காவிரி நதி நீர் பங்கீடு வரலாறு அறியாத மூடர்கள் – வஞ்சக எண்ணம் கொண்ட அரசியல் பிழைப்பாளர்கள்! – ஸ்டாலின் காட்டம்! – AanthaiReporter.Com

காவிரி நதி நீர் பங்கீடு வரலாறு அறியாத மூடர்கள் – வஞ்சக எண்ணம் கொண்ட அரசியல் பிழைப்பாளர்கள்! – ஸ்டாலின் காட்டம்!

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய பாஜக அரசைச் சேர்ந்தவர்களும், அதனை வலியுறுத்தாத மாநில அதிமுக அரசைச் சார்ந்தவர்களும் திமுக மீது பழிபோட்டு தங்களைக் காப்பாற்றிக்கொள்ள நினைக்கும் கயமைத்தனத்தையெல்லாம் தாண்டி காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டும் வரையில், நமது பயணமும், போராட்டங்களும் ஓயாது என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் திமுக தொண்டர்களுக்கு எழுதிய கடிதத்தில், “”எங்கெங்கு காணினும் எழுச்சி. எத்திசை நோக்கினும் உணர்ச்சி. ‘எத்தர்கள் ஆளும் நாட்டில் விட்டுத் தரமாட்டோம் எமது உரிமையை’ என மக்கள் முன்னெடுத்த கிளர்ச்சி. இதுதான் திருச்சி முதல் கடலூர் வரையிலான காவிரி உரிமை மீட்புப் பயண வழியெங்கும் நான் கண்ட காட்சி. நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை உறுதி செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியத்தை விரைந்து அமைத்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிட வேண்டும் என்பதை திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தனிப்பட்ட குரலாக அல்ல… தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த குரலாக தோழமைக் கட்சியினருடனும், விவசாய அமைப்புகளுடனும், பொதுமக்களின் உணர்வுடனும் ஒருங்கிணைந்து முடிவெடுத்து செயல்பட்டு வருகிறது.

ஏப்ரல் 1-ம் நாள் அண்ணா அறிவாலயத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி தொடர் போராட்டங்களைத் தமிழகம் முழுவதும் நடத்துவதெனத் தீர்மானங்கள் நிறைவேற்றிய கையோடு, வள்ளுவர் கோட்டத்தில் தோழமைக் கட்சித் தலைவர்களுடன் மறியலில் ஈடுபட்டு கைதானோம். அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் கழகத்தினர் எழுச்சிமிகு போராட்டங்களை தமிழகம் முழுவதும் நடத்தி, மத்திய – மாநில அரசுகளின் செவிப்பறையைக் கிழித்தனர்.

ஏப்ரல் 5-ம் நாள் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டம் தமிழகத்தையே குலுங்க வைத்தது. ஒட்டுமொத்த மக்களின் ஒத்துழைப்புடன் அந்த முழு அடைப்பு நடந்த நாளில், தடையை மீறி சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்ட நானும் தோழமைக் கட்சித் தலைவர்களும் கைது செய்யப்பட்டோம். எனினும், நுங்கும் நுரையுமாக காவிரியில் பொங்கி வரும் புதுப்புனல் போல போராட்டங்கள் வலிமையுடன் பெருகிக் கொண்டே இருந்தன. அதன் முத்தாய்ப்புதான், காவிரி உரிமை மீட்புப் பயணம்.

இந்தப் பயணத்தைத் தொடங்கும் முன், எந்த நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்துகிறோமோ அந்த நடுவர் மன்றம் பிரதமர் வி.பி.சிங் ஆட்சிக் காலத்தில் அமைந்திடச் செய்த நம் அருமைத் தலைவர் கருணாநிதியைச் சந்தித்து, பயண விவரத்தைக் கூறி வாழ்த்துகளைக் கோரினேன். முதுமையும் உடல் நலக்குறைவும் அவரது பணிகளை முடக்கியுள்ள நிலையிலும், காவிரி என்று சொன்னதுமே அவரது உள்ளத்து உணர்வு உடல் அசைவுகள் வழியே வெளிப்பட்டது. தலை உயர்த்தி, மெய் சிலிர்த்து, தன் கைககளை என் தலையில் வைத்து வாழ்த்தி வழியனுப்பினார். ஓராயிரம் யானை பலம் பெற்ற தெம்புடன், கோபாலபுரத்திலிருந்து கிளம்பினேன்.

ஏப்ரல் 7-ம் நாள் காவிரி உரிமை மீட்புப் பயணம், அகண்ட காவிரி பாய்ந்தோடி, கொள்ளிடம் ஆறு பிரிகின்ற முக்கொம்பு பகுதியிலிருந்து தொடங்கியது. அந்த முக்கொம்பில் அணை கட்டி, நீராதாரத்தைக் காப்பாற்றி, பச்சை வயல்கள் செழித்துக் குலுங்கிட வகை செய்து, முக்கொம்பை இனிய சுற்றுலாத்தளமாகவும் ஆக்கியவர் தமிழகத்தின் தனித்தன்மை மிக்க முதல்வராக விளங்கிய தலைவர் கருணாநிதி. அவருடைய வாழ்த்துகளைப் பெற்றதுடன், அவர் சீரமைத்த முக்கொம்பிலிருந்து காவிரி உரிமை மீட்புப் பயணம் தொடங்கியது.

திமுக முன்னெடுத்து, தோழமைக் கட்சித் தலைவர்களான திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சகோதரர் திருநாவுக்கரசர், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் அண்ணன் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் மதிப்பிற்குரிய காதர்மொய்தீன், விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர் சகோதரர் திருமாவளவன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் மதிப்பிற்குரிய ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் மீட்புப் பயணத் தொடக்க நிகழ்வில் உரையாற்றியதுடன், விவசாயிகள் அமைப்பினைச் சேர்ந்த சளைக்காத போராட்டக்காரர் அய்யாகண்ணுவும் கலந்து கொண்டு உரையாற்றினார். அரசியல் கட்சித்தலைவர்கள் பங்கேற்ற நிகழ்வு என்றபோதும் எந்தக் கட்சி சாயமும் இல்லாமல் தமிழ்நாட்டின் அடிப்படை உரிமையை மீட்பது ஒன்றே நம் குறிக்கோள் என்பதைக் குறிக்கும் வகையில், உரிமை மீட்புப் பயணத்திற்கான கொடி ஏற்றப்பட்டு, கல்வெட்டும் திறக்கப்பட்டது.

தொடக்க நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மாவட்ட கழகச் செயலாளர் கே.என்.நேரு தனக்குரிய ஆற்றலுடன் சிறப்பாகச் செய்திருந்தார். தலைவர் கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்ட முக்கொம்பு அணையைப் பார்க்கும்படி மேடை அமைக்கப்பட்டிருந்தது. நிறைந்தோடும் நீரால் கடல் போல காட்சியளித்துவந்த அகண்ட காவிரியும், அதிலிருந்து பிரியும் கொள்ளிடமும் வறண்ட பாலையாய் மாறியிருந்த அவலத்தைக் கண்டபோது நெஞ்சம் பதறியது. காவிரியில் நம் தமிழ்நாட்டிற்குள்ள உரிமையை மீட்டெடுக்கும்போது மீண்டும் அகண்ட காவிரி நிறைந்தோடும் என்ற நம்பிக்கையுடன் உரிமை மீட்புப் பயணம் தொடங்கியது.

திமுக மாவட்டச் செயலாளர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் வந்திருந்தனர். தோழமைக் கட்சிகளின் நிர்வாகிகளும் பங்கேற்றனர். திருச்சி நகரத்திற்கு வந்தபோது அலையாய் அலையாய் மக்கள் ஆர்ப்பரித்து வரவேற்றதுடன், அவர்களும் பயணத்தில் பங்கேற்றனர். திருச்சி பேருந்து நிலையம் அருகே வந்தபோது கட்டுக்கடங்காத கூட்டத்தையும், கரைபுரண்டோடிய வரவேற்பையும் காண முடிந்தது. அங்கிருந்து கல்லணை வந்தபோது விவசாயிகளைச் சந்தித்து உரையாடினோம். ஆற்றில் இல்லாத நீர், அவர்களின் நெஞ்சில் இருப்பதையும் அது கண்கள் வழியே பொங்கி வருவதையும் கண்டு கலங்கினோம்.

முதல்நாள் பயணம் தஞ்சையில் நிறைவடைய, அடுத்த நாள் பயணம் தஞ்சை மாவட்டம் முழுவதும் தொடர்ந்தது. திருச்சியின் எழுச்சியை விஞ்சிடும் வகையில் தஞ்சை மக்கள் நமது காவிரி உரிமை மீட்புப் பயணத்திற்கு பேராதரவு தந்து வரவேற்றனர். பல கிராமங்களிலும் மக்கள் தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில், காவிரி உரிமை மீட்புப் பயணத் தலைவர்களே வருக என பதாகைகள் அமைத்திருந்தனர். சென்ற இடமெல்லாம் விவசாயப் பெருமக்கள் தங்கள் உள்ளக் குமுறலை வெளிப்படுத்தினர். தங்களுக்காக குரல் கொடுக்க தமிழகத் தலைவர்கள் கட்சி வேறுபாடின்றி ஒருங்கிணைந்து வருவதில் ஆறுதல் கொண்டனர். ​அவர்களிடம் உரையாடியபோது, நமது உணர்வைத் தொடர்ந்து வெளிப்படுத்தும் வகையில் சென்னைக்குப் பிரதமர் மோடி வருகை தரும் ஏப்ரல் 12-ம் தேதியன்று மாநிலம் முழுவதும் கறுப்புக் கொடிகள் பறந்ததோடு, அனைவரும் கறுப்பு உடையணிந்து, எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினேன். அதற்கு அவர்களிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்தது.

இதே கருத்தை வலியுறுத்தி உரிமை மீட்புப் பயணத்தில் பங்கேற்ற கட்சிகளுடைய தலைவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து வெளியிட்ட அறிக்கை, “தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகவே அமைந்தது. மாநில உரிமைக்காக எங்கள் சொந்த வேறுபாடுகளைக் கடந்து இணைந்து நிற்போம். மக்களின் உரிமையை வென்றெடுப்போம்”, என மத்திய அரசுக்கு உணர்த்தும் வகையில் அந்தக் கூட்டறிக்கை அமைந்திருந்தது. தமிழகத்தில் இத்தனை கட்சிகளும் ஒருமித்த குரலுடன் அறிக்கை வெளியிட்டதை அண்டை மாநிலங்களும் ஆச்சரியத்துடன் பார்த்தன.

மூன்றாம் நாள் பயணத்தில் காவிரியின் கிளை நதியான வெட்டாற்றில் இறங்கி நடந்தோம். ஆறு என்றால் நீந்த வேண்டும். ஆனால், சுடுமணலாய் கிடக்கும் ஆற்றில் கால் நனைக்கவும் தண்ணீர் இல்லாதபோது, கண்ணீர் வெள்ளத்தில் மட்டுமே நீந்த முடியும்! வேதனை மிகுந்த வாழ்வை எதிர்கொண்டிருக்கும் விவசாயிகள் காய்ந்த நெற்பயிரை சுமந்தபடி ஓடோடி வந்து முறையிட்டனர். வாடிய பயிரைக் கண்டபோது வாடிய வள்ளலார் ராமலிங்கர் இன்றிருந்தால், ஒவ்வொரு நாளும் அவர் வாட்டத்துடன்தான் இருந்திருப்பார்.

மீட்புப் பயணம் சென்ற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் திரண்டு வந்தனர். குறிப்பாக, இளைஞர்கள் அதிகளவில் குவிந்ததுடன், பெண்கள் பலரும் பேராதரவுக் காட்டினர். பள்ளிக்கூடங்கள் இருந்த பகுதிகளைக் கடந்தபோது, மாணவ – மாணவியர் ஓடி வந்து கை கொடுத்தும், வணக்கம் தெரிவித்தும் வரவேற்றனர். ஆர்வமிகுதியால் பார்க்க வந்திருக்கிறார்கள் எனக் கருதியபடி அவர்களிடம், “எதற்காக நாங்கள் வந்திருக்கிறோம் தெரியுமா?” எனக் கேட்டபோது, “காவிரிக்காக வந்திருக்கீங்க”, என்று அவர்கள் பளிச்சென சொன்ன பதிலில், தமிழகத்தின் அடுத்த தலைமுறை எத்தனை விழிப்பாக இருக்கிறது என்பது தெரிந்தது.

அன்றிரவு, திருவாரூரில் தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் தங்கினேன். எத்தனையெத்தனை நினைவுகள்! தலைவர் பிறந்த 1924-ம் ஆண்டில்தான் சென்னை மாகாணத்திற்கும் – மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையே காவிரி நதி நீர் ஒப்பந்தம் உருவானது. அதற்கு முன்பிருந்தே தண்ணீர் பங்கீட்டில் சிக்கல்தான். ஆனாலும் வரலாறு அறியாத மூடர்கள் – வஞ்சக எண்ணம் கொண்ட அரசியல் பிழைப்பாளர்கள் – வாய்மை எனப்படுவது யாதன்றே அறியாத வாய் படைத்தவர்கள் சிலர், 1974-ல் திமுக ஆட்சியில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்படவில்லை என்றும் அதனால்தான் காவிரியில் பிரச்சினை உருவானது என்றும் கதைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள். 1924ல் போடப்பட்ட ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தேவையில்லை. 1974ல் அது காலாவதியாகவில்லை. ஒப்பந்தம் தொடரும் என்பதுதான் திமுக அரசின் நிலைப்பாடு. நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பிலும், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பிலும் அது உறுதி செய்யப்பட்டு, திமுக எடுத்த நிலைப்பாடே சரியானது என்பது நிரூபிக்கப்பட்ட பிறகும், பொய்யை விற்றுப் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியப் பிரதமர்களாக இருந்த இந்திராகாந்தி அம்மையார், வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், மன்மோகன்சிங் என ஒவ்வொருவரின் காலகட்டத்திலும், காவிரி உரிமைக்காகத் தொடர்ந்து பாடுபட்டவர், காவிரி மண்ணின் மைந்தரான நம் தலைவர் கருணாநிதி. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ல் மேட்டூர் அணையைத் திறக்கும் வகையில் கர்நாடகத்திடமிருந்து தண்ணீர் பெற்றுத்தர அவர் எடுத்த முயற்சிகளை நாடறியும். விவசாயப் பெருமக்கள் அறிவார்கள். குறுவைக்கும் சம்பாவுக்கும் தேவையான நீரைப் பெற்றுத் தந்ததுடன், நடுவர்மன்றம் அமையக் காரணமாக இருந்து, அதன் இடைக்காலத் தீர்ப்பு, இறுதித்தீர்ப்பு கிடைக்கவும் உறுதிக்காட்டியவர் தலைவர் கருணாநிதி.

இறுதித் தீர்ப்புக்குப் பிறகும் தமிழகம் உள்ளிட்ட காவிரி நீர் தொடர்புடைய மாநிலங்கள் தாக்கல் செய்த வழக்குகளை உச்ச நீதிமன்றம் தொடர்ந்து விசாரித்து வந்ததால், தீர்ப்பு செயல்பாட்டுக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டது. வழக்கு விசாரணை முடித்து, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபிறகு, திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலம், இறுதித்தீர்ப்பை மத்திய அரசிதழில் வெளியிட அன்றைய பிரதமர் மன்மோகன்சிங்கிடம் அழுத்தம் தரச்செய்தவரும் தலைவர் கருணாநிதிதான். டெல்டா மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரியைக் காப்பாற்றி, இலவச மின்சாரம், கூட்டுறவுக்கடன் ரத்து, உழவர் சந்தை உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை விவசாயப் பெருங்குடி மக்களுக்காக செயல்படுத்தியவரும் தலைவர் கருணாநிதிதான்.

இந்த உண்மைகள் யாவும் வரலாற்றின் பக்கங்களில் இடம்பிடித்திருக்கும் நிலையில், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய பாஜக அரசைச் சேர்ந்தவர்களும், அதனை வலியுறுத்தாத மாநில அதிமுக அரசைச் சார்ந்தவர்களும் திமுக மீது பழிபோட்டு தங்களைக் காப்பாற்றிக்கொள்ள நினைக்கும் கயமைத்தனத்தை எண்ணியபடியே தலைவர் கருணாநிதியின் இல்லத்தில் அன்றைய இரவு கடந்தது.

நான்காம் நாள் காலையில், எந்த தெருக்களில் தமிழ்க்கொடி ஏந்தி, ‘ஓடிவந்த இந்திப் பெண்ணே கேள்.. நீ தேடி வந்த கோழையுள்ள நாடிதல்லவே’ என முழக்கமிட்டு தலைவர் கருணாநிதி தன் 14 வயதில் போராட்டக்களம் கண்டாரோ, அந்தத் தெருக்களின் வழியே காவிரி மைந்தனான கருணாநிதியின் பிள்ளையாக நான் காவிரி உரிமை மீட்புப் பயணத்தைத் தொடர்ந்தபோது போராட்டக்களத்தில் புத்துணர்வு ஏற்பட்டது.

திருவாரூர் கமலாலயம் குளம் அருகே வந்தபோது ஒரு சிறுமி ஆர்வமாக வந்து, ‘தளபதி வாழ்க’ என உணர்ச்சிப்பூர்வமாக வாழ்த்து முழக்கங்களை எழுப்பியபடி எங்களுடன் நடக்க ஆரம்பித்தார். அவரது உணர்வுக்கும் ஆர்வத்துக்கும் மதிப்பளித்து, தோளைத் தொட்டுப் பாராட்டி உடன் நடந்தோம். அப்போது அந்தச் சிறுமி, தனது நோட்டுப் புத்தகத்தை எடுத்து, அதில் எழுதி வைத்திருந்த முழக்கங்களை மத்திய அரசுக்கு எதிராக எழுப்பினார். நஞ்சை நிலத்தின் பிஞ்சு உள்ளங்களிலும் காவிரி உரிமை உணர்வு கரைபுரண்டோடுவதை உணர முடிந்தது. ​வழிநெடுக மாற்றுத்திறனாளிகள், பார்வையிழந்தோர் எனப் பலரும் தங்கள் உள்ளத்து வலிமையுடன் திரண்டிருந்து ஆதரவளித்தனர். உரிமை மீட்புப் பயணத்தில் என்னுடன் தொடர்ந்து பயணித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் முத்தரசன், இந்த எழுச்சியைத் தன் உரையில் குறிப்பிட்டுப் பேசினார்.

முக்கொம்பிலிருந்து எங்கள் பயணம் ஏப்ரல் 7-ல் தொடங்கிய நிலையில், மற்றொரு குழுவாக, ஏப்ரல் 9-ம் தேதி அரியலூரிலிருந்து இன்னொரு பயணம் தொடங்கியது. அதில் திமுகவின் சார்பில் துணை பொதுச்செயலாளர்கள் ஐ.பெரியசாமி, வி.பி.துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா போன்ற முன்னணியினரும் தோழமைக் கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு உணர்வுமிக்க பயணத்தை பொதுமக்கள்-விவசாயிகளின் பேராதரவுடன் கடலூர் நோக்கித் தொடர்ந்தனர். ​எங்களுடைய பயணத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மாபெரும் அணி வகுப்பு திரண்டது. காவிரியில் தமிழகத்தின் உரிமைக்காக பல சட்டப்போராட்டங்களை நடத்திய விவசாய அமைப்பைச் சேர்ந்த பெரியவர் ரெங்கநாதன் அந்த அணி வகுப்பில் பங்கேற்றார்.

திருவாரூர் மாவட்டத்தைத் தொடர்ந்து, நாகை மாவட்டம் வேளாங்கண்ணியிலிருந்து எங்களது காவிரி உரிமை மீட்புப் பயணம் ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கியது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகளின் நலன் உணர்ந்த பிற துறையினர், வணிகர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் எனப் பல்லாயிரவர் கட்சி அடையாளமின்றி எங்களுடன் பயணத்தில் பங்கேற்று பேரெழுச்சியை ஏற்படுத்தினர். நாளுக்கு நாள் பெருகும் எழுச்சியை மத்திய-மாநில ஆட்சியாளர்களால் பொறுத்துக் கொள்ள முடியுமா?

சீர்காழியில், வைத்தீஸ்வரன் கோயிலில் தங்கியிருந்தபோது, பயணத்தை நிறுத்தச் சொல்லி டி.எஸ்.பி. ஒருவர் சம்மனுடன் வந்தார். பிரதமர் மோடிக்கு எதிரான கருப்புக் கொடிப் போராட்ட ஆயத்தப் பணிகள் மாநிலம் முழுவதும் தீவிரமடைந்ததைக் கண்டு மிரண்டுப் போனதன் விளைவுதான் இது. திமுக என்பது பனங்காட்டு நரி. இத்தகைய சலசலப்புகளுக்கு அஞ்சாது. அதனால் காவல் அதிகாரியிடம், “சம்மனை என் அலுவலத்திலோ வீட்டிலோ கொடுங்கள். இங்கே பெற முடியாது. வேண்டுமானால், கைது செய்து கொள்ளுங்கள். விளைவுகளை எதிர்கொள்ளுங்கள்”, என்றேன். அவர் திரும்பிச் சென்றுவிட்டார்.

​காவிரி உரிமை மீட்புப் பயணத்தின் இறுதிநாளான ஏப்ரல் 12 அன்றுதான் தமிழகத்திற்கு வருகை தரும் மோடியை எதிர்த்து தலைநகராம் சென்னையில் எழுச்சிமிகு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மீட்புப் பயணத்தில் பங்கேற்ற நாங்கள் கருப்புச் சட்டை அணிந்து எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தினோம். கருப்புக் கொடிக்குப் பயந்து சாலைப் பயணத்தைத் தவிர்த்து வானத்தில் பறந்த பிரதமர் மோடிக்கு கருப்பு பலூன்களைப் பறக்கவிட்டு எதிர்ப்பு காட்டி அதிரவைத்த திமுகவினரின் தீரமிக்க போராட்டம் நாடு முழுவதும் பேசப்பட, சமூக வலைதளங்களில் #GoBackModi என்ற ஹேஷ்டேக் உலகளவில் தமிழ்நாட்டின் உணர்வையும் உரிமைக்குரலையும் கொண்டு சேர்த்த தகவல் வந்தபோது, பயணத்தில் இருந்த எங்களுக்கு வலிமையைக் கூடியது.

இரு குழுக்களாக மேற்கொண்ட காவிரி உரிமை மீட்புப் பயணம் ஏப்ரல் 12 அன்று கடலூரில், கடலுடன் கடல் சங்கமித்ததைப் போல நிறைவடைந்தபோது, கண்ணுக்கெட்டிய தூரம் வரை மற்றொரு மக்கள் கடல். தோழமைக்கட்சித் தலைவர்கள் பங்கேற்று உணர்ச்சிமிகு உரையாற்றி, எனக்குள்ள பொறுப்பை எடுத்தியம்பினர். அவர்களின் பாராட்டுரைகளில் ஒளிவீசிய கருத்து முத்துகளை எடுத்து இதயத்தில் வைத்துள்ளேன். அதனால்தான், காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை போராட்டம் ஓயாது என்பதை உறுதிபடத் தெரிவித்தேன்.

ஏப்ரல் 13 அன்று அண்ணா அறிவாலயத்தில் மீண்டும் அனைத்துக் கட்சிகளின் தலைவர்களுடன் ஆலோசனை நடத்திவிட்டு, அதன்பின் அனைவரும் ஆளுநரிடம் மனு அளிக்கச் சென்றோம். ஆளுநர் மாளிகை வாயிலில் சந்தித்த செய்தியாளர்கள், “ஆளுநருக்கு கருப்புக் கொடி காட்டிவிட்டு அவரிடமே மனு அளிக்கிறீர்களே?” என்றார்கள். அவர்களிடம், “மாநில உரிமைகளைப் பறிக்கும் வகையில் செயல்படும்போது அவருக்கு எங்கள் உறுதியான எதிர்ப்பைக் காட்டுகிறோம். காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்ற உத்தரவை நிறைவேற்ற வேண்டியவர் மத்திய அரசுக்குத் தலைமை வகிக்கும் பிரதமர். அந்த மத்திய அரசின் பிரதிநிதியாக இருப்பவர் ஆளுநர் என்பதால்தான் அவரிடம் மனு அளிக்கிறோம்”, என விளக்கம் தெரிவித்தேன்.

காவிரி உரிமையை நிலைநாட்ட மேற்கொண்ட இந்தப் பயணம், போராட்டக் களத்தின் ஒரு கட்டம். காவிரி டெல்டா மக்கள் நம்முடன் கரம் கோத்து வெற்றி பெற வைத்த பயணம். களத்தில் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் யுத்தம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. மேலாண்மை வாரியம் உரிய அதிகாரங்களுடன் அணைகள் அனைத்தும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கி முறையான நீர்ப்பங்கீடு நடைபெறும் வகையில் அமைக்கப்பட்டு, காவிரியில் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்படும்வரை நமது பாதை மாறாது; பயணமும் நிற்காது. உணர்வுபூர்வமான போராட்டங்கள் ஒருபோதும் ஓயாது.”

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.