி அளித்து வருவதோடு அவர்களுக்கான உணவு உள்ளிட்ட தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படச் செய்து வருகிறார் என புகழ்ந்தார்.

பிரகாஷ் டீ விற்று கிடைத்த தன் சொந்தப் பணத்தில் ஏழைக்குழந்தைகளுக்காக தொடக்கப் பள்ளி ஒன்றை தொடங்கியுள்ளார். இங்கு ஒன்று முதல் நான்காம் வகுப்பு வரை கல்வி கற்பிக்கப்படுகிறது. பாடம் கற்பிக்க இதற்காக ஆசிரியர் ஒருவர் பணியமர்த்தப்பட்டுள்ளார். மேலும் இங்கு கல்வி பயிலும் மாணவர்களுக்கு இலவசமாக உணவும் அளிக்கப்பட்டு வருகிறது.

பிரகாஷ் ராவின் குடும்பத்தில் அவருடன் சேர்த்து மொத்தமாக 4 பேர் உள்ளனர். இவர்களின் செலவையும், குழந்தைகளுக்கான செலவையும் 50:50 என்ற விகிதத்தில் அவர் செலவழித்து வருவதைச் சொல்லி தன் ரேடியோ உரையின் போது பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!