புதிய கல்விக் கொள்கை- போராட்டத்தை விட்டுப்புட்டு கருத்து சொல்லங்கஜீ- அமைச்சர் ஜவடேகர்

புதிய கல்விக் கொள்கை- போராட்டத்தை விட்டுப்புட்டு கருத்து சொல்லங்கஜீ- அமைச்சர் ஜவடேகர்

”புதிய தேசியக் கல்விக் கொள்கை இன்னும் உருவாக்கப்படவில்லை. அதற்காக வரைவுகள் எழுதப்படவில்லை. கல்விக் கொள்கை வரைவைத் தயார் செய்ய சில கொள்கை முன்மொழிவுகளை மட்டுமே மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதாவது முன்னாள் அமைச்சகச் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியம் தலைமையிலான ஐவர் குழு வழங்கியிருப்பது, பரிந்துரைகள்தான், அது புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அல்ல. ஏனென்றால், அது அமைச்சரவையின் பார்வைக்கும் வைக்கப்படவில்லை. அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் வழங்கவில்லை. இந்த புதிய வரைவு கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை உருவாக்குவதற்கான அடிப்படையாக அமைந்துள்ளது. எனவே ஆசிரியர், மாணவர், பெற்றோர், கல்வியியல் செயல்பாட்டு அமைப்பினர், அரசியல் கட்சியினர் என அனைவரும் இந்த ஆவணத்தைப் படித்து ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களையும் மத்திய அரசுக்கு வழங்கிட முன்வர வேண்டும். இதற்கான கருத்துக்களை அனுப்பும் தேதியை செப்டம்பர் 30-ந் தேதிவரை நீட்டித்துள்ளோம். இதே ஆந்தை இணையதளத்தில் 99 பக்க புதிய கல்விக்கொள்கைக்கான தமிழ் வரைவு அறிக்கையை காணலாம்” என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

edit aug 28

இதுகுறித்து அவர், “கல்வியில் பல்வேறு சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு ஒவ்வொரு நாடும் கடுமையாக பாடுபடுகின்றன. அதோடு, குறிப்பிட்ட கால இடைவெளியில் கல்வியை மறுஆய்வும் செய்து வருகின்றன. சுதந்திரத்துக்குப் பிறகு நாமும் பெரிய முயற்சிகளை மேற்கொண்டோம். இதற்காக முதலில் முதலியார் கமிஷனும், அடுத்ததாக கோத்தாரி கமிஷனும் நியமிக்கப்பட்டன. கல்விக்கான தேசியக்கொள்கை, 1986-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டு, 1992-ம் ஆண்டில் மாற்றம் செய்யப்பட்டது. அன்றில் இருந்து இப்போது 25 ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே, ஆராய்ச்சிகள், கண்டுபிடிப்புகள், தரமான கல்விக்கான நோக்கம், மாறிவரும் மக்கள் தொகையின் தேவைகள் ஆகியவற்றுக்காக தேசிய கல்விக் கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது ஒரு தொடர் முயற்சிதான்.

பள்ளிக் கல்விக்காக 13 கருப்பொருட்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதில், குழந்தைகள் நலன், ஆசிரியப் பணி, மொழி போன்றவை அடக்கம். இவற்றை அனைவருமே ஏற்றுக்கொள்வார்கள். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொருவரும் கருப்பொருள்கள் குறித்து யோசனை தெரிவிக்கலாம். உயர் கல்விக்காக 20 கருப்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மத்திய நிறுவனங்கள், மாநில பல்கலைக்கழகங்கள், திறன் மேம்பாடு, திறந்த நிலை பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி, புதிய அறிவு போன்றவை இதில் அடக்கம். மேலும் பல கருப்பொருட்கள் பற்றி ஆலோசிக்கப்படுகிறது.

கடந்த 26.1.16 அன்றிலிருந்து www.MyGov.in என்ற இணையதளம் மூலமாக விரிவாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. இதில் மக்களுக்காக சில யோசனைகள் கூறப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் மக்களின் ஆலோசனை மற்றும் கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன. 31.10.15-க்குள் 29 ஆயிரம் பதில்கள் பெறப்பட்டன.

கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம், அடிப்படையளவிலான கலந்தாலோசனை தொடங்கியது. அதன்படி, ஒரு லட்சத்து 10 ஆயிரம் கிராமங்கள், 3 ஆயிரத்து 15 வட்டாரங்கள், 406 மாவட்டங்கள், 962 உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய பகுதிகளில், பல்வேறு கல்விக் குழுக்களின் உறுப்பினர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், கல்வியாளர்கள் ஆகியோர் கருப்பொருட்கள் குறித்து விவாதித்து ஆலோசனை அளித்துள்ளனர்.

இந்தியா சந்திக்கும் சவால்களை அணுகுவதற்கும், அனைவருக்கும் கல்வி வாய்ப்பை வழங்குவதற்கும் இந்த புதிய கல்விக்கொள்கை ஐந்து தூண்களைக் கொண்டதாக இருக்கும். அணுகக்கூடியதாகவும், தரமுள்ளதாகவும், எளிதானதாகவும், சமபங்களிப்பதாகவும், பொறுப்புள்ளதாகவும், அதாவது இந்த 5 தூண்கள் அமைந்ததாக இருக்கவேண்டும்.

கடந்த 70 ஆண்டுகளாக வீடு வீடாக கல்வியை கொண்டுசென்றோம். ஆனால் இன்று கல்வியின் தரம் என்பதும் ஒரு சவாலாக உள்ளது. தொடக்கக் கல்வியில் இருந்து உயர் கல்வி வரை அதை மேம்படுத்தியாகவேண்டும். புதிய கல்விக் கொள்கையின் முக்கிய நோக்கம் தரம்தான்.

கல்வியின் தரத்தை மேம்படுத்தவேண்டும், அதை அனைத்து தரப்பினரிடமும் கொண்டு செல்லவேண்டும் என்பதுதான் உண்மையான சவாலாக உள்ளது. எனவே, இதற்கு ஏற்ற கருத்துகளை அனைவருமே தரவேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள். கருத்துக்களை அனுப்பும் தேதியை செப்டம்பர் 30-ந் தேதிவரை நீட்டித்துள்ளோம். ஆந்தை – புதிய கல்விக் கொள்கை என்ற லிங்க்கில் 99 பக்க புதிய கல்விக்கொள்கைக்கான தமிழ் வரைவு அறிக்கையை காணலாம்.

இதற்கிடையே புதிய கல்விக் கொள்கையில் அரசியல் விளையாட்டை நடத்த சிலர் முற்படுகின்றனர். இது நடந்துவிடக்கூடாது என்று அச்சம் கொண்டுள்ளேன். ஏனென்றால், அது ஒரு கட்சியின் கோட்பாடு அல்ல. கல்வி என்பது தேசிய கோட்பாட்டைக் கொண்டதாகும். எனவே, இதில் தவறான கருத்துகளை பரப்புவது, உள்நோக்கத்தோடு சந்தேகங்களை கிளப்புவது போன்றவை தேவையற்றது. சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கு அரசியல் சாசனத்தின் 29 மற்றும் 30ம் ஷரத்துகள் அளிக்கும் உரிமையை நசுக்குவதாக போராட்டம் நடத்துவதாக அறிகிறேன்.அரசியல் சாசனம் தந்துள்ள எந்த உரிமையும் நசுக்கப்படமாட்டாது என்பதையும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்டோர், சமுதாயத்தில் பின்தங்கிய அனைவருக்கும் கல்வியில் சமமான வாய்ப்பு அளிக்கப்படும் என்பதையும் இதன்மூலம் உறுதி அளிக்கிறேன். அதனாக் அனைவரும் செப்டம்பர் 30-ந் தேதிக்குள் புதிய கல்விக்கொள்கை பற்றிய கருத்துகளை தெரிவிக்கும்படி மீண்டும் கேட்டுக்கொள்கிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!