பொறுப்பா இல்லை ; மதுரை கலெக்டரை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க! – ஐகோர்ட் ஆர்டர் – AanthaiReporter.Com

பொறுப்பா இல்லை ; மதுரை கலெக்டரை ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுங்க! – ஐகோர்ட் ஆர்டர்

பார்லிமெண்ட் தேர்தலுக்கான வாக்கு பதிவு நடந்து முடிந்த நிலையில் அந்த வாக்குப்பெட்டிகள் வைத்துள்ள மையத்தில் வட்டாட்சியர் உள்ளிட்டோர் நுழைந்த விவகாரத்தில் மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தமிழகமெங்கும் நடந்தது போல் மதுரை மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ஆம் தேதி முடிந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூன்று அடுக்குப் பாதுகாப்புடன் மதுரை மருத்துவக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் வட்டாட்சியர் சம்பூர்ணம் உள்பட 4 பேர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறைக்குச் சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மதுரை கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் வாக்கு எண்ணும் மையத்தில் வட்டாட்சியர் சம்பூர்ணம் உள்ளிட்டோர் நுழைந்தது தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரியும் வழக்கு தொடர்ந்திருந்தார். குறிப்பாக மாவட்ட ஆட்சியரை இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேர்தல் தொடர்பான ஆவணங்கள் வைத்திருந்த அறைக்குள் நுழைந்திருக்கிறார்கள். ஆவணங்களை எடுத்து சென்றது தேர்தல் விதிகளை மீறிய செயலாகும். தாசில்தார் யாருடைய உத்தரவின் பேரில் விளக்கத்தை அளிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜராகியிருந்த நிரஞ்சன், ஆட்சியரின் உதவியாளர் அறிவுறுத்தலின் பேரில் வட்டாட்சியர் வாக்கு எண்ணும் மையத்திற்குள் சென்றார் எனவும் அங்கிருந்து எந்த ஆவணங்களையும் எடுத்து செல்லவில்லை எனவும் குறிப்பிட்டார்.மேலும், இதுதொடர்பாக சம்பூர்ணம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் உதவியாளர் யாருடையை அறிவுறுத்தலின் பேரில் இந்த உத்தரவை பிறப்பித்தார் என விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சில பாதுகாப்பு குறைபாடுகள் இருந்தது உண்மைதான் எனவும் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய வழக்கறிஞர் பதிவு செய்திருக்கிறார்.

இதை அடுத்து தாசில்தார் மீது நடவடிக்கை எடுக்க முடிந்த தேர்தல் ஆணையத்திற்கு, மாவட்ட ஆட்சியர் மீதோ அல்லது அவரது உதவியாளர் மீதோ நடவடிக்கை எடுக்க முடியாதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு தலைமை தேர்தல் அதிகாரி ஒரு போஸ்ட் மேன் மாதிரிதான் செயல்பட்டுள்ளார் எனவும் தலைமை தேர்தல் அதிகாரியால் யார் மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், எல்லா அரசு அதிகாரிகளும் தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறார்கள் எனவும் ஆணையம் கட்டுப்பாட்டில் அதிகாரிகள் இருக்கும்போது அதிகாரம் இல்லை என எப்படி கூறுவீர்கள் எனவும் கேள்வி எழுப்பினர்.

இதன் முடிவில், மதுரை மாவட்ட ஆட்சியரை மாற்றம் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. அதேபோல், உதவி தேர்தல் அதிகாரியையும் மாற்றம் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர். தேர்தல் ஆணைய நடைமுறையில் தலையிட வேண்டிய கட்டாயம் நீதிமன்றத்திற்கு ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு 3 அடுக்கு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.