மணப் பெண்ணுக்கு கன்னித்தன்மை பரிசோதனை! – மகாராஷ்ட்ரா கொடுமை! – AanthaiReporter.Com

மணப் பெண்ணுக்கு கன்னித்தன்மை பரிசோதனை! – மகாராஷ்ட்ரா கொடுமை!

தேடிப் பிடிச்சு பொருத்தம் பார்த்து நேரம் பார்த்து கமிட் ஆன மணப்பெண்ணுக்கு கன்னித் தன்மை பரிசோதனை நடத்துவதை எதிர்த்த காரணத்தால், மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள ஒரு குடும்பத்தினரை, அவர்களது சாதிப் பஞ்சாயத்து, ஒதுக்கி வைத்துள்ளது. இது குறித்து அக்குடும்பத்தினர் போலீசில் கம்ப்ளையண்ட் செய்துள்ளனர். இதையடுத்து, மக்கள் சமூகப் புறக்கணிப்புக்கு ஆளாகாமல் தடுப்பதற்கான மகாராஷ்டிரா மாநிலச் சட்டத்தின் (Maharashtra Prohibition Of People From Social Boycott Act) கீழ், அம்பர்நாத் நகரைச் சேர்ந்த 4 பேரை தானே போலீசார் கைது செய்தனர்.

புதிதாக திருமணமான ஒரு பெண், திருமணத்துக்கு முன்பு அவர் கன்னியாகத்தான் இருந்தார் என்பதை நிரூபிக்க வேண்டிய வழக்கம் காஞ்சார்பாத் சமூகத்தினர் மத்தியில் இருந்து வருகிறது. இதை எதிர்த்த காரணத்தால், கடந்த ஓராண்டுக் காலமாக தங்கள் சாதிப் பஞ்சாயத்தின் சமூகப் புறக்கணிப்புக்கு தங்கள் குடும்பம் உள்ளாகி இருக்கிறது என விவேக் தமைச்சிகார் என்பவர் தானே நகர் போலீசில் புகார் அளித்திருக்கிறார்.

தங்களுடன் எந்தத் தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என தங்கள் சமூகத்தைச் சேர்ந்த எல்லோருக்கும் சாதிப் பஞ்சாயத்து கட்டுப்பாடு விதித்திருக்கிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.

கடந்த திங்கள் கிழமை எங்கள் பாட்டி இறந்தபோது, அவரது இறுதிச் சடங்குக்கு எங்கள் சமூகத்தைச் சேர்ந்த எவரும் வரவில்லை என்று விவேக் தெரிவித்தார்.

கன்னித் தன்மை பரிசோதனைக்கு ஒரு பெண்ணை கட்டாயப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாக ஆக்கப்படும் என கடந்த பிப்ரவரி மாதமே மகாராஷ்டிரா அரசு அறிவித்திருந்தது. கன்னித் தன்மை பரிசோதனையும் ஒருவகையான பாலியல் தாக்குதல்தான் என்று மாநில உள்துறை இணை அமைச்சர் ரன்ஜீத் அப்போது கூறியிருந்தார்.

கன்னித்தன்மை சோதனை என்ற இந்தக் கொடுமையான வழக்கத்தை எதிர்த்து, காஞ்சார்பாத் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் ஆன்லைனில் விழிப்புணர்வு பிரச்சார இயக்கத்தை தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.