ஜெயலலிதா ஆடியோவை ரிலீஸ் செய்து தூத்துக்குடி சம்பவத்தை திசை திருப்புவதா? -ஸ்டாலின்

ஜெயலலிதா ஆடியோவை ரிலீஸ் செய்து தூத்துக்குடி சம்பவத்தை திசை திருப்புவதா? -ஸ்டாலின்

சென்னை விமான நிலையத்தில் நேற்று (மே 26) மாலை செய்தியாளர்களைச் சந்தித்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், “13 பேரைச் சுட்டு தள்ளியுள்ளது இந்த ஆட்சி. இந்த ஆட்சி எப்போது ஒழியும் என்ற எண்ணம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள நிலையில், அதனை திசை திருப்புவதற்காக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை ஆட்சியாளர்கள் பயன்படுத்துகின்றனர்” என்று குற்றம்சாட்டினார். அதாவது தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் திசை திருப்பவே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பேசிய ஆடியோ வெளியிடப்பட்டதாக ஸ்டாலின் குறிப்பிட்டார்.\

முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாமல் கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மறைந்தார். இவரது, இறப்பில் சந்தேகம் இருப்பதாக வழக்குகள் தொடரப்பட்டதை அடுத்து ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்கள் ஆகியோரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது. மேலும், சிலரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தஷீலா நாயர், குடும்ப டாக்டர் சிவக்குமார், கவர்னர் மாளிகை அலுவலக ஊழியர் சீனிவாசன் ஆகியோர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆகினர். இவர்களிடம் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூரபாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

அப்போது, கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதித்து இருந்தபோது 52 வினாடிகள் கொண்ட ஆடியோ பதிவு செய்யப்பட்டதாக கூறி, அதனை மருத்துவர் சிவக்குமார் இன்று ஆணையத்தில் தாக்கல் செய்தார்.

அந்த ஆடியோ சற்று நேரம் முன்பு வெளியிடப்பட்டது. அந்த ஆடியோவில், மருத்துவர் அர்ச்சனா, மருத்துவர் சிவக்குமார் ஆகியோருடன் ஜெயலலிதா உரையாடுகிறார். சிவக்குமார் தாக்கல் செய்துள்ள ஆடியோ உரையாடல் என்பது 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 27ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 52 விநாடிகள் நீடிக்கும் அந்த ஆடியோவில் ஜெயலலிதா மூச்சுத் திணறலுடன் பேசுவது பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஜெயலலிதா: ஆடியோ பதிவு செய்வது சரியாக கேட்கிறதா? (இருமுகிறார்)

மருத்துவர் சிவக்குமார்: சிறப்பாக இல்லை.

ஜெயலலிதா: அப்ப இருக்கும்போது கூப்பிட்டேன்.

சிவகுமார்: அப்ப அப்ளிகேஷனை டவுன்லோடு பண்ண முடியல.

ஜெயலலிதா: நீங்க ஒண்ணுகெடக்க ஒண்ணு செய்றீங்க.

ஜெயலலிதா: எடுக்க முடியலைனா விடுங்க. (மீண்டும் இருமுகிறார்)

ஜெயலலிதா: தியேட்டர்ல ஃப்ரன்ட் சீட்ல விசிலடிக்கற மாதிரி இருக்கு.

இதன் பிறகு, மருத்துவர் அர்ச்சனா, ஜெயலலிதாவின் ரத்த அழுத்தத்தைப் பரிசோதனை செய்கிறார்.

ஜெயலலிதா: எவ்வளவுமா?

அர்ச்சனா: 140… ஹையா இருக்கு.

ஜெயலலிதா: பை?

அர்ச்சனா: 140/80

ஜெயலலிதா: இட்ஸ் ஓகே ஃபார் மி. நார்மல்.

என்பதுடன் அந்த ஆடியோ நிறைவடைகிறது. இந்த ஆடியோவை தற்போது திடீரென விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ளது ஏன் என்று பல்வேறு தரப்பினர் இடையே சந்தேகம் எழுந்தது.

இந்த நிலையில், இது தொடர்பாக ஊடகத்துக்குப் பேட்டியளித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 2014க்குப் பிறகுத் தன் கைப்படவே டைரி எழுதுகிறார். வெளியிடப்பட்டுள்ளது ஜெயலலிதாவின் உணவுப் பட்டியல் அல்ல. அவரது உடல்நிலை குறித்த குறிப்புகள். தனது சர்க்கரை அளவு உள்ளிட்டவற்றை அவரே பரிசோதனை செய்து குறிப்பெடுத்துக் கொள்கிறார். இவற்றை தன் கைப்படவே ஜெயலலிதா எழுதியுள்ளார். இது மருத்துவமனையில் இருந்தபோது எடுத்த குறிப்பல்ல. ஜெயலலிதா வீட்டில் இருக்கும்போதே எடுத்த குறிப்பு.

ஜெயலலிதா செப்டம்பர் 22ஆம் தேதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போதே அவருக்கு மூச்சுத் திணறல் இருந்தது. ஆனால், பிறகுச் சரியாகிவிட்டது. அதன் பிறகு, நுரையீரல் நிபுணரான டாக்டர் நரசிம்மன் அவரை வந்து பார்த்தார். அவரிடம் மூச்சுத் திணறல் பற்றித் தெரிவித்தார் ஜெயலலிதா. இதைக் கேட்ட நரசிம்மன் அடுத்த முறை மூச்சுத் திணறல் வரும்போது, அந்த சத்தத்தைப் பதிவுசெய்யும்படி கூறினார். அடுத்த முறை மூச்சுத் திணறல் ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட ஒலிப்பதிவுதான் இது. மருத்துவர் நரசிம்மனுக்காக ஜெயலலிதா சொல்லி எடுக்கப்பட்ட ஆடியோதான் அது” என்று விளக்கமளித்தார்.

 

error: Content is protected !!