மோடி அரசு கடந்த 4 ஆண்டுகளில் விளம்பரத்திற்காக ரூ.5000 கோடி செலவழித்துள்ளது! – AanthaiReporter.Com

மோடி அரசு கடந்த 4 ஆண்டுகளில் விளம்பரத்திற்காக ரூ.5000 கோடி செலவழித்துள்ளது!

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014-ம் ஆண்டு பதவி ஏற்றதில் இருந்து அவருக்கு செல்வாக்கு இருக்கிறதோ இல்லையோ ஆண்டு தோறும் விளம்பரத்துக்காக கோடிக் கணக்கில் செலவு செய்வது மட்டும் அதிகரித்துக் கொண்டே போகிறது.அந்த வகையில் மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளில் விளம்பரத்திற்காக ரூ.5000 கோடியை செலவழித்துள்ளதாக ஆர்.டி.ஐ. தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

நொய்டாவைச் சேர்ந்த ராம்வீர் தன்வார் என்பவர், கடந்த 2014ஆம் ஆண்டு முதல் மத்திய அரசு விளம்பரத்திற்காக செலவழித்த தொகை எவ்வளவு என்பது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையிடம் தகவல் கேட்டிருந்தார். இதற்கு அளிக்கப்பட்டுள்ள பதிலில், மத்திய அரசு ரூ. 5000 கோடி வரை விளம்பரத்திற்கு செலவு செய்தது தெரியவந்துள்ளது.

அதிலும் அச்சு ஊடகத்தை விட மின்னணு ஊடகத்தில் விளம்பரம் செய்வதற்காக அதிக நிதி செலவிடப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையில் மின்னணு ஊடக விளம்பரத்திற்காக ரூ.2208 கோடி செலவிடப்பட்டுள்ளது. அச்சு ஊடக விளம்பரத்திற்கு ரூ. 2136 கோடியும் வெளிப்புற விளம்பரம் என்ற பெயரில் ரூ.647 கோடியும் செலவிடப்பட்டுள்ளது.

வெளிப்புற விளம்பரத்திற்காக சுற்றுலா அமைச்சகம் அதிகபட்சமாக ரூ. 30 கோடிவரை செலவு செய்துள்ளது.

மேலும் பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 4 ஆண்டுகளில் விளம்பரத்திற்கு செலவிட்ட தொகை முந்தைய அரசு செலவிட்டதை விட 2 மடங்கு அதிகமாகும்.

மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் விளம்பரத்திற்காக ரூ.2658 கோடி செலவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.