உங்கள் ஊர் விமான நிலையத்தில் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்பு! – AanthaiReporter.Com

உங்கள் ஊர் விமான நிலையத்தில் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்பு!

இந்தியாவில் உள்ள எல்லா  விமான நிலையங்களிலும் அந்தந்த மாநில மொழிகளில் பொது அறிவிப்புகளை வெளியிட மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நம் நாட்டிலுள்ள பெரும்பாலான விமான நிலையங்களில் இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழி களே அறிவிப்பு மற்றும் பெயர்ப் பலகைகளில் இடம் பெறுகின்றன. இதனால் ஆங்கிலம் மற்றும் இந்தி தெரியாத மக்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே அந்தந்த ஊர் விமான நிலையங்களில் மாநில மொழிகள் இடம் பெற வேண்டுமெனக் கோரிக்கைகள் வைக்கப்பட்டது. இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களியிலும் உள்ளூர் மொழியில் பொது அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இந்தி, ஆங்கிலத்தை அடுத்து உள்ளூர் மொழி யிலும் பொது அறிவிப்பை வெளியிட தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு விமான போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டில் இதேபோன்றதொரு உத்தரவை இந்திய விமான நிலைய ஆணையம் பிறப்பித்திருந்தது. ஆனால் அது முழுவதுமாக பல்வேறு விமான நிலையங்களில் நிறைவேற்றப்படாமல் இருக்கும் நிலையில், மத்திய அரசு மீண்டும் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆங்கிலம் மற்றும் இந்தி தெரியாத பயணிகளுக்கு இந்த உத்தரவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.