ஹாலிவுட் நடிகரானார் நெப்போலியன்! – AanthaiReporter.Com

ஹாலிவுட் நடிகரானார் நெப்போலியன்!

தொன்றுதொட்டே தமிழனுக்கும் கலைக்கும் ஒரு நெருங்கிய நட்பு இருந்து வருகிறது. நம் தமிழ் திரையுலகிற்கே பெருமை சேர்க்க்கும் வகையில், கைபா பிலிம்சின் மூலம் அமெரிக்காவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவரான டெல் கணேசன், ஹாலிவுட் திரைப்பட தயாரிப்பாளராக உருவெடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  அது மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகின் மாவீரனாக அழைக்கப்படும் நெப்போலியன் இத்திரைப்படத்தின் மூலம் அமெரிக்க திரையுலகிற்கு அறிமுகமாகிறார். எதிர்நாயகனாக தனது திரைப்பயணத்தைத் துவங்கி,  நூற்றுக்கும் மேற்பட்ட  திரைப்படங்களில் நடித்துள்ள நெப்போலியன், கதாநாயகனாக உயர்ந்ததோடு மட்டுமல்லாமல், தனது தளராத முயற்சியால் அரசியலிலும் களம் கண்டு, ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அரசின் சமூகநீதி துறை  இணையமைச்சராகவும் உயர்ந்து சாதனை புரிந்திருக்கிறார்.

தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் நடிகர் நெப்போலியன் முதன்முறையாக ஹாலிவுட்டில் ‘டெவில்ஸ் நைட்: டான் ஆப் தி நைன் ரூஜ்’ என்கிற படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் கதைக்கு திருப்புமுனையான, அருங்காட்சியக பொறுப்பாளர் என்கிற ஒரு முக்கியமான வேடமேற்று நடித்துள்ளார் நெப்போலியன். குற்றப்பின்னணியை கதைக்களமாக கொண்ட இத்திரைப்படத்தை எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இயக்குனர் சாம் லோகன் கலேகி இயக்குகிறார். நைன் ரூஜாக தற்காப்புக் கலை வல்லுநர் ஜெஸ்ஸி டீன் நடிக்கிறார். ஜெஸி ஜென்சென், பாபி லேனென், ஜான். சி பார்மன், குரோவர் மெக்கேன்ட்ஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

ஹிப்-ஹாப் பாடகர் எமினெம்மின் இளைய சகோதரர் நாதன் மாதேர்ஸ், இத்திரைப்படத்தின் மூலம் புலனாய்வு அதிகாரியாக அறிமுகமாகிறார். இசையமைத்ததோடு மட்டுமில்லாமல் ஸ்விப்ட்டி மக்வே நடித்தும் அசத்தியிருக்கிறார். இத்திரைப்படத்தின் மூலம் பின்னணி பாடகர் மற்றும் இசை அமைப்பாளரான தேவன் ஏகாம்பரமும் அறிமுகமாகிறார்.

இந்தப்படத்தின் ட்ரெய்லரை  நேற்று வெளியிட்டு பேசிய நெப்போலியன், “நான் சினிமாவில் ‘புது நெல்லு புது நாத்து’ படம் மூலம் அறிமுகமானபோது, எங்கள் இயக்குனர் பாரதிராஜா, குமரேசன் என்கிற என் பெயரை சினிமாவுக்காக நெப்போலியன் என மாற்றினார். நானும், ‘சரி, நம்ம இயக்குனர் ஏதாவது ஒரு காரணத்தோடு தான் வைத்திருப்பார்’ என சமாதானம் செய்துகொண்டேன்.  ஆனால் நண்பர்கள் எல்லோரும் என்னடா இது சரக்கு பாட்டில் பெயரை வச்சிருக்கிறாரே என கிண்டல் செய்தார்கள்.

உடனே அவர்களை சமாளிக்க, நான் ஹாலிவுட் லெவலில் படங்களில் நடிக்கவேண்டும் என்றுதான் டைரக்டர் இப்படி பெயர் வைத்திருக்கிறார் என அவர்கள் வாயை அடைத்தேன்.. ஆனால் இத்தனை வருடங்கள் கழித்து அது உண்மையாகி இருக்கிறது. ஹாலிவுட் படத்தில் நடித்தபோது என் பெயரை எல்லோரும் பிழையில்லாமல் அழகாக உச்சரித்தார்களே.. உலகம் முழுக்க தெரிந்த பெயரல்லவா இது..? பாரதிராஜா சார் செய்தால் அது சரியாகத்தான் இருக்கும்” என்றார் நெப்போலியன்.