காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு எம்.பிக்கள் 150 கி.மீ. நடைபயணம்!- மோடி ஆர்டர்! – AanthaiReporter.Com

காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு எம்.பிக்கள் 150 கி.மீ. நடைபயணம்!- மோடி ஆர்டர்!

மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த தினமான அக்டோபர் 2, சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த தினமான அக்டோபர் 31 ஆகிய தேதிகளை முன்னிட்டு பாஜக எம்.பிக்கள் 150 கிலோ மீட்டர் நடை பயணம் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து பாரதீய ஜனதா கட்சி எம்.பி.க்களையும் செவ்வாய்க்கிழமை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

காந்தி அடிகளின் 150வது பிறந்தநாள் இந்த ஆண்டு கொண்டாடப்பட உள்ளது. இதற்கான தேசிய குழு சந்திப்பு சமீபத்தில் டெல்லியில் நடைப்பெற்றது. இதற்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்கினார்.இந்த தேசிய குழுவின் தலைவர் பிரதமர் மோடி ஆவார். இதில் துணை குடியரசுத்தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் நீதிபதிகள், மக்களவை சபாநாயகர், மத்திய கேபினெட் உறுப்பினர்கள், மாநில முதல் மந்திரிகள் மற்றும் காந்தியை பின் தொடரும் தொண்டர்கள் பலர் உள்ளனர்.

இதனையடுத்து மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாளை கொண்டாடும் வகையில், மத்திய அரசு வரும் அக்டோபர் 2ம் தேதி முதல் 31ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு, 15கிமீ வீதம் மொத்தம் 150கிமீ தொலைவிற்கு, அவரவர் தொகுதியில் இருந்து பாதயாத்திரை செல்லுமாறு பாஜக எம்பிக்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து நாடாளுமன்ற விவகார மந்திரி பிரகலாத் ஜோஷி கூறுகையில், ‘”இந்த யாத்திரைகள் கிராமங்களின் மறுமலர்ச்சி மற்றும் அவற்றை தன்னம்பிக்கை, தோட்ட உந்துதல் மற்றும் பூஜ்ஜிய பட்ஜெட் விவசாயம் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்” என்று அவர் கூறினார்.

“மாநிலங்களவை எம்.பி.க்களுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்படும்” என்று ஜோஷி கூறினார். “ஒவ்வொரு தொகுதியிலும் பதினைந்து முதல் 20 அணிகள் உருவாக்கப்படும். அவர்கள் தினமும் 15 கி.மீ பாதயாத்திரையை மேற்கொள்வார்கள். எம்.பி.க்கள் காந்தி ஜி, சுதந்திர போராட்டம், மரம் வளர்ப்பு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வார்கள். அதை செயல்படுத்த கட்சி அளவிலான குழு இருக்கும்” என்றும் அவர் கூறினார்.

மேலும், டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்.பிக்கள் கூட்டத்தில், ஒவ்வொரு பாஜக எம்.பிக்களும் தங்களது தொகுதியில் குழுக்கள் அமைத்து நடைபயணம் மேற்கொள்ள வேண்டும் எனவும் இந்த நடைபயணத்தில் கிராமப்புற மேம்பாடு, மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்டவைகள் முக்கிய அங்கமாக இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார். இதன்மூலம் காந்திய சிந்தனைகள் பரப்பப்பட முடியும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.