முதல்வரான எடியூரப்பா போட்ட முதல் கையெழுத்து விவசாயக் கடன் ரத்து! – AanthaiReporter.Com

முதல்வரான எடியூரப்பா போட்ட முதல் கையெழுத்து விவசாயக் கடன் ரத்து!

பலவித எதிர்ப்பு மற்றும் சர்ச்சைகளுக்கிடையே கர்நாடக மாநில முதல்வராக எடியூரப்பா இன்று (வியாழக்கிழமை) பதவி ஏற்றுக் கொண்டார். அத்துடன் தன் முதல் கையெழுத்தை விவசாய கடனை தள்ளுபடி செய்து அசத்தி உள்ளார் . வேளாண் துறை செயலர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்த எடியூரப்பா, ஒரு லட்சம் ரூபாய் வரையிலான விவசாய கடனை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளாராம்.

நடந்து முடிந்த கர்நாடகா தேர்தலில் ஆளுநர் வஜூபாய் வாலா, பாஜக தனிப்பெரும் கட்சியாக இருப்பதால், எடியூரப்பாவை ஆட்சி அமைக்க பாஜகவிற்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பைத் தொடர்ந்து கர்நாடகா மாநில முதலமைச்சராக நாளை காலை 9.30 மணிக்கு பாஜகவின் எடியூரப்பா பதவி ஏற்க உள்ளார். மேலும், அடுத்த 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கவர்னர் கூறியுள்ளார்.

கர்நாடகாவில் எடியூரப்பாவை ஆட்சியமைக்க கவர்னர் அழைப்பு விடுத்ததற்கு தடை விதிக்கக் கோரி காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிகளின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நள்ளிரவு 1.45க்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் ஏகே. சிக்கிரி, அசோக் பூசன், எஸ்ஏ போடப் ஆகியோர் இந்த வழக்கை விசாரித்தனர்.

இது தொடர்பாக நடந்த வாதத்தின் போது பாஜக வழக்கறிஞர் ரோஹத்கி தெரிவிக்கையில், ‘காங்கிரஸ் கட்சியின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார்.. கவர்னரை அவரது பணியை செய்ய விடுங்கள். அவர் வேலைகளில் தலையிட வேண்டாம். ஆட்சியமைக்க அழைப்பது கவர்னரின் கடமை. கவர்னரும், ஜனாதிபதியும் எந்த நீதிமன்றத்துக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. கவர்னர் கடமையாற்றுவதை தடுத்துவிட்டால் எந்த சட்டமும் இயற்றப்பட்டது’ என்றார்.

இதனை தொடர்ந்து வாதாடிய காங்கிரஸ் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, பதவியேற்பை மாலை 4.30 மணி வரை தள்ளி வைக்க வேண்டும் என வாதாடினார். இதனை தொடர்ந்து, நீதிபதிகள் நீண்ட ஆலோசனைக்கு பின், எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் அனைத்து தரப்புக்கும் நோட்டீஸ் அளித்து, முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

அதே நேரத்தில் எடியூரப்பா கர்நாடக ஆளுநரிடம் அளித்த எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்தை நாளை காலை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், அந்த கடிதத்தின் அடிப்படையில் இறுதித் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் செக் ஒன்றையும் வைத்துள்ளது.

இதையடுத்து எடியூரப்பாவுக்கு இன்று காலை 9 .30 மணிக்கு கர்நாடக ஆளுநர் வஜுபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவி ஏற்பு விழாவில் பாஜகவின் அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் மூலம் 2007 மற்றும் 2008 ஆம் ஆண்டுக்கு பிறகு எடியூரப்பா மூன்றாவது முறையாக கர்நாடக முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து தலைமை செயலகம் சென்று முதல்வராக பொறுப்பேற்று கொண்ட பின் முதல் கையெழுத்தாக விவசாயக்கடன் தள்ளுபடி கோப்பில் கையெழுத்திட்டார்.