மலேசியாவில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் – சர்வதேச அமைப்புகள் கவலை – AanthaiReporter.Com

மலேசியாவில் அதிகரிக்கும் குழந்தை திருமணங்கள் – சர்வதேச அமைப்புகள் கவலை

இந்தக் கால குழந்தைகள் உடல் மற்றும் அறிவு ரீதியாக 12 வயதிலேயே பக்குவமடைந்து விடுவதால், குழந்தை திருமணம் சட்டப்படி குற்றமல்ல என்னும் சட்டமொன்றை மலேசியா அரசு கடந்தாண்டு இயற்றிய நிலையில் மலேசியாவில் ஏழைக் குழந்தைகளை வயதானவர்களுக்கு திருமணம் செய்து வைக்ககும் வழக்கம் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க மலேசிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என யூனிசெப் போன்ற சர்வதேச அமைப்புகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றன.

மலேசியாவில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் இஸ்லாம் மதத்தின் ஷரியத் சட்டத்தை பின்பற்றி வருகிறார்கள். மலேசிய இஸ்லாமியர்களின் திருமணம், குடும்பம் மற்றும் தனிப்பட்ட விவகாரங்கள் அனைத்தையும் ஷரியத் நீதிமன்றங்கள் தான் கவனித்து வருகின்றன.

இந்நிலையில் மலேசியாவை சேர்ந்த 15 வயது இளம் முஸ்லிம் பெண் ஒருவர் 44 வயதுடைய ஒருவருக்கு இரண்டாவது மனைவியாக ஜூலை மாதம் திருமணம் செய்துவைக்கப்பட்டார். மலேசியாவிலிருந்து வெளியாகும் நியூ ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் பத்திரிகையும் செய்தி வெளியிட்டது. இந்த திருமணத்திற்கு ஷரியத் நீதிமன்றமும் அந்த பெண்ணின் பெற்றோர்களும் சம்மதம் தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

அதே மாதத்தில் 41 வயதுடைய ஒரு ரப்பர் வியாபாரி தாய்லாந்தை சேர்ந்த 11 வயது பெண்ணை தன் மூன்றாவது மனைவியாக திருமணம் செய்த விஷயம் வெளியானது. அந்த ரப்பர் வியாபாரியின் மனைவிகளில் ஒருவர் இது குறித்து காவல்நிலையத்தில் தகவல் அளித்ததால் விஷயம் அம்பலமானது. இதுபோன்ற குழந்தை திருமணங்கள் பெரும்பாலும் ஏழை எளிய குடும்பங்களில் மோசமான பொருளாதார சூழ்நிலை காரணமாக நடப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஷரியத் சட்டப்படி 16 வயதுக்கு குறைவான முஸ்லிம் பெண்கள் பெற்றோர் மற்றும் ஷரியத் நீதிமன்றத்தின் அனுமதியுடன்தான் திருமணம் செய்து கொள்ளலாம். மேலும் முஸ்லிம் ஆண்களுக்கு 4 மனைவிகள் இருக்கலாம்.

இந்த ஷரியத் சட்டத்தை பயன்படுத்தி பல விஷமிகள் சட்டரீதியாக குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வருகிறார்கள். இதை ஒருபோதும் ஏற்க முடியாது என ஐநாவின் யூனிசெப் அமைப்பு உள்ளிட்ட பல சர்வதேச மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த குற்றங்களை தடுத்து நிறுத்த மலேசிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சர்வதேச அளவில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மலேசியா துணை பிரதமர் வான் ஆசிஜா வான் இஸ்மாயில் ‘‘சமீபத்தில் வெளியான குழந்தைகள் திருமணங்கள் பற்றி மலேசிய அரசு விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் இந்த திருமணங்கள் ஷரியத் நீதிமன்றங்களின் அனுமதியுடன் நடந்ததால் அரசின் கைகள் கட்டப்பட்டுள்ளன’’ என தெரிவித்தார்.

ஆனாலும் முஸ்லிம் பெண்களின் திருமண வயதை 18 ஆக உயர்த்தி சட்டம் இயற்றுவது குறித்து மலேசிய அரசு பரிசீலித்து வருவதாகவும் வான் இஸ்மாயில் தெரிவித்தார்.