சேலம் : கோயில் யானை ராஜேஸ்ரியை கருணை கொலை செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி! – AanthaiReporter.Com

சேலம் : கோயில் யானை ராஜேஸ்ரியை கருணை கொலை செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி!

நம் நாட்டின் சுப்ரீம் கோர்ட் கடந்த மார்ச் மாதம் கருணைக் கொலைக்கு அனுமதி அளித்ததன் மூலம் இந்தியா கருணைக் கொலையை அனுமதிக்கும் பல உயர்ந்த நாடுகளின் பட்டியலில் இடம்பிடித்து இருக்கிறது என்று சிலர் பெருமை பேசி வந்தாலும் மேற்படி ஜட்ஜ்மெண்ட்படி இது வரை யாரும் நம் நாட்டில் கருணை கொலை செய்யப்பட்டத நிலையில் நோய்வாய்ப்பட்ட சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை ராஜேஸ்ரியை கருணை கொலை செய்ய சென்னை ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.

 

முன்னதாக சேலம் சுகவனேசுவரர் கோவிலுக்கு சொந்தமான ராஜேஸ்வரி என்ற யானை கால்வாத நோயால் அவதிப்பட்டு வருகிறது. கோரிமேடு பகுதியில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வைத்து யானைக்கு நாமக்கல் கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் லோகநாதன், கோவை வன டாக்டர் மனோகரன் ஆகியோர் யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இருப்பினும், யானைக்கு 2 கால்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் படுத்த படுக்கையாகவே உள்ளது. சமீபத்தில் சிகிச்சை அளிக்க ஏதுவாக யானையை பொக்லைன் எந்திரம் மூலம் திருப்பியபோது, ஒரு தந்தம் உடைந்துவிட்டது. தினமும் யானைக்கு 20 முதல் 30 பாட்டில் குளுக்கோஸ், கால்சியம் உள்ளிட்ட மருந்துகளை டாக்டர்கள் அளித்து வருகின்றனர்.

இதனிடையே  விலங்குகள் நல ஆர்வலர் முரளீதரன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,  ‘சேலம் சுகவனேஸ்வர் கோவில் பெண் யானை ராஜேஸ்வரி காலில் வலி மற்றும் காயம் ஏற்பட்டு கடந்த ஒருமாதமாக படுத்த படுக்கையாக உள்ளது. தொடர்ந்து படுத்துகிடப்பதால் அந்த யானைக்கு புண் ஏற்பட்டுள்ளது. அந்த யானையினை மருத்துவ ரீதியாக குணப்படுத்த முடியாது, ஆனால் ஜேசிபி எந்திரம் மூலம் நிற்கவைக்க முயற்சி செய்வதால் மேலும் யானைக்கு காயம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். எனவே யானையை கருணை கொலை செய்ய உத்தரவிட வேண்டும்’ என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய முதல் அமர்வு முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது யானையை கருணை கொலை செய்யமுடியுமா? என்பது குறித்து பதிலளிக்கு இந்து அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் 24 மணி நேரமும் சிறப்பு மருத்துவ குழுவினர், யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனால் இதுவரை அளித்த சிகிச்சைகள் எந்த பலனும் பலனளிக்கவில்லை. யானையின் உடல் நிலையில் எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை. எனவே கருனை செய்யும் விசயத்தில் விலங்குகள் நல வாரியத்தையும் எதிர் மனுதராக சேர்க்க வேண்டும் என வாதிட்டார்.

அப்போது மனுதரார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், யானைக்கு அளித்த சிகிச்சையில் எந்த முன்னேற்றம் இல்லை என அரசு தெரிவித்துள்ளது. மேலும் கருனை கொலை வழக்கில் விலங்குகள் நல வாரியத்தை எதிர் மனுதாரக சேர்க்க வேண்டியதில்லை அரசுக்கு இதில் உரிமை உள்ளது என வாதிட்டார்.

இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதிகள், யானையை சேலம் மாவட்ட கால்நடை துறை மருத்துவர் பரிசோதித்து 48 மணி நேரத்தில் அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அறிக்கை பெற்ற பின் விதிகளை பின்பற்றி கருணைக் கொலை செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

யானை ஆர்வலர் ஓசை காளிதாஸ் இது குறித்து கூறும்போது,  “தாவரஙகளை உண்டு வாழும் வன விலங்கான யானை, கோயிலில் வளர்க்கப் படும்போது, பொங்கல் உள்ளிட்டவை கொடுக்கப்படுகிறது. கோயிலில் வளர்க்கப்படும யானைக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு நடத்தப்பட வேண்டும் 60 அல்லது 70 ஆண்டுகள் உயிர் வாழும் யானை, குறைந்த வயதில் உயிரிழிக்கிறது என்றால், தவறான முறையில் வளர்க்கப்பட்டுள்ளது” என்றார்.

மேலும் புத்துணர்வு முகாம்களுக்காக நீண்ட தூரம் யானைகள் அழைத்து போய் வரப்படுவது தவறு. யானை பாகன்களுக்கு உரிய முறையில் பயிற்சி கொடுக்கப்பட்டிருக்க வேண்டும். இதன் மூலமாகத்தான் கோயிலில் வளர்க்கப்படும் யானைகள் சிறந்த முறையில் வளர்க்கப்படும் என்றும் ஓசை காளிதாஸ் கூறியுள்ளார்.

எக்ஸ்ட்ரா ரிப்போர்ட்:

யானை நாம் எல்லாரும் நேசிக்கும் விலங்கு. பெரிய கால் கள், அகன்ற காதுகள், துதிக்கை, தந்தம் என பார்ப்பதற்கு முரடாக இருந்தாலும், ‘மதம்’ பிடிக்கும் காலத்தை தவிர, மற்ற நேரங்களில் பரம சாது.சொன்னதை கேட்கும் நல்ல பிள்ளை. இதன் குணாதிசயங்கள் சுவாரஸ்யமானவை. இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான் உட்பட 13 ஆசிய நாடுகளில் 50,000 யானைகள் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.

ஆசியாவில் மூன்று வகையான யானைகள் காணப்படுகின்றன. தென்மாநிலங்கள் மற்றும் இலங்கையில் காணப்படும் யானைகளின் நெற்றியில் செம்புள்ளிகள், சிவப்பான காது மடல்கள் இருக்கும்.வடமாநிலங்கள் மற்றும் மியான்மர் நாட்டில் காணப்படும் யானைகள் கொஞ்சம் உயரம் குறைவானவை. இந்தோனேஷியா, மலேசியாவில் காணப்படும் யானைகள் மிகவும் குள்ளமானவை.

‘பேச்சலர்’ யானைகள்: கூட்டமாக வாழக்கூடியவை. ஆண் யானை பருவ வயதை(15) அடைந்தவுடன் மற்ற யானைகளால் தனியே விரட்டி விடப்படும். இப்படி விரட்டப்பட்ட ‘பேச்சலர்கள்’ தனிக்கூட்டமாக வாழும்.வயதான பெண் யானைதான் மற்ற யானை களுக்கு வழிகாட்டியாக தலைமை வகித்து முன்னே செல்லும். குட்டிகளை கண்டிப்புடன் வளர்க்கக்கூடியவை.

அடுத்த ‘சீனியாரிட்டியான’ யானை வயதான பெண் யானைக்கு பிறகு ‘பதவிக்கு’ வரும். யானைகள் கண்ட கண்ட பாதைகளில் செல்லாது. உணவு, தண்ணீர் உள்ள இடத்தில், என்றைக்காவது குடும்பம் குடும்பமாக சந்தித்துக் கொண்டால் ஒரே கும்மாளம்தான். வாயின் வெட்டுப்பல்தான் தந்தம். இது இல்லாத ஆண் யானைகளை ‘மக்னா’ என்கின்றனர். யானையின் வால் அடிப் பகுதியில் மேடாக இருந்தால் அது ஆண் யானையாகவும், ‘வி’ வடிவில் இருந்தால் பெண் யானையாகவும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.

தொடர்பு கொள்வதில் கில்லாடிகள்: இயற்கையாகவே பார்க்கும் திறன் குறைந்த யானைகள், தொடுதல், அருகில் இருப்பவற்றை பார்த்தல், சத்தம், ரகசியமாக சத்தமிடுதல், யானைகளிலிருந்து வெளிப்படும் ஒருவித வாசனைகளால் தகவல்களை பரிமாறிக் கொள்கின்றன.மகிழ்ச்சியாக இருக்கும் போது பிளிறும். கோபமாக இருக்கும் போது ‘கிரீச்… கிரீச்…’ என்ற சத்தத்தை எழுப்பும். ஒரு கி.மீ., வரை ‘வாசம்’ பிடிக்கும்.

தோலின் எடை 1,000 கிலோ: உணவு, தண்ணீர், பசுமையான இடங்கள் போன்றவற்றை கணக் கிட்டு, சராசரியாக ஆண்டுக்கு ஒரு யானை 750 சதுர கி.மீ., வரை சுற்றி வரும். இயற்கையாகவே யானைக்கு ஜீரண சக்தி குறைவு என்பதால், யானை ஒன்றுக்கு தினமும் 200-250 கிலோ புற்கள் தேவை. இதில் 45-50 சதவீதம் வரை மட்டுமே ஜீரணமாகும்.இதனால், தினமும் 20 முறையாவது சாணம் இடும். ஜீரண சக்தி குறைவால், 18 மணி நேரம் வரை சாப்பிட வேண்டிய கட்டாயம் யானைக்கு உண்டு.

காலை மற்றும் மாலை 4 மணிக்கு மேல் யானைகள் சுறுசுறுப்பாக இருக்கும். இதன் சராசரி எடை 4,000 கிலோ. தோலின் எடை மட்டும் 1,000 கிலோ.தினமும் 200 லிட்டர் வரை தண்ணீர் தேவை. பொதுவாக யானைகள் நின்றுக்கொண்டும், படுத்துக் கொண்டும் தூங்கும் தன்மை உடையவை. நிழல், உணவு கிடைக்காதபட்சத்தில் ‘டென்ஷன்’ ஆகும்.மனிதன், யானை, டால்பின் இந்த மூன்றுக்கும் மூளையில் ‘எமோஷன் மையம்’ ஒத்திருப்பதால், மனிதன் போன்று புத்திசாலியான விலங்காக கருதப்படுகிறது. ஞாபக சக்தி அதிகம்.

வறட்சி காலத்தில் தண்ணீர் இல்லாதபட்சத்தில், ஈரப்பதமான இடத்தை துதிக்கையால் தோண்டி தண்ணீர் பருகும்.கால்சியம், பொட்டாசியம் போன்ற சத்துக்களை தேடி, இயற்கையாக உள்ள உப்புப் பாறைகளை உடைத்து, சாப்பிடும். மூக்கும், மேல் உதடும் சேர்ந்த துதிக்கை 60,000 தசை நார்களால் ஆனது. ஒருமுறை 10 லிட்டர் தண்ணீர் உறிஞ்சும். தண்ணீர் கிடைக்காத போது, தொண்டை பகுதி, வயிற்று பகுதியிலிருந்து ஒரு லிட்டர் வரை தண்ணீரை உறிஞ்சி எடுத்து சமாளிக்கும்.

யானையில் நகத்தில் மட்டுமே வியர்வை சுரக்கும். மற்ற இடங்களில் சுரக்காததால், உடல் வெப்ப நிலையை சீராக வைத்துக் கொள்ள, ரத்த நாளங்கள் அதிகமுள்ள காதை ஆட்டிக் கொண்டே இருக்கும். இதன்மூலம் உடல் வெப்பநிலையை 1 டிகிரி செல்சியஸ் வரை குறைக்கும்.

தவிர, உடல் வெப்பத்தை குறைக்க, தன் மேல் தண்ணீரை தெளித்தல், மண்ணை போட்டுக் கொள்ளுதல், எச்சிலை விழுங்குதல் போன்றவற்றால் சமாளிக்கும்.தூண்கள் போன்ற கால்களால் வேகமாக ஓட முடியுமே தவிர தாவ முடியாது. முரடாக தெரியும் அந்த பாதம் மென்மையானது. நடக்கும்போது விரியும். தரையில் இருந்து காலை எடுக்கும் போது சுருங்கும்.

ஆண் யானைக்கு காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள வீக்கமான பகுதியில் மதநீர், ஆண்டுக்கு ஒருமுறை வழியும். இதைதான் ‘மதம்’ என்கின்றனர். இது மூன்று மாதங்கள் வரை இருக்கும். 15 வயது முதல் 20 வயதுக்குள் மதம் பிடிக்க ஆரம்பித்து, 45 வயது வரை ஏற்படும். அப்போது விதைப்பை 16 மடங்கு பெரியதாகும்.மற்ற ஆண் யானைகளை பிடிக்காது. பெண் யானையுடன் சேர துடிக்கும். அரைமணி நேரம் உணர்வுகளை தூண்டி, ஒரு நிமிடத்தில் இணைந்து விடும். குறிப்பிட்ட காலம் வரை அந்த பெண் யானையுடனே ‘ஹனிமூன்’ செல்லும்.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின்படி, இந்தியாவில் அதிக யானைகள் (59 சதவீதம்) திருட்டுக் கும்பலால்தான் வேட்டையாடப்பட்டுள்ளன. ரயிலில் அடிபடுதல் 15 சதவீதம், விஷஉணவு 13, மின்சாரம் பாய்ந்து 8 சதவீத யானைகள் பலியாகி இருக்கின்றன.இதில் புதிதாக சேர்ந்திருப்பது மக்காத பிளாஸ்டிக் பொருட்கள். காட்டுப்பகுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சிலர், காலியான பாலித்தீன் பைகள், பிளாஸ்டிக் வாட்டர் கேன்களை கையோடு கொண்டு செல்லாமல், அங்கேயே போட்டுவிட்டு செல்கின்றனர். அதை உண்ணும் யானை போன்ற விலங்குகள், ஜீரணம் ஆகாமல், வயிறு உப்பி இறப்பது இன்றும் நடக்கிறது. தவிர, இயற்கையாகவே யானையின் குடலுக்குள் உருவாகும் புழுக்கள், பூச்சிகளாலும் இறப்பு நேரிடுகிறது.காசநோயாலும் இறக்கின்றன. இப்படி நோய்வாய்ப்பட்ட யானை களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளுக்கு பயன்படுத்தும் ஊசி, மருந்துகளில் 60 சதவீதம் மனிதனுக்கு பயன்படுத்தக் கூடியவை.

யானைகள் நல்ல பழங்கள், மரங்களில் உள்ள செடிகள், இலைகளை விரும்பி உண்ணும்.அதிலிருந்து கீழே விழும் விதைகள், மக்கி செடிகளாக வளரும். அதை நம்பி காளான் வளரும். காளானை நம்பி சில உயிரினங்கள் இருக்கின்றன. காடுகளில் யானை உருவாக்கும் புதிய பாதைகளில் மற்ற விலங்குகள் எளிதாக செல்ல முடியும்.

யானை சாப்பிட்டது போக, கீழே போடும் செடி, கொடிகளை, பின் தொடர்ந்து வரும் காட்டு எருது, மான்கள் உண்ணும். மரக் கிளைகளை உடைத்து இலைகளை யானை உண்பதால், வெயில் படாத இடங்களில்கூட சூரியக்கதிர்கள் ஊடுருவி புற்கள் வளரும். அதை நம்பி பல சிறு உயிரினங்கள் வாழ்கின்றன.இப்படி பல உயிரினங்கள் வாழ நேரடியாகவும், மறைமுகமாகவும் யானைகள் உதவுகிறது. காடுகள், காடுகளாக இருக்க பாதுகாவலனாக இருப்பது யானை. இதை பாதுகாப்பது நமது கடமை.