டூ வீலரில் போறவங்கள்ளே முக்காவாசி பேர் ஹெல்மெட் போடறதில்லை!

டூ வீலரில் போறவங்கள்ளே முக்காவாசி பேர் ஹெல்மெட் போடறதில்லை!

நாடு முழுவதும் அதிகரித்து வரும் சாலை விபத்துகளால் உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த 2015-ல் நாடு முழுவதும் மொத்தம் 5 லட்சம் சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1.46 லட்சம் பேர் உயிரிழந் தனர். இதையடுத்து, சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளைக் குறைக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக் கைகளை எடுத்து வருகிறது. அதன் முக்கிய நடவடிக்கையாக, சாலைப் பாதுகாப்பு சட்டத் திருத்த மசோதாவில் பல்வேறு மாற்றங்க ளைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. விபத்தில் சிக்குவோரை மீட்பது, சிகிச்சை அளிப்பது உள்ளிட்ட வற்றுக்காக மட்டும் ஆண்டுக்கு ரூ.3.8 லட்சம் கோடியை மத்திய அரசு செலவிடுகிறது. மற்ற மாநிலங்களை விட, தமிழ கத்தில் வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ப சாலைகள் விரிவாக்கம், மேம்பாலங்கள் கட்டுதல், அதிகம் விபத்து நடக்கும் இடங்களைத் தேர்வு செய்து சாலை வடிவமைப்புகளை மாற்று தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன. ஆனாலும், தமிழகத்தில் சாலை விபத்துகள் எண்ணிக்கை குறையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் இருசக்கர வாகனம் ஓட்டுவோரில் சுமார் 82 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுகின்றனர். மேலும் 90 சதவீதம் பேர் சீட் பெல்ட் அணியாமல் காரில் செல்கின்றனர் என சிஏஜி என்ற தனியார் தொண்டு நிறுவன ஆய்வில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து சென்னையில் சிஏஜி தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கௌதம், சுமானா ஆகியோர் நேற்று செய்தியாளர்களிடம், “சென்னை மற்றும் தமிழகத்தில் உள்ள சில மாவட்டங்களில் ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிவது குறித்து ஆய்வு செய்தோம். சென்னையில் உள்ள 12 சிக்னல்கள், திருநெல்வேலி, திண்டுக்கல், திருப்பூர், கடலூர் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டபோது பலர் போக்குவரத்து விதிகளை மீறுவது தெரியவந்தது.

தற்போது நாட்டில் அதிக விபத்துகள் மற்றும் காயமடைவோரின் எண்ணிக்கை யில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. விபத்துகளில் இறப் போரின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதன் பின்னணியில் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சென்னையில் 30 முதல் 35 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாமல் வாகனத்தை ஓட்டுகின்றனர். மேலும் பலர் ஹெல்மெட்டை உரியவகையில் அணிவதில்லை. பிற மாவட்டங்களில் 82 சதவீதம் பேர் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுகின்றனர்.

அதேபோல 28 முதல் 30 சதவீதம் பேர் வரை சீட் பெல்ட் அணியாமல் சென்னையில் கார் ஓட்டுகின்றனர். பிற மாவட்டங்களில் 90 சதவீதம் பேர் சீட் பெல்ட் அணிவதில்லை. சீட் பெல்ட் அணிவோரில் பெரும்பாலானோர் வாடகை கார் ஓட்டுநர்களே. தற்போது மோட்டார் வாகன சட்டத் திருத்தம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் சாலை விதிகளை மீறுவோருக்கு அதிக அபராதம் விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அந்த சட்டத் திருத்தத்தை விரைவாக அமல்படுத்த வேண்டும். மேலும் போலீஸாரும் சட்டத்தை நடைமுறைப்படுத்த தீவிரமாக செயல்பட வேண்டும். தற்போதைய நிலையில் சென்னையில் மட்டும் தினமும் ஏறத்தாழ 1100 வாகனங்கள் பதிவுக்காக வருகின்றன. 600 முதல் 700 பேர் ஓட்டுநர் உரிமம் கேட்டு விண்ணப்பிக்கின்றனர். அதனால் விதிகளை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று அவர்கள் தெரிவித்தனர்.

error: Content is protected !!