ஆர்கே நகர் இடைத்தேர்தல்: திமுகவுக்கு ஆதரவு -வைகோ அறிவிப்பு – AanthaiReporter.Com

ஆர்கே நகர் இடைத்தேர்தல்: திமுகவுக்கு ஆதரவு -வைகோ அறிவிப்பு

சென்னை ஆர்கே நகர் தொகுதிக்கான தேர்தல் வரும் டிச.21ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில், திமுக சார்பில் கடந்த முறை வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மருது கணேஷ், மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ் கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி ஆகிய கட்சிகள் ஆதரவளித்துள்ளன. இந்நிலையில் மதிமுகவும் திமுகவுக்கு ஆதரவளித்துள்ளது. . மதிமுகவின் ஆதரவு குறித்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய திமுக செயல் தலைவர் ஸ்டாலின், “மதிமுகவின் முடிவை வரவேற்கிறோம்” என்றார். மதிமுகவின் இந்த முடிவை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் வரவேற்றுள்ளார்.

13 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுகவைத் தேர்தல் களத்தில் ஆதரிக்கும் நிலைப்பாட்டை மதிமுக எடுத்திருக்கிறது. இறுதியாக 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவுடன் மதிமுக கூட்டணி சேர்ந்து போட்டியிட்டிருந்தது. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலுக்கு மதிமுகவின் ஆதரவு குறித்து வைகோ அளித்துள்ள அறிக்கை வரும் காலத்திலும் திமுகவுடன் கூட்டணியைத் தொடர்வது போலவே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக மதிமுகவின் உயர்நிலைக் கூட்டம் இன்று (டிசம்பர் 3) எழும்பூரில் உள்ள மதிமுக தலைமையகமான தாயகத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறுகின்ற ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரிப்பதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திராவிட இயக்கத்தையும், தமிழ்நாட்டையும் காக்கும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வைகோ தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “அனைத்துத் துறைகளிலும் அதிமுக அரசு தோல்வியடைந்துள்ளது. மத்தியில் ஆளும் பாஜக ஆளுநர் மூலம் அதிமுகவை இயக்கி ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றத் துடிக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக பாஜக செயல்படுகிறது. நீட் தேர்வு, நவோதயா என மாநில சுய உரிமையைப் பறிக்கும் வகையில் பாஜக செயல்படுகிறது. பாஜக நடத்திவரும் அரசியல் திருவிளையாடல்களை அதிமுக வேடிக்கை பார்த்து வருகிறது.

பாஜகவும், இந்துத்துவ சக்திகளும் திராவிட இயக்கத்தை அழிக்கத் துடித்து வருகிறது. இந்த அவலங்களை வேடிக்கை பார்க்க முடியாது. தமிழகத்தையும், திராவிட இயக்கத்தையும் காக்க வேண்டிய கடமை மதிமுகவுக்கு இருக்கிறது. மாநக்ச் சுயாட்சி தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் இயற்றியவர் திமுக தலைவர் கருணாநிதி. எனவே கட்சியின் ஒருமித்த கருத்தோடு இந்த முடிவை எடுக்கிறோம். தற்போது மதிமுகவுக்கும், திமுகவுக்கும் இடையில் ஒரு நல்லிணக்கம் நிலவுகிறது. இதன் தொடக்கப் புள்ளியாகவும் இது இருக்கலாம். இந்த அடிப்படையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் மருது கணேஷை ஆதரிக்கிறோம்” என்றார்.