தாய்லாந்து குகை விரைவில் மியூசியம் ஆகிறது! – AanthaiReporter.Com

தாய்லாந்து குகை விரைவில் மியூசியம் ஆகிறது!

கடந்த வாரம் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்திருந்த தாய்லாந்தில் உள்ள குகை பற்றி இப்போது தெரிந்திருப்பீர்கள் இல்லையா? இந்த குகை குறித்து பல நாட்டுப்புற கதைகள் உள்ளன. இந்த குகை பெரும்பாலானவர்களால், ‘தாம் லுவாங் குன் நும் நங் நன்’ என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள், ‘ஆறு ஒன்றுக்கு பிறப்பிடமாக இருக்கும் தூங்கும் பெண்ணின் பெரும் குகை’. இதன் பின்னால் ஒரு கதையும் உள்ளது.

சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள சியாங் ரூங் என்னும் நகரத்தின் இளவரசியாக இருந்தவர், குதிரைகாரர் ஒருவருடன் காதல் கொண்டு கர்ப்பமானார். பெண்ணின் தந்தைக்கு அஞ்சி அங்கிருந்து தெற்கு நோக்கி பயணித்த இருவரும் ஒரு மலை பகுதியை அடைந்தனர். இளவரசியை காக்க சொல்லிவிட்டு உணவு தேட சென்ற அவரது காதலனை, இளவரசியின் தந்தையின் ஆட்கள் கண்டுபிடித்து கொன்றுவிட்டனர்.

அவருக்காக காத்திருந்த இளவரசி, ஒரு கட்டத்தில் தன் காதலர் இனி வரபோவதில்லை என்பதை உணர்ந்து கொண்டை ஊசியினால் தன்னைதானே குத்தி மாய்த்துக் கொள்கிறார். அவரது உடல் ஒரு மலையாகவும், அவரிடமிருந்து வழிந்தோடிய குருதி ஆறாகவும் மாறியது என்கிறது அந்த பழங்கதை.

சுமார் 10 கி.மீ. நீளமுள்ள ஆழமான தாம் லுவாங் மலைக்குகைக்கு ஜூன் 23-ம் தேதி சாகசப் பயணம் மேற்கொண்ட 12 பேர் கொண்ட சிறுவர் கால்பந்து அணியும், அவர்களது பயிற்சியாளரும் குகையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். 9 நாள் போராட்டத்துக்குப் பிறகு அவர்கள் இருக்கும் இடம் தெரியவந்தது, இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளின் உதவியுடன் ஆபத்தான மீட்பு நடவடிக்கையின் மூலம் சிறுவர்கள் மீட்கப்பட்டனர். தற்போது மீட்கப்பட்ட சிறுவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பான காணொளி காட்சிகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

இந்தச் தாய்லாந்து குகை சம்பவம் தற்போது ஹாலிவுட்டில் படமாக்கப் படவுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பியூர் பிளிக்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதனைத் தயாரிப்பாளர்கள் ஆடம் ஸ்மித், மைக்கேல் ஸ்காட் ஆகியோர் உறுதி செய்துள்ளனர். இப்படத்திற்கு காட் நாட் எண்டு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இப்படமானது ரூபாய் 400 கோடி பட்ஜெட்டில் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தாய்லாந்து பிரதமர் பிரயட் சான்-ஓ-சா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “12 மாணவர்கள் மீட்கப்பட்ட குகை இனி விரைவில் மியூசியமாக மாற்றப்படும். பயணிகள் அனைவருக்கும் எப்படி மாணவர்கள் காப்பாற்றப்பட்டனர் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் வெளியில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் அனைவரையும் கண்காணிக்கும் விதமாக இனி பாதுகாப்பு அதிகாரிகள் குவிக்கப்படுவர்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.