சாதாரண அமைப்புகள் முதல் சட்டப்பேரவை வரை சாதி ஆதிக்கம்!- ஐகோர்ட் – AanthaiReporter.Com

சாதாரண அமைப்புகள் முதல் சட்டப்பேரவை வரை சாதி ஆதிக்கம்!- ஐகோர்ட்

தமிழகத்தில் சாதி ஆணவப்படுகொலைகள் தொடர்கதையாக நடந்து வருகின்றன. ஏற்கனவே நூற்றுக்கும் மேற்பட்ட ஆணவப்படுகொலைகள் நடந்து வந்துள்ள சூழ்நிலையில் சாதாரண அமைப்புகள் முதல் சட்டப்பேரவை வரை சாதி ஆதிக்கம் செலுத்துவதாக ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 187 சாதி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. இந்த கொலைகளைத் தடுக்க சாதி ஆணவப் படுகொலைக்கு எதிராகத் தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் எனவும், படுகொலை செய்யப்பட்ட அசோக் குடும்பத்தினருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கடந்த ஒருமாதம் காலத்தில் சாதி ஆணவக் கொலைகள் நடை பெறு வது அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக பத்திரிக்கைகளில் வெளிவரும் செய்திகளில் அடிப்படை யில் சென்னைஉயர் நீதிமன்றம் செவ்வாயன்று தானாக முன்வந்து வழக்கு தொடுத்துள்ளது. அந்த வழக்கின் விசாரணையின் போது நீதிபதி, “தமிழகத்தில் சாதாரண அமைப்புகள் முதல் சட்டப் பேரவை வரை சாதி தான் ஆதிக்கம் செலுத்துகிறது. அதிலும் ஆணவப்படுகொலைகளை தடுக்க வேண்டும் என்று கூறும் கட்சிகளே சாதியை வளர்த்துவிடும்படியான நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன.

தென் மாவட்டங்களில் பள்ளிகள் உள்ளிட்ட இடங்களில் சாதிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது. எனவே ஆணவப்படுகொலைகளை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து விரிவாக அறிக்கையளிக்க வேண்டும் என்று மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உத்தரவிடு வதாக தெரிவித்த நீதிபதி, வழக்கினை வரும் 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.