மாணவிகளை வீட்டுக்கோ அல்லது கல்விச் சுற்றுலாவோ பேராசிரியர் அழைத்துச் செல்லத் தடை! – AanthaiReporter.Com

மாணவிகளை வீட்டுக்கோ அல்லது கல்விச் சுற்றுலாவோ பேராசிரியர் அழைத்துச் செல்லத் தடை!

நம் நாட்டிலுள்ள கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப்படிப்புகள் படிக்கும் மாணவ மாணவிகள் ஒரு வகையான பாலியல் தொல்லைகளைச் சந்திக்கிறார்கள் என்றால் ‘முனைவர்’ பட்டம் போன்ற மேற்படிப்புகளைப் பயிலும் மாணவ மாணவிகள், அதாவது ‘ஸ்காலர்கள்’ வேறு விதமான பாலியல் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். ஒன்று ‘மறைமுகமானது’, மற்றொன்று ‘அப்பட்டமானது’. முனைவர் பட்டம் பெறும் மாணவ மாணவிகள் சந்திக்கும் பாலியல் ரீதியான பிரச்சினைகள் அப்பட்டமாகப் பட்டப்பகல் வெளிச்சத்தில் நடந்தேறி வருகின்றன. முனைவர் பட்டங்கள் பெரும்பாலும் பணத்திற்காகவும் செக்ஸுக்காகவும் விற்கப்படுகின்றன. ஒரு சில நெறியாளர்களிடம் சிக்கி மாணவ மாணவிகள் படும் பாடுகளைச் சொல்லி மாளாது. ‘சப்மிஷன் பீரியர்ட்’ வரை தாக்குப் பிடித்து தனது ஆராய்ச்சிப் படிப்பைத் தொடரும் பல ஸ்காலர்கள் தன் ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பிக்கும் கடைசி நொடியில் கூட, சில சபலப்பட்ட நெறியாளர்களின் ஆசைக்கு இணங்கி ஆக வேண்டிய நெருக்க டிக்கு ஆளாகிறார்கள். பணமாகவோ, சதையாகவோ மாறிப்போன முனைவர் பட்டம் எத்தனையோ மனஉளைச்சல்களைத் தாண்டித்தான் இன்று மாணவ மாணவிகள் கையில் வந்து சேர்கிறது என்றெல்லாம் ஊடகங்களில் செய்தி வந்த நிலையில் பல்கலைக் கழக மாணவ, மாணவிகள் தனிப்பட்ட ரீதியாக பேராசிரியர்கள் வீட்டிற்கு செல்ல வேண்டாம் எனவும், எக்காரணங்களுக் காகவும் மாணவ, மாணவிகளை பேராசிரியர்கள் அழைக்கக்கூடாது என்றும் சென்னை பல்கலைக் கழகம் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தி உள்ளது.

மாணவ, மாணவியர், பேராசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் தங்கள் வீடுகளுக்கு அழைத்தால் மாணவ,மாணவியர் அங்கு செல்லக்கூடாது எனவும், அப்படியொரு நிலை ஏற்பட்டால் மாணவர்கள் நிர்வாகத்திடம் உரிய அனுமதி கோர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேபோல் பேராசிரியர்களும் அழைப்பு விடுக்கக்கூடாது எனவும், பாலியல் தொந்தரவு அற்ற வளாகமாக மாற்றும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும், பாலியல் தொந்தரவு இருந்தால் பல்கலைக்கழக பேராசிரியை ரீட்டா ஜான் தலைமை யிலான குழுவிடம் எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் தரப்பிலோ, பேராசிரியர்கள் தரப்பிலோ தவறு இழைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க்து.