சாலை விபத்துகளில் சாகிறார்கள் என்றால் மோசமான சாலைகள் மட்டுமல்ல, அதிகாரிகளும் காரணம்! – AanthaiReporter.Com

சாலை விபத்துகளில் சாகிறார்கள் என்றால் மோசமான சாலைகள் மட்டுமல்ல, அதிகாரிகளும் காரணம்!

நம் நாட்டில் முழுவதும் கடந்த ஆண்டில் மட்டும் 5,01,020 சாலை விபத்துகள் நிகழ்ந்துள்ளன. இதில் 1,31,726 விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டன. இந்த விபத்துகளில் 1,46,138 பேர் உயிரிழந் துள்ளனர். 5,19,446 பேர் காயமடைந்துள்ளதாக கடந்த ஆண்டின் சாலை விபத்து பட்டியலில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இப்பட்டியலை ஆய்வு செய்தபோது, கடந்த ஆண்டின் மொத்த சாலை விபத்துகளில் 28.8 சதவீத விபத்துகள் இரு சக்கர வாகனங்களால் நிகழ்ந்துள்ளது தெரிய வந்துள்ளது. இரு சக்கர வாகன விபத்துகள் மட்டும் 1,44,391 ஆகும். இதில் 36,803 பேர் இறந்துள்ளனர். 1,35,343 பேர் காயமடைந்துள்ளனர்.

அடுத்து கார்கள், ஜீப்கள், சுற்றுலா வாகனங்கள், மேக்சிகேப் வாகனங்களால் 1,18,438 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 28,610 பேர் இறந்துள்ளனர். பஸ்களால் 41,832 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 10,450 பேர் இறந்துள்ளனர். 55,083 பேர் காயம் அடைந்துள்ளனர். ஆட்டோக்களால் 30,340 விபத்துகளில் 6,155 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவில் பயங்கரவாத தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கையை விட, சாலை பள்ளங்களால் ஏற்பட்ட விபத்துகளில் பலியானோர் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக, சுப்ரீம் கோர்ட் கவலை தெரிவித்துள்ளது.

சாலை பாதுகாப்பு தொடர்பான ஒரு வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் மதன் பி லோகுர், தீபக் குப்தா அமர்வு நேற்று விசாரித்தது. அப்போது, குண்டும் குழியுமான சாலைகளில் ஏற்படும் விபத்து மரணங்கள் அச்சுறுத்தலாக அமைகின்றன என கருத்து தெரிவித்தது.

மேலும், பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் பலியாகிறவர்களின் எண்ணிக்கையை விட மோசமான சாலைகளால் ஏற்படுகிற விபத்துகளில் பலியாகிறவர்களின் எண்ணிக்கை அதிகம் என நீதிபதிகள் வேதனையுடன் குறிப்பிட்டனர்.

ஏராளமானோர் சாலை விபத்துகளில் சாகிறார்கள் என்றால் அதற்கு மோசமான சாலைகள் மட்டுமல்ல, அவற்றை சீரமைக்காத அதிகாரிகளும் காரணம் என்பது எல்லோரும் அறிந்ததுதான் என நீதிபதிகள் கூறினர்.

முடிவில், இது தொடர்பாக முன்னாள் நீதிபதி கே.எஸ். ராதாகிருஷ்ணன் தலைமையிலான சாலை விபத்துகள் தொடர்பான சுப்ரீம் கோர்ட்டு கமிட்டி ஆராய்ந்து 2 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.