மேயர், சேர்மன் எலெக்சனில் மறுபடியும் மாற்றம்!

மேயர், சேர்மன் எலெக்சனில் மறுபடியும் மாற்றம்!

நம்ம தமிழ் நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, ஈரோடு, வேலூர், தஞ்சை, திண்டுக்கல், திருப்பூர், தூத்துக்குடி ஆகிய 12 மாநகராட்சிகள் உள்ளன. மாநகராட்சி மேயர்களை மக்கள் நேரடியாக ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுக்கும் முறை நடைமுறையில் உள்ளது. அதாவது மாநகராட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு ஒரு ஓட்டும், வார்டு கவுன்சிலர் பதவிக்கு ஒரு ஓட்டும் என மொத்தம் 2 ஓட்டுகள் போட வேண்டும்.

ellection june 23

கடந்த 1996 மற்றும் 2001–ம் ஆண்டுகளில் நடைபெற்ற மாநகராட்சி தேர்தல்களில் இந்த முறையில்தான் மேயர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டனர். அந்த இரு தேர்தல்களிலும் சென்னை மாநகராட்சியின் மேயராக மு.க.ஸ்டாலின் தேர்ந்து எடுக்கப்பட்டார்.பின்னர் 2006–ம் ஆண்டு தி.மு.க. ஆட்சியின் போது மாநகராட்சி மேயர் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. அதாவது, தேர்ந்து எடுக்கப்பட்ட வார்டு கவுன்சிலர்கள் ஓட்டுப்போட்டு மேயரை தேர்ந்து எடுக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. அந்த ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் மாநகராட்சி மேயர்களை அந்தந்த மாநகராட்சி கவுன்சிலர்கள் ஓட்டுப்போட்டு தேர்ந்து எடுத்தனர். அப்போது சென்னை மாநகராட்சியின் மேயராக தி.மு.க.வைச் சேர்ந்த மா.சுப்பிரமணியனை கவுன்சிலர்கள் தேர்ந்து எடுத்தனர்.அதன்பிறகு 2011–ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது அந்த முறை ரத்து செய்யப்பட்டு, மீண்டும் மக்களே ஓட்டுப்போட்டு மேயரை நேரடியாக தேர்ந்து எடுக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது. அந்த ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் சென்னை மாநகராட்சி மேயராக சைதை துரைசாமி தேர்ந்து எடுக்கப்பட்டார்.

இந்த நிலையில், மேயர் தேர்தல் முறையில் திடீரென்று மாற்றம் கொண்டு வரப்பட்டு உள்ளது. அதாவது, கவுன்சிலர்கள் மூலம் மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுக்கும் முறை மீண்டும் அமலுக்கு வருகிறது. மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் மேலும் சட்ட திருத்தம் செய்வதற்கான சட்ட முன்வடிவு மசோதாக்களை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.

அதன்படி, மாநகராட்சி மேயர் தேர்வு முறையில் மாற்றம் செய்வது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மசோதாவில் , “தற்போது, மாநகராட்சிகளுக்கான தேர்தல் கட்சிகளின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. சில மாநகராட்சிகளில் மாமன்ற உறுப்பினர்களின் (கவுன்சிலர்கள்) ஆதரவு அவ்வளவாக மாநகர மேயருக்கு இல்லாத காரணத்தினால், மாமன்றங்கள் முறையாக செயல்படுவது இல்லை என்று அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவு மாநகராட்சி மேயருக்கு கிடைக்கும் பட்சத்தில் மாமன்றம் சிறந்த முறையில் செயல்படும் என்று கருதப்பட்டது. அதன் காரணமாக மாமன்ற உறுப்பினர்களால் மறைமுகமாக மாநகராட்சி மேயரை தேர்ந்தெடுப்பது என்று அரசு முடிவு செய்திருக்கிறது.மேற்சொன்ன முடிவுகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், அரசு மாநகராட்சி தொடர்பான சட்டங்களை பொருந்தத்தக்க வகையில் திருத்தம் செய்வது என்று முடிவு செய்திருக்கிறது”என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் தொடர்பான சட்டங்களை மேலும் திருத்தம் செய்வதற்காக தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவு மசோதாவில், “மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான அடுத்த தேர்தல் 2016–ம் ஆண்டு அக்டோபர் 24–ந் தேதிக்கு முன்னர் நடைபெற்றாக வேண்டும். 2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பிரிவுகளின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வது மற்றும் அதனைத் தொடர்ந்து பிரிவுகளை வரையறை செய்வது போன்றவைகள் மேற்கொள்ளப்பட்டது. 2011–ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின் அதிகாரபூர்வமான புள்ளி விவரங்கள் 2013–ம் ஆண்டே பெறப்பட்டது. தற்போது 2011–ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 2016 ஜூலை 15–ந் தேதிக்குள் பிரிவுகளின் எண்ணிக்கையை நிர்ணயம் செய்வது மற்றும் பிரிவுகளை வரையறை செய்வது போன்றவற்றை மேற்கொள்வது அந்தந்த நகராட்சி ஆணையர்கள் மற்றும் செயல் அலுவலர்களுக்கு மிகுந்த சிரமங்களை ஏற்படுத்தியது என்று அரசின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.2011–ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் பிரிவுகளை வரையறை செய்யும் பணியானது 2016 ஜூலை 25–ந் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்பதாலும், பிரிவுகளை வரையறை செய்யும் பணி மிகுந்த சிரமத்தையும், கால தாமதத்தையும் ஏற்படுத்தும் என்பதாலும், அது தற்போதைய தேர்தலை நடத்துவதற்கு இடையூறாக இருக்கும் என்பதாலும், தற்போது நடைபெற்ற சட்டப்பேரவைக்கான வாக்காளர் பட்டியல் அடிப்படையில் பிரிவு வாரியான வாக்காளர் பட்டியல் தயாரிக்க இயலாது என்பதாலும், அரசானது தற்போது நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை, தற்போது உள்ள ஆட்சி நிலவரைப் பகுதி அல்லது பிரிவுகளின் எண்ணிக்கை மற்றும் பிரிவுகளில் இருந்து தேர்ந்தெடுத்து அனுப்பப்பட வேண்டிய மன்ற உறுப்பினர்கள் அல்லது உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையை கொண்டு நடத்தலாம் என்று முடிவு செய்து அதற்கு ஏற்றவாறு நகராட்சி சட்டங்களில் திருத்தம் செய்ய முடிவு செய்து உள்ளது” என அதில் கூறப்பட்டு உள்ளது.

இந்த சட்ட முன்வடிவை, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு ஆகியோர் ஆரம்பநிலையிலேயே எதிர்ப்பதாக தங்களது கருத்தை பதிவு செய்தனர்.பின்னர் சபாநாயகர் ப.தனபால், குரல் வாக்கு எடுப்பு மூலம் சட்ட முன்வடிவுக்கு அனுமதி பெற்றார். இந்த நிலையில் அந்த மசோதாக்கள் மீது இன்று (வியாழக்கிழமை) சட்டசபையில் சட்டத்திருத்தம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மேலும் ஒரு சட்ட திருத்த மசோதா ஒன்றை தாக்கல் செய்தார். அதில், “2011–ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரங்களின் அடிப்படையில், அனைத்து கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகளில் மறுசீரமைப்பு, பதவி இடம், பதவிக்கான சுழற்சி முறை இடஒதுக்கீடு ஆகிய பணிகளை அக்டோபர் 24–ந் தேதிக்கு முன்பு (தற்போதுள்ள உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்கால முடியும் தேதி) முடிக்க முடியாது. எனவே ஊராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது நிலவி வரும் ஆட்சி நிலவர எல்லைப் பகுதி, வார்டு எண்ணிக்கை, அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை இப்போது இருக்கும் அளவிலேயே வைத்துக்கொண்டு தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற வகையில் தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுகிறது” என்று.அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதா குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது , “நடக்க இருக்கும் உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டுகளின் எண்ணிக்கையிலோ, பரப்பளவிலோ எந்த மாற்றமும் செய்யப்படாது. கிராம உள்ளாட்சி அமைப்புகளில் இருந்து மாநகராட்சி வரை அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் இந்த நிலையே நீடிக்கும்.உள்ளாட்சி பதவியிடங்களில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதுவரை 33 சதவீத இடஒதுக்கீடுதான் பெண்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் இந்த தேர்தலில் கூடுதலாக 17 சதவீத இடத்தை பெண்களுக்கு வழங்கினால்தான் 50 சதவீத இடஒதுக்கீடு பூர்த்தியாகும். எனவே, எந்தெந்த பதவி இடங்களில் இந்த 17 சதவீத கூடுதல் இடங்களை வழங்குவது பற்றி முடிவு செய்யும் நடவடிக்கையை அந்தந்த மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது” என அவர்கள் தெரிவித்தன

error: Content is protected !!