மான்ஸ்டர் – திரை விமர்சனம்!

மான்ஸ்டர் – திரை விமர்சனம்!

நிஜ எலி ஒன்றுடன் எஸ் .ஜே. சூர்யா நடித்த மான்ஸ்டர் படம் அமர்ந்திருந்தேன். படம் ஆரம்பிக்கும் வரை அருகில் அமர்ந்திருந்த ஒரு மூத்த பத்திரிகையாளர் சொல்லிக் கொண்டிருந்த சேதி இது : “இந்த எலிகள் இருக்குதே.. அவை கிட்டத்தட்ட மூன்று கோடி ஆண்டுகளுக்கு முன்பே பூமியில் தோன்றி இங்குள்ள சூழ் நிலைகளுக்கு நன்கு பழகி விட்டன. எலிகள் பல்வேறு சூழ்நிலைகளையும் சாதகமாக்கிக் கொண்டு வாழும் தன்மை கொண்டவை. கிடைக்கும் எந்த உணவையும் உண்ணக் கூடியவை. இனப் பெருக்கத்தில் சிறப்புத்தன்மை பெற்றவை. வளரும் பற்களை குறைக்க வேண்டி யிருப்பதால் எலிகள் எப்போதும் பொருட்களை கடித்துக் கொறித்துக் கொண்டேயிருக்கும். எலி களுக்கு கண் பார்வையை விட தொடு, கேள் மற்றும் மோப்ப உணர்ச்சிகள் மிகவும் சக்தி வாய்ந்தவை.  எலிகள் கூச்சம் நிறைந்தவை. எதையும் ஆராய்ந்து சோதிக்கும் தன்மை பெற்றவை.

நமது நாட்டில் ஐம்பதுக்கும் மேற்பட்ட எலி வகைகள் இருக்கின்றன. தமிழகத்தில் விளைநிலங்கள், வீடுகள் மற்றும் தானிய சேமிப்பு கிடங்குகளில் கரம்பெலி அல்லது வயலெலி, புல்லெலி, வெள்ளெலி, வயல் சுண்டெலி, கல்லெலி, குன்னெலி, பெருச்சாளி, வீட்டெலி, வீட்டு சுண்டெலி, தென்னை எலி போன்ற சுமார் பத்து வகைகள் இருக்குதாக்கும் “என்ற போதே படம் தொடங்கி விட்டது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலார் வழியை பின்பற்றி தன் வாழ்க்கையை கொண்டு செல்லும் எஸ்.ஜே.சூர்யாவின் புதுசான சொந்த வீட்டுக்குள் எலி ஒன்று புகுந்து அட்டகாசம் செய்கிறது. அந்த எலியை கொல்லாமல் வீட்டை விட்டு வெளி யேற்றும் வேலையில் இறங்குகிறார் சூர்யா. இம்புட்டுத்தான் இந்த மான்ஸ்டர் கதை!

இந்த ஒன் லைனை வைத்து கொண்டு ஆடியன்ஸை குதூகலமூட்ட தன்னால் முயன்றதை செய்து உள்ளார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன். எல்லோருக்கும் சிரிப்பு வருகிறதா இல்லையா? என்பது வேறு விஷயம். ஆனால் தக்கனூண்டு ஒரு எலியை நம்பி ஒட்டு மொத்த யூனிட்டும் முழுசாக உழைத்து ஒரு முழு நீளப் படத்தை கொடுத்ததற்கு ஒரு ஸ்பெஷல் பூங்கொத்து கொடுத்தே ஆக வேண்டும்.

படத்தின் ரியல் ஹீரோ ஒரு எலிதான். பெரும்பாலும் நிஜ எலிதான் என்கிறார்கள் யூனிட்டார். அந்த ஹீரோ எண்ட்ரியாகும் போதெல்லாம் அடுத்து என்ன நடக்குமோ? என்று ஆடியன்ஸை கிலி ஏற்படுத்தி விட்டது.

படத்தின் இரண்டாம் நாயகன் எஸ் ஜே சூர்யா . அஞ்சனம் அழகிய பிள்ளை என்ற பெயரில் வரும் இவர் வழக்கமான தன் அஷ்டகோணல் மூஞ்சியையும், அடாவடி சேஷ்டைகளையும் அதிகம் காட்டாமல் அடக்கி வாசித்து இருப்பதில் இயக்குநர் நெல்சன் பங்கு அதிகம் இருக்கும் என்று நம்பலாம். நாயகி பிரியா பவானி சங்கர் நடிகை நதியா ஸ்டைலில் அட்ராக்ட் செய்கிறார். காமெடியன் கருணாகரன் அவ்வப்போது ஒத்தை டயலாக்கில் கிச்சு கிச்சு மூட்டுகிறார்.

படத்தின் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனும், ஒளிப்பதிவாளர் கோகுல் பினாயும் தான் படத்தை கொஞ்சமாவது கவனிக்க வைக்கிறார்கள். குறிப்பாக மியூசிக் டைரக்டர் ஜஸ்டின் அநேக நேரங்களில் அமைதி காத்து ஆடியன்ஸ் பீட்டை எகிற வைத்து சபாஷ் சொல்ல வைத்து விட்டார்

அதே சமயம் சக பத்திரிகையாளர் ஒருவர் சொன்னது போல் ‘முதல் பாதியில் கொஞ்சம் விறுவிறுப்பு … கலகலப்பு … செண்ட்டிமெண்ட் என படத்தை கொண்டு செல்லும் இயக்குநர். அடுத்த பாதியில் படம் பார்ப்பவர்களுக்கு தியேட்டருக்குள் இருக்கிறோமா? எலி பொறியில் மாட்ட்டிக் கொண்டோமா? என்ற சந்தேகம் வருகிறது இல்லே’என்று கேட்டத்துக்கு தலையாட்டு முன்பே ‘சுந்தரா டிராவல்ஸ் படத்தில் வரும் எலி காமெடியை விட மாஸ்டர் பீஸ் இருக்க முடியுமா?’ என்று சொல்லி நம் பதிலை எதிர் பார்க்காமல் நடையைக் கட்டி விட்டார்.

மொத்தத்தில் இந்த மான்ஸ்டர் – டைம் பாஸ் பண்ண உதவும் படம்

மார்க் 3. 25 / 5

error: Content is protected !!