உங்க அஸ்தியை சந்திரனில் (MOON) கொண்டு போய் தூவணுமா? – ஜஸ்ட் ரூ 20 கோடி மட்டுமே கட்டணம்! – AanthaiReporter.Com

உங்க அஸ்தியை சந்திரனில் (MOON) கொண்டு போய் தூவணுமா? – ஜஸ்ட் ரூ 20 கோடி மட்டுமே கட்டணம்!

பிரபலங்களோ, சாதா பிரஜையோ இறந்து விட்ட போது அவர்களின் உடல்களை தகனம்செய்து, அஸ்தியை கங்கையில் கரைப்பது, கன்னியாகுமரி கடலில் கரைப்பது போன்றவை புனிதமானதாக கருதப்படுகிறது. இதனிடையே அமெரிக்காவில் ஒரு படி மேலே போய், இறந்தவர்களின் அஸ்தியை சந்திரனுக்கு எடுத்துச்சென்று தூவுவதற்கு ‘மூன் எக்ஸ்பிரஸ்’ என்ற பெயரில் ஒரு அதிரடி திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

moon aug 10

இந்த திட்டத்தை இந்திய வம்சாவளியை சேர்ந்த நவீன் ஜெயின் உள்ளிட்டவர்களை பங்குதாரர்களாகக் கொண்ட தனியார் நிறுவனம் தீட்டி உள்ளது. இதற்கு தேவையான உரிமத்தை அமெரிக்காவின் எப்.ஏ.ஏ. என்னும் மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாகம் வழங்கி உள்ளது.அடுத்த ஆண்டு இந்த நிறுவனம் முதன் முதலாக தனது விண்கலத்தை சந்திரனுக்கு அனுப்புகிறது.

இதுபற்றி நவீன் ஜெயின் ‘நியூயார்க் போஸ்ட்’ ஏட்டுக்கு அளித்த பேட்டியில், ‘‘இறந்தவர்களின் அஸ்தியை சந்திரனுக்கு எடுத்துச்சென்று தூவப்படும். ஒரு கிலோ அஸ்தியை எடுத்துச்செல்வதற்கு கட்டணம் 3 மில்லியன் டாலர் (சுமார் ரூ.20 கோடி)’’ என கூறி உள்ளார்.

சாதாரணமாக ஒருவரின் அஸ்தி 4 முதல் 6 பவுண்ட் வரை எடை இருக்கும் என்பதால் ஒருவரது அஸ்தியை சந்திரனுக்கு எடுத்துச்சென்று தூவுவதற்கு 5.4 மில்லியன் டாலரில் இருந்து 8.1 மில்லியன் டாலர் வரை வசூலிக்கலாம் என தகவல்கள் கூறுகின்றன.இப்படி சந்திரனுக்கு அஸ்தியை எடுத்துச்செல்வதற்கு முன்பதிவு செய்யப்பட்டு, நீண்ட பட்டியல் காத்திருப்பதாக நவீன் ஜெயின் கூறி உள்ளார்.