கரன்சி களேபரம்: மோடி ஆப்-பின் கருத்துக் கணிப்புகளும், நிஜங்களும்! – AanthaiReporter.Com

கரன்சி களேபரம்: மோடி ஆப்-பின் கருத்துக் கணிப்புகளும், நிஜங்களும்!

கறுப்பு பணத்தை ஒழிக்கும் நடவடிக்கையாக புழக்கத்தில் இருந்த 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி அதிரடியாக அறிவித்ததை தொடர்ந்து, தங்கள் கைவசம் உள்ள செல்லாத ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வங்கிகளிலும், பணம் எடுப்பதற்கு ஏ.டி.எம். மையங்களின் வாசலின் முன்பும் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடந்தனர். மக்களின் அன்றாட தேவைக்கான சில்லரை நோட்டுகளை புழக்கத்தில் விடுவதில், மத்திய அரசு தாமதித்து வருகிறது. புதிதாக ரூ.2,000 நோட்டுகள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளதால், அதற்கு சில்லரையாக 100 ரூபாய் நோட்டுகள் கிடைப்பது என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது.

modi nov 24

பழைய நோட்டுகளை மாற்றுவதில் உள்ள சிக்கல்கள் ஒருபுறம் இருக்க, சில்லரை நோட்டுகள் கிடைக்காமல் பணப்புழக்கம் முடங்கிபோயுள்ளது. இதனால், பொதுமக்கள் கடுமையான அவதியில் உள்ளனர். சில்லரை நோட்டுகள் கிடைக்காமல் மக்கள் ஏ.டி.எம். மையங்களை தேடி அலைகின்றனர். சென்னையில் சுமார் 80 சதவீதத்துக்கு மேலான ஏ.டி.எம். எந்திரங்கள் தொடர்ந்து 15 நாட்களாக முடங்கியே கிடக்கின்றன. ‘பணம் இல்லை’, ‘ஏ.டி.எம். எந்திரம் பழுது’, ‘சேவையில் இல்லை’ என்ற பல்வேறு வகையான போர்டுகள் ஏ.டி.எம். மையங்களின் முகப்பில் தொங்குகின்றன. பிரதமரின் இந்த நடவடிக்கையை எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்து உள்ளன. உரிய முன்னேற்பாடுகளை செய்யாததால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருப்பதாக எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி இருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து, இந்த பிரச்சினை குறித்து மக்களின் கருத்துகளை அறிய விரும்பிய பிரதமர் மோடி, டுவிட்டரில் அழைப்பு விடுத்தார். ‘என்எம்ஆப்’ என்ற கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டு ரூபாய் நோட்டுகள் தொடர்பாக அரசு எடுத்த முடிவு குறித்த உங்கள் கருத்தை நேரடியாக தெரிவியுங்கள் என்று கூறி இது தொடர்பாக 10 கேள்விகளை எழுப்பி அவற்றை பற்றி கருத்து தெரிவிக்குமாறு அவர் கூறி இருந்தார்.

அதன்படி நேற்று முன்தினம் காலை 10 மணி முதல் நேற்று பிற்பகல் 3.30 மணி வரை உலகம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் இருந்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான பேர் தங்கள் கருத்துகளை பதிவு செய்து உள்ளனர். இவர்களில் 93 சதவீதம் பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள்.

மக்கள் தெரிவித்த கருத்துகளை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

அதுபற்றிய விவரம் இதோ-

* ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் ஒழிக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்து இருப்பவர்களில் 98 சதவீதம் பேர் இந்தியாவில் கருப்பு பணம் இருப்பதாக கூறி உள்ளனர்.

* ஊழல், கருப்பு பணம் என்னும் தீமைகளை எதிர்த்து போரிட்டு அழிக்க வேண்டியது அவசியம் என்று 99 சதவீதம் பேர் கூறி இருக்கிறார்கள்.

* கறுப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கையை வரவேற்று பாராட்டத்தக்கது என்று 90 சதவீதம் பேரும், ஊழலுக்கு எதிராக மோடி அரசு எடுத்து வரும் நடவடிக்கை மிகவும் சிறப்பானது என்று 92 சதவீதம் பேரும் கூறி இருக்கிறார்கள்.

* 90 சதவீதம் பேர் 500 மற்றும் 1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததை வரவேற்று உள்ளனர். இந்த நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தது கறுப்பு பணம் மற்றும் ஊழலை ஒழிக்கவும், பயங்கரவாதத்தை ஒடுக்கவும் உதவியாக இருக்கும் என்று 92 சதவீதம் பேர் கூறி உள்ளனர்.

அவதி பொருட்டு அல்ல

* உயர் மதிப்பு நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ரியல் எஸ்டேட், உயர் கல்வி, சுகாதார வசதிகள் சாமானிய மக்களை முழுமையாக சென்றடையும் என்று 66 சதவீதம் பேரும், ஓரளவுதான் சென்றடையும் என்று 27 சதவீதம் பேரும் கூறி இருக்கிறார்கள்.

* ஊழல், கறுப்பு பணம், கள்ள நோட்டுகள், பயங்கரவாதம் ஆகியவற்றுக்கு எதிராக அரசு மேற்கொள்ளும் இந்த நடவடிக்கையால் ஏற்படும் அவதிகளை மனதில் கொள்கிறீர்களா? என்ற கேள்விக்கு 8 சதவீதம் பேர் ஆம் என்றும், 43 சதவீதம் பேர் அந்த அவதியை நாங்கள் பொருட்படுத்தவில்லை என்றும், 48 சதவீதம் பேர் நாங்கள் அவதிப்பட்டாலும் அது பயனுள்ளதுதான் என்றும் கூறி உள்ளனர்.

* தற்போது எடுக்கப்படும் நடவடிக்கைகள் கருப்பு பணம், ஊழல், பயங்கரவாதத்தை ஒழிக்க ஆதரவாக இருக்கும் என்று 86 சதவீதம் பேரும், ஆதரவாக இருக்காது என்று 14 சதவீதம் பேரும் கூறி இருக்கிறார்கள்.

மற்றொரு கருத்துக்கணிப்பு

இதேபோல் சி-ஓட்டர் அமைப்பின் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு தரப்பு மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் உள்ள மொத்த பாராளுமன்ற தொகுதிகளில் கிட்டத்தட்ட பாதி தொகுதிகளில் கடந்த திங்கட்கிழமை நடத்தப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில், ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது சில அசவுகரியங்களை ஏற்படுத்தினாலும், இதை வரவேற்பதாக நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த 86 சதவீதம் பேர் கூறி உள்ளனர். அதிக வருவாய் கொண்டோரில் 90.6 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் இந்த அதிரடி நடவடிக்கையை வரவேற்பதாக தெரிவித்து இருக்கிறார்கள்.

ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது நல்ல நடவடிக்கை என்றும், இதை நல்ல முறையில் செயல்படுத்தியதாகவும் நகர்ப்புறங்களில் 71 சதவீதம் பேரும், கிராமப்புறங்களில் 59.4 சதவீதம் பேரும் கூறி இருக்கிறார்கள்.

அரசியல் நிர்ப்பந்தங்களுக்கு பணிந்து பிரதமர் மோடி தனது நடவடிக்கையில் இருந்து பின்வாங்கி விடக்கூடாது என்று 55 சதவீதத்துக்கும் அதிகமான பேர் கருத்து தெரிவித்து உள்ளனர்.

திடீரென்று ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது தாங்கிக்கொள்ள முடியாத பாதிப்பு என்று 12.6 சதவீதம் பேர் கூறி இருக்கிறார்கள்.

ஆனால் சென்னையில் சுமார் 80 சதவீதத்துக்கு மேலான ஏ.டி.எம். எந்திரங்கள் தொடர்ந்து 15 நாட்களாக முடங்கியே கிடக்கின்றன. ‘பணம் இல்லை’, ‘ஏ.டி.எம். எந்திரம் பழுது’, ‘சேவையில் இல்லை’ என்ற பல்வேறு வகையான போர்டுகள் ஏ.டி.எம். மையங்களின் முகப்பில் தொங்குகின்றன. செயல்பாட்டில் இருக்கும் சில ஏ.டி.எம். எந்திரங்களிலும் 2,000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வைக்கப்பட்டுள்ளன. தட்டுப்பாடு காரணமாக 100 ரூபாய் நோட்டுகள் வைக்கப்படுவதில்லை. இதனால் பொதுமக்கள் சில்லரை செலவுக்கு 100 ரூபாய் நோட்டுகளை எடுக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

மேலும் ரிசர்வ் வங்கியிலும் பணம்தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் வங்கிகளுக்கு வினியோகம் செய்யும் பணத்தின் அளவையும் ரிசர்வ் வங்கி கணிசமாக குறைத்துள்ளது. உதாரணமாக வங்கிகள் ரூ.60 லட்சம் கேட்டால், ரூ.5 லட்சம் முதல் ரூ.6 லட்சம் வரைதான் அந்த வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி கொடுத்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் கேட்கும் தொகையை விடவும் வங்கிகள் மிகவும் குறைத்து வழங்குகின்றன. அதுவும் பணம் இருப்பு உள்ள வரை மட்டுமே வழங்கப்படுகின்றது. சில வங்கிகளில் டோக்கன் வழங்கி, இருப்பு உள்ள தொகை பகிர்ந்து வழங்கப்பட்டது. பணம் இல்லாத வங்கிகள் வாடிக்கையாளர்களை திருப்பி அனுப்பிவருகின்றன.

இதனால் வங்கிகளுக்கு சென்று ஏமாற்றத்தைத்தான் சந்திக்கவேண்டும் என்பதற்காக பொதுமக்கள் சிலர் வங்கிகளுக்கு செல்வதையே தவிர்த்து வருகின்றனர். தற்போது புழக்கத்தில் உள்ள ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 நோட்டுகளுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு வங்கி கணக்கில் இருந்தும் பணம் கொடுக்க முடியவில்லை என்பதுதான் நிஜம்.