ஏழை மகன் மோடி கோடீஸ்வரர்தான் : ஆனால் சொந்தமா பைக், கார் கிடையாது! – AanthaiReporter.Com

ஏழை மகன் மோடி கோடீஸ்வரர்தான் : ஆனால் சொந்தமா பைக், கார் கிடையாது!

உலக நாடுகளில் அதிக வேலைப்பளு கொண்ட  இந்தியப் பிரதமருக்குத்தான், மிகக் குறைந்த சம்பளம்  என்று புள்ளிவிவரங்கள் நிரூபிக்கின்றன. நம் இந்தியப் பிரதமருக்கு மாதம் ரூ.50 ஆயிரம்
அடிப்படைச் சம்பளம், இது தவிர  செலவினங்கள் படி, தினசரி படி மற்றும்  அலுவலகப் படி உள்பட மொத்தம் மாதத்திற்கு ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வழங்கப்படுவதாக ஒரு தகவல் வந்த நிலையில்
பிரதமர் மோடிக்கு ரூ.2 கோடிக்கு சொத்துக்கள் இருந்தும், சொந்தமாக கார் இல்லை என்று பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

அதாவது நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆண்டுதோறும் தங்களின் சொத்துக்கணக்கை வெளியிட வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் பிரதமர் மோடியின் சொத்துக்கள் கடந்த மார்ச் 31-ம் தேதி வரை இருப்பவை குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது:

பிரதமர் மோடியிடம் ரூ. 48 ஆயிரத்து 944 ரொக்கமாகக் கையிருப்பு இருக்கிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிடும் போது பிரதமர் மோடியின் கையிருப்பு பணம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.1.49 லட்சம் இருந்த நிலையில், இந்த ஆண்டு ரூ.50 ஆயிரத்துக்கும் குறைவாகவே இருக்கிறது.

குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள எஸ்பிஐ வங்கியில் ரூ.11 லட்சத்து 29 ஆயிரத்து 690 டெபாசிட் செய்துள்ளார். மற்றொரு எஸ்பிஐ வங்கிக்கணக்கில் ரூ.1.7 கோடிக்கு டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

மோடியிடம் வரிசேமிப்பு எல்அன்ட்டி பத்திரம் ரூ.20ஆயிரம், தேசிய சேமிப்பு பத்திரம் ரூ.5.18 லட்சம், எல்ஐசி காப்பீடு ரூ.1.59லட்சம் ஆகியவை இருக்கின்றன. மோடியிடம் சொந்தமாக 4 தங்க மோதிரங்கள் உள்ளன. இதன் மதிப்பு ரூ.1.38 லட்சமாகும்.

மோடிக்குச் சொந்தமாக பைக், கார் போன்ற வாகனங்கள் ஏதுமில்லை. குஜராத் மாநிலம் காந்தி நகரில் கடந்த 2002-ம் ஆண்டு மோடி ரூ.1.30லட்சத்துக்கு நிலம் வாங்கியுள்ளார். அதன் இன்றைய சந்தை மதிப்பு ரூ.1.கோடியாகும். மற்றவகையில் பரம்பரை சொத்துக்கள் ஏதும் மோடிக்கு இல்லை இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.