விலைக்கு போன விளை நிலத்தில் மறுபடியும் விவசாயம்! – மம்தா மகிழ்ச்சி

விலைக்கு போன விளை நிலத்தில் மறுபடியும் விவசாயம்! – மம்தா மகிழ்ச்சி

மேற்கு வங்க மாநிலம், சிங்கூரில் டாடா நிறுவனத்துக்கு கார் தொழிற்சாலை அமைக்க ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்குப் பிறகு, கடுகு விதைகளைத் தூவி விவசாயத்தை முதல்வர் மம்தா பானர்ஜி வியாழக்கிழமை தொடக்கி வைத்தார்.

பத்தாண்டுகளுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் இடதுசாரி ஆட்சியிலிருந்தபோது, டாடா நிறுவனம் நானோ கார் தயாரிக்க ஆலை அமைக்கவிருந்தது. அதற்காக அரசு விவசாயிகளிடமிருந்து நிலத்தைப் பெற முனைந்தது. மாநில அரசால் சிங்கூர் தேர்வுசெய்யப்பட்டபோது, அதற்கு விவசாயிகளிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியது. எதிர்ப்பை பொருட்படுத்தாமல் தேவையான நிலங்களை கையகப்படுத்த முனைய, அதற்கு மம்தா பானர்ஜி உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்கட்சிகள் விவசாயிகளை ஒன்றிணைத்து போராடின. விவகாரம்  கோர்ட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது.

wb oct 21

அடுத்து வந்த தேர்தலில் மம்தா ஆட்சியைப் பிடிக்க, இடதுசாரி ஆட்சியை இழந்தது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட் கடந்த அக்டோபர் 31-அன்று நிலத்தை மாநில அரசு வலுவில் கையகப்படுத்தியது செல்லாதென்றும், நிலத்தை விவசாயிகளிடமே திரும்பக்கொடுக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது. நிலத்துக்காக வழங்கப்பட்ட இழப்பீடையும் திரும்பத்தர வேண்டியதில்லை எனவும் கூறியது.இதையடுத்து விவசாயிகளிடம் நிலங்களுக்கான பட்டாக்களை ஒப்படைக்கும் நிகழ்வு சிங்கூரில் நடைபெற்றது. தகுதியான நபர்களுக்கு இழப்பீட்டுக்கான காசோலையும் வழங்கப்பட்டது. சிங்கூர் விவசாயிகளிடம் அவர்களது நிலங்கள் ஒப்படைக்கப்பட்ட நிலையில், 10 ஆண்டு போராட்டத்துக்குப் பின்னர், கார் தொழிற்சாலை அமைக்கப்படவிருந்த இடத்தில் விவசாயப் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

அப்போது அந்நிலைத்தில் கடுகு விதைகளைத் தூவி, விவசாயத்தைத் தொடங்கி வைத்து பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, “ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் 65 ஏக்கரைத் தவிர, ஏனைய 997 ஏக்கர் நிலங்களும் விவசாயிகளிடம் ஒப்படைக்கப்படத் தயாராக உள்ளன. அடுத்த மாதம் 10-ஆம் தேதியில், நிலங்களைத் திருப்பி அளிக்கும் நடைமுறைகள் நிறைவடையும்.நிலத்தின் சூழல் குறித்தும், வருங்காலத்தில் என்ன வகையான பயிர்களைப் பயிரிடத் திட்டமிட்டுள்ளனர் என்பது குறித்தும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளேன்”என்று தெரிவித்தார்.

Related Posts

error: Content is protected !!