அண்ணாவின் சமாதி அருகே அமைதியாக அடக்கம் ஆனார் கருணாநிதி!! – AanthaiReporter.Com

அண்ணாவின் சமாதி அருகே அமைதியாக அடக்கம் ஆனார் கருணாநிதி!!

தமிழகத்தின்  தனி பெரும் சக்தியாக விளங்கிய திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணாவின் சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்தியாவின் மிக மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும்,முன்னாள் முதல்வரும்,திமுக தலைவருமான கருணாநிதி உடல் நலக்குறைவால் நேற்று மாலை காலமானார்.இதையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டிருந்தது.அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்களின் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில்,திமுக தலைவர் கருணாநிதியின் இறுதி ஊர்வலம் ராஜாஜி அரங்கத்தில் இருந்து புறப்பட்டு சிவானந்தா சாலை மற்றும் வாலாஜா சாலை வழியாக அண்ணா சமாதி அருகே முழு அரசு மரியாதையுடன் துப்பாக்கி குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்டது.

முன்னதாக மெரினாவில், கருணாநிதி உடல் அடக்கத்திற்கு இடம் ஒதுக்குவது தொடர்பான வழக்கில், திமுக சார்பில் வாதம் துவங்கியது. திமுக சார்பில் ஆஜரான வக்கீல், முதல்வராக இருந்த ஜெயலலிதாவையும், முன்னாள் முதல்வர் கருணாநிதியையும் ஒப்பிடக்கூடாது. எனது வாழ்வும் ஆன்மாவும் அண்ணாதுரை தான் என கருணாநிதி கூறியுள்ளார். அண்ணா துரை சித்தாந்தத்தை பின்பற்றயதால் தான், மெரினா கடற்கரையில் எம்ஜிஆர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ராஜாஜி, காமராஜர் சித்தாந்தம் வேறு. திராவிட சித்தாந்தம் வேறு. மாற்று சித்தாந்தம் கொண்ட தலைவர்கள் மத்தியில் கருணாநிதியை அடக்கம் செய்யக்கூடாது.

மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்யாவிட்டால், மக்கள் மனம் புண்படும். பாரபட்சம் காட்டுவதாகிவிடும். அற்பமான, சட்டத்திற்கு உட்படாத காரணங்களை கூறி அரசு மறுக்கிறது. அண்ணா நினைவிடம் மயான பகுதி என மாநகராட்சியால் அறிவிக்கப்ப ட்டுள்ளது. மெரினாவில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்குவதில் சட்டச்சிக்கல் இல்லை என வாதாடப்பட்டது.

அரசு தரப்பிலும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. இந்நிலையில் மெரினாவில் அண்ணா நினைவிடம் அருகே கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க ஐகோர்ட் உத்தர விட்டுள்ளது. தமிழக அரசின் வாதத்தை ஒதுக்கி விட்டது. இந்த உத்தரவு ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்டாலின் கதறி அழுதார்.