தேசிய புலனாய்வு அமைப்பை (என்ஐஏ) வலுப்படுத்தும் வகையில் புது மசோதா நிறைவேறிடுச்சு!

தேசிய புலனாய்வு அமைப்பை (என்ஐஏ) வலுப்படுத்தும் வகையில் புது மசோதா நிறைவேறிடுச்சு!

சி.பி.ஐ மற்றும் என் ஐ ஏ. போன்ற மத்திய புலனாய்வு அமைப்புகள் ஒரு வழக்கை விசாரிக்க வேண்டும் என்றால் அதற்கு மாநில அரசின் சம்மதத்தை பெற்றாக வேண்டும். மாநில அரசு சம்மதிக்காவிட்டால், சி.பி.ஐ. எந்த வழக்கையும் தலையிட்டு விசாரிக்க முடியாது என்ற ஷரத்து உள்ள நிலையில் தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் மசோதா இன்று மக்களவையில் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின்படி பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான விசாரணைகளை வெளிநாட்டில் நடத்தும் அதிகாரம் தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு வழங்கப்படும்.

மும்பையில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின் கடந்த 2009ம் ஆண்டு பயங்கரவாதத்திற்கு எதிரான விசாரணை மேற்கொள்ள என்.ஐ.ஏ (NIA) எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவனம் அன்றைய காங்கிரஸ் அரசால் துவங்கப்பட்டது.

தற்போது அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதலை சமாளிக்கும் வகையில் தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டும் என்று பாஜக தலைமையிலான மத்திய அரசு கடந்த 2017ம் ஆண்டு முதல் வலியுறுத்தி வருகிறது.

அதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட சில எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த கூடுதல் அதிகாரம் சிறுபான்மையினர் மீதும் அரசியல் காரணங்களுக்காகவும் தவறாக பயன் படுத்தப் படலாம் என அச்சம் தெரிவித்துள்ளன. இந்நிலையில் தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் தேசிய புலனாய்வு நிறுவனம் (திருத்த) மசோதா 2019 மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மசோதாவின்படி தேசிய புலனாய்வு நிறுவனம், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த விசாரணையை வெளிநாட்டிலும் மேற்கொள்ள முடியும். மேலும் சைபர் கிரைம் மற்றும் ஆள் கடத்தல் தொடர்பான குற்றங்களை விசாரிக்கவும் என்.ஐ.ஏ-க்கு அதிகாரம் அளிக்கப்படும்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவிற்கு ஒருமனதாக ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று மக்களவையில் வலியுறுத்தினார்.

மக்களவையில் மசோதா மீதான விவாதம் முடிந்த பின் மசோதாவில் அளிக்கப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு 278 உறுப்பினர்கள் ஆதரவளித்தனர். வெறும் 6 உறுப்பினர்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவித்தனர். இறுதியில் குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த மசோதா மீதான விவாதத்தின் போது, பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்கள் சில சமயம் குறிப்பிட்ட சமூகத்தினரை குறிவைத்து தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளதை சில மக்களவை எம்.பிக்கள் சுட்டிக்காட்டினர்.

அதற்கு பதிலளித்த அமித் ஷா, பிரதமர் மோடி அரசு ஒருபோதும் மசோதாவை தவறாக பயன்படுத்தாது. பயங்கரவாதத்தை ஒழிப்பதே எங்களின் ஒரே நோக்கம். பயங்கரவாதிகள் எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமித் ஷா உறுதியளித்தார்.

மேலும் இந்த மசோதாவிற்கு அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். மசோதாவுக்கு ஆதரவு அளிக்கும் விஷயத்தில் மக்களவை உறுப்பினர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டால் அது தவறான செய்தியை அனுப்பிவிடும். அது பயங்கரவாதிகளுக்கு சாதகமாக அமையும் என்று அமித் ஷா கூறினார்.

ஆனாலும் இப்படி தேசிய புலனாய்வு நிறுவனத்திற்கு கூடுதல் அதிகாரம் அளிப்பதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவித்த எதிர்ப்புகளுக்கு பதிலளித்து பேசிய அமித் ஷா, பயங்கரவாதத்திற்கு எதிரான போடா (POTA) சட்டம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திரும்ப பெறப்பட்டதை சுட்டிக்காட்டினார்.

தன்னுடைய வாக்கு வங்கியை காப்பாற்றி கொள்வதற்காக காங்கிரஸ் போடா சட்டத்தை திரும்ப பெற்றது. அதன் பின் நாட்டில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்தன. அதன் விளைவாகவே கடந்த 2008ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்கு பின் தேசிய புலனாய்வு நிறுவனத்தை நிறுவ வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு ஏற்பட்டது.

மேலும் காங்கிரஸ் தன் அதிகாரத்தை பல முறை தவறாக பயன்படுத்தி குற்றவாளிகளை விடுவித்துள்ளது. உதாரணமாக கடந்த 2007ம் ஆண்டு நடந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் காங்கிரஸ் திடீரென்று திசை மாறி அப்பாவிகளை கைது செய்து, முன்பு கைது செய்யப்பட்டிருந்த குற்றவாளிகளை விடுவித்தது.

காங்கிரஸ் ஆட்சியில் நடந்த தவறுகளை பாஜக அரசு சரிசெய்து வருகிறது. பயங்கரவாதத்தில் இடது, வலது என்று எதுவும் இல்லை. பயங்கரவாதம் என்பது தனி கொள்கை என அமித் ஷா கூறினார். தற்போது என்.ஐ.ஏ 272 வழக்குகளை விசாரித்து வருகிறது. அதில் 199 வழக்குகளில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 51 வழக்குகளில் ஏற்கெனவே தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 46 வழக்குகளில் குற்றவாளிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். என்.ஐ.ஏ வழக்குகளில் 90 சதவீதம் குற்றம் நிரூபிக்கப்படுகிறது என அமித் ஷா கூறினார்.

என்.ஐ.ஏ அதிகாரிகள் வெளிநாட்டில் விசாரணை நடத்த வழிவகை செய்யும் சர்வதேச ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் கையெழுத்திட்டதா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு இல்லை என பதிலளித்த அமித் ஷா, சர்வதேச அழுத்தம் காரணமாக பாகிஸ்தான் அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என நம்புவதாக தெரிவித்தார்.

மசோதா மீதான விவாதத்தின்போது பாஜக எம்.பி. சத்யபால் சிங் பேசும்போது குறிக்கிட்டு பேசிய ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதின் ஓவைசியுடன் அமித் ஷா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

Related Posts

error: Content is protected !!