ஆன் லைன் விறபனை: புதிய நடைமுறை அமல்! – AanthaiReporter.Com

ஆன் லைன் விறபனை: புதிய நடைமுறை அமல்!

இப்போதெல்லாம் மக்கள் தாங்கள் உட்கார்ந்த இடத்திலிருந்தே, தங்களுக்கு தேவையான உணவு தொடங்கி மளிகை பொருட்களில் இருந்து, ஆடைகள், ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், படுக்கை விரிப்புகள் வரை வாங்க ஆன்லைன் ஷாப்பிங் நமக்கு பேரூதவி புரிகிறது. இதனால், பெரும்பாலான மக்கள், தற்போது இந்த வழிமுறையை பின்பற்ற துவங்கியுள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த தீபாவளி சீசனில் மட்டும் ரூ. 19 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் நிகழ்ந்துள்ளது. இது கடந்தாண்டை ஒப்பிடும்போது 45 சதவீத கூடுதல் வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள், பண்டிகை காலங்களில், முன்னணி நிறுவனங்களின் பொருட்களை, யாருமே எதிர்பார்க்காத தள்ளுபடி விலைகளுக்கு வழங்கி வருகின்றன. இந்த விலை, எவ்வாறு அந்த நிறுவனங்களுக்கு கட்டுப்படியாகின்றன. மற்ற நாட்களில், ஏன் அதுபோன்ற தள்ளுபடிகளை அந்நிறுவனங்கள் வழங்க முன்வருவதில்லை உள்ளிட்ட காரணங்களை முக்கிய அம்சங்களாக கொண்டு முன்னணி செய்தி சேனல் ஒன்று, ஆய்வை மேற்கொண்டது.

அந்தச் செய்தி சேனல் நிறுவனம், உத்தரபிரதேச போலீசாரின் துணையுடன் நடத்திய ஆய்வில், மீரட், பிரம்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் குடோன்கள் இயங்கிவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த குடோன்களில், ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்திற்காக, முன்னணி நிறுவனங்களின் பெயரிலான போலி பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த ஆய்வில், ஆன்லைன் ஷாப்பிங் மூலம் விற்பனை செய்யப்படும் விளையாட்டு உபகரணங்கள் மற்றும் அதுதொடர்பான பொருட்களில் 60 சதவீதம் மற்றும் உடைகள் பிரிவில் 40 சதவீதம் போலியானவை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் ஆன்லைன் நிறுவனங்கள் பல போலியான முறையில் தள்ளுபடியை அறிவிக்கின்றன. அதாவது, பொருளில் உள்ள அதிகபட்ச சில்லரையை விட கூடுதலாக குறிப்பிடுகின்றனர். அதில் இருந்து கணக்கிட்டு, மிக அதிக சதவீத தள்ளுபடியில் விற்பதாக காட்டிக்கொள்கின்றனர். சிலர், உணவு பண்டங்கள் போன்றவற்றுக்கு காலாவதி தேதி நெருங்கும் நிலையில் இருப்புகளை தீர்க்க அதிரடி தள்ளுபடிகளை அறிவித்து விற்று விடுகின்றனர். இது நுகர்வோரை ஏமாற்றும் செயல். எனவே, இந்த போலி தள்ளுபடிகளையும், தவறான முறையில் நட்க்கும் வணிகத்தையும் ஒழிக்கும் வகையில், புதிய நடைமுறை இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதியில் இருந்து  அமல்படுத்த   பட்டு  உள்ளது.

அதன் படி ஆன்லைனில் விற்கப்படும் பொருட்களில் அதிகபட்ச சில்லரை விலை (எம்.ஆர்.பி.), உற்பத்தி செய்த தேதி, காலாவதியாகும் தேதி, அளவு, உற்பத்தியான நாடு, வாடிக்கையாளர் புகார் மைய (கஸ்டமர் கேர்) விவரங்கள் போன்ற அனைத்தும் கட்டாயம் அச்சிடப்பட வேண்டும். நுகர்வோர் படிப்பதற்கு வசதியாக குறிப்பிட்ட அளவில் அந்த எழுத்து மற்றும் எண் இருக்க வேண்டும் என்று மத்திய நுகர்வோர் நல அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவு நேற்று முதல் (1–ந் தேதி) அமலுக்கு வந்தது. இதற்காக பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பொருட்களுக்கான சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. ஆன்லைனில் பொருட்கள் வாங்கும் நுகர்வோர் நலனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனை செயல்படுத்துவதற்காக ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்கனவே 6 மாதம் அவகாசம் வழங்கப்பட்டது.