தமிழ்நாட்டிலே மீத்தேன் எடுக்கும் திட்டம் கேன்சல்! – மத்திய அமைச்சர் அறிவிப்பு – AanthaiReporter.Com

தமிழ்நாட்டிலே மீத்தேன் எடுக்கும் திட்டம் கேன்சல்! – மத்திய அமைச்சர் அறிவிப்பு

தமிழகத்தில் மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர் களிடம் பேசிய மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் நரேந்திர பிரதான், விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக இத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக குறிப்பிட்டார். மேலும் தமிழகத்தில் ஷேல் எரிவாயு திட்டம் தொடர்பாக ஆய்வும் நடத்தப்படமாட்டாது என்றார். ஒரே இடத்தில் இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டதாலும், உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்திற்கு தமிழக அரசின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக கூறினார்.

methene nov 10

டெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள ஊடக செய்தித்துறை ஏற்பாட்டில் ஊடகங்களின் பொருளாதார ஆசிரியர்கள் 2 நாள் மாநாடு நடைபெறுகிறது. இதில் கலந்துக் கொண்ட மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில்,தான் தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கடும் எதிர்ப்பு, நிலம் கையகப்படுத்தும் விஷயத்தில் உள்ள பிரச்சினைகள், இரு நிறுவனங்களுக்கு இடையிலான பிரச்சினை ஆகியவை காரணமாக மத்திய அரசு கைவிட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும் நாகப்பட்டினத்தில் ஷெல் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனம் சார்பில் ஆய்வு எதுவும் மேற்கொள்ளப்பட மாட்டாது. கெயில் எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டத்தில் தமிழக அரசு உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லை. கேரள அரசு தற்போது ஒத்துழைப்பு அளித்துள்ளது, தமிழக அரசின் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம் என்றும் அவர் கூறினார். மற்றொரு கேள்விக்கு தமிழ்நாட்டில் இருந்து எத்தனால் எடுக்கவில்லை. இப்போதைக்கு 110 கோடி லிட்டர் எத்தனால் கொள்முதல் செய்யப்பட்டாலும், இன்னும் 40 கோடி லிட்டர் தேவை. தமிழ்நாட்டில் இருந்து எத்தனால் கிடைத்தால் மகிழ்ச்சி அடைவோம் என்றும் கூறினார்.

முன்னதாக தமிழ்நாட்டில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் பூமிக்கு அடியில் மீத்தேன் எரிவாயு இருப்பதாக ஆய்வில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, இந்த எரிவாயுவை எடுத்து பயன்படுத்த திட்டமிட்ட மத்திய அரசு, இதற்கான ஒப்பந்தத்தை ‘கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட்’ என்ற தனியார் நிறுவனத்துக்கு வழங்கியது. இது தொடர்பான ஒப்பந்தம் கடந்த 2010-ம் ஆண்டு ஜூன் மாதம் கையெழுத்து ஆனது. இதனால் அந்த நிறுவனம், அந்த திட்டம் தொடர்பான சில பூர்வாங்க பணிகளை தொடங்கியது. தஞ்சாவூரில் ஓர் அலுவலகத்தையும் திறந்தது.

இதற்கிடையே, மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு காவிரி டெல்டா பகுதி விவசாயிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எரிவாயு எடுக்க தமிழக அரசு தடை விதித்தது. தொடர்ந்து இத்திட்டத்தை முன்னெடுக்க விவசாயிகளும், அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது