ஆதார் தகவல் தொகுப்பில் வங்கிக் கணக்கு,சாதி, மதம், கல்வி மாதிரியான விவரங்கள் கிடையாது! – AanthaiReporter.Com

ஆதார் தகவல் தொகுப்பில் வங்கிக் கணக்கு,சாதி, மதம், கல்வி மாதிரியான விவரங்கள் கிடையாது!

ஒட்டுமொத்த மக்கள் தொகையின் உடலியல் அடையாளங்களின் தரவுகள் மற்றும் அவர்களது தனிப்பட்ட விவரங்கள் ஆகியன அரசால் ஒரே இடத்தில் மையமாக வைத்திருப்பது அந்த சமூகத்திற்கே பாதுகாப்பானதல்ல என்று பலரும் சொல்லி வரும் நிலையில் ஆதார் தகவல் தொகுப்பில் தனி நபர்களைப் பற்றிய குறைவான தகவல்களே இடம்பெற்றுள்ளன என்றும் நிதி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட விவரங்கள் இடம் பெறவில்லை என்றும் தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) தெரிவித்துள்ளது.

நாட்டில் உள்ள அனைவருக்கும் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் எண் வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, குடிமக்களின் பெயர், வயது, முகவரி, புகைப்படம், விரல் ரேகை, கண்ணின் கருவிழிப்படலம் ஆகிய தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலை யில், சமூகநல திட்டங்கள் மட்டுமல்லாது, ஆதார் எண்ணை வங்கிக் கணக்கு, செல்போன் எண், பான் எண் உள்ளிட்டவற்றுடன் கட்டாயமாக இணைக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. பல்வேறு முறைகேடுகளை தடுக்கவே இந்த நடவடிக்கை என அரசு கூறி வருகிறது.

அதே சமயம் ஆதார் எண் மூலம் ஒருநபர் செல்லும் இடங்கள், வாங்கும் பொருட்கள், செலவிடும் தொகை, வங்கிக் கணக்கில் இருப்பு ஆகியவற்றைக் கண்காணிக்க முடியும். அந்தத் தகவல்களைத் தெரிந்துகொண்டு தனிநபர்களை அச்சுறுத்த முடியும். தங்களை பற்றிய விவரங்களை அரசிடம் தருபவர் தன் வாழ்நாள் முழுதும் சிக்கலை எதிர்கொள்வதற்கான வாய்ப்பு உண்டு. தங்கள் நாட்டு அரசு சர்வாதிகார அரசாக ஒருபோதும் மாறாது என்று அவர்கள் நம்பவேண்டியுள்ளது என்று பலர் எடுத்துக் காட்டி இந்த திட்டம் தனிநபரின் அந்தரங்க உரிமையை மீறுவதாக உள்ளதாகவும் இந்த விவரங்களை தனியார் நிறுவனங்கள் தவறாக பயன்படுத்திக்கொள்ள வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக தொடரப்பட்ட பல்வேறு வழக்குகளை சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. அதன்படி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சட்ட அமர்வு முன்பு விசாரிக்கப்பட்டு வருகின்றன. நேற்று இம்மனுக்கள் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர்களின் வக்கீல்கள் கேட்ட கேள்விகளுக்கு ‘ஆதார் தனிப்பட்ட அடையாள ஆணையத்தின்’ தலைவர் அஜய் பூஷண் பாண்டே எழுத்துபூர்வமாக அளித்த பதில்களை மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் வாசித்தார்.

அந்த கடிதத்தில், “குழந்தையாக இருந்தபோது ஆதார் எண் பெற்ற ஒருவர், 18 வயதை அடைந்த பிறகு ‘ஆதார்’ திட்டத்தில் இருந்து வெளியேற முடியுமா?” என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டு இருந்தது. அதற்கு ஆதார் ஆணைய தலைவர் பாண்டே கூறிய பதில்; “ஆதார் சட்டப்படி, அப்படி வெளியேற அனுமதி கிடையாது” என்று பதில் அளித்தாது

இதனிடையே இந்தத் தகவல் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் இதை யாரும் திருட முடியாது என்றும் யுஐடிஏஐ கூறி வருகிறது. இதுபோன்ற செயலைத் தடுக்க ஆதார் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி வருகிறது. மேலும் இது தொடர்பாக எழும் கேள்விகள் (எப்ஏக்யூ) மற்றும் அதற்கான பதில்களை நாளிதழ்களில் வெளியிட்டு வருகிறது. இதையொட்டி யுஐடிஏஐ நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ஆதார் தகவல் தொகுப்பில் தனி நபர்கள் பற்றிய மிகவும் குறைவான விவரங்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. வங்கிக் கணக்குகள், பங்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், சொத்து விவரங்கள், சுகாதாரம் பற்றிய விவரம், குடும்ப விவரம், சாதி, மதம், கல்வி உள்ளிட்ட தனி நபர்களின் விவரங்கள் ஆதார் தகவல் தொகுப்பில் இடம்பெறவில்லை. இதுபோன்ற விவரம் ஒருபோதும் இடம்பெறாது” என கூறப்பட்டுள்ளது. –