கர்நாடகாவில் எடியூரப்பா அரசு வெற்றி ; சபாநாயகர் ராஜினாமா! – AanthaiReporter.Com

கர்நாடகாவில் எடியூரப்பா அரசு வெற்றி ; சபாநாயகர் ராஜினாமா!

கர்நாடகா முதல்வர் எடியூரப்பா அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கர்நாடக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்றது. குரல் வாக்கெடுப்பு மூலம் நடைபெற்ற வாக்கெடுப்பில், 106 எம்எல்எக்கள் ஆதரவு பெற்று எடியூரப்பா அரசு தலை தப்பியது. இதையடுத்து, தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்வதாக ரமேஷ்குமார் அறிவித்தார். தனது ராஜினாமா கடிதத்தை துணை சபாநாயகரிடம் கொடுத்து விட்டு, சட்டமன்ற உறுப்பினர்களை பார்த்து கைக்கூப்பி வணக்கம் தெரிவித்துவிட்டு இருக்கையிலிருந்து எழுந்து சென்றார்.

கர்நாடகாவில், காங்கிரஸ் – மதசார்பற்ற கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்து வந்தது. இதையடுத்து அக்கட்சியில் 16 எம்எல்ஏ-க்கள் ராஜினாமா செய்ததால் கர்நாடகாவில் பெரும் அரசியல் குழப்பம் நீடித்து வந்தது. இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துமாறு சட்டப்பேரவையில் குமாரசாமி கோரிக்கை வைத்தார். ஆனால், அந்த வாக்கெடுப்பில் அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பங்கேற்கவில்லை. மேலும் பேரவையில் அதன் மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 23ம் தேதி மாலை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில், குமாரசாமி தனது பெரும்பான்மையை இழந்ததால் ராஜினாமா செய்தார். இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை யன்று எடியூரப்பா 4-வது முறையாக முதல்வராக பதவியேற்றார். மேலும், எடியூரப்பா அரசு தனது பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பு காரணமாக, கர்நாடகப்பேரவையை சுற்றி 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு, 29ம் தேதி காலை 6 மணியில் இருந்து, 30ம் தேதி நள்ளிரவு வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து பெங்களூரு காவல் துறை ஆணையிட்டிருந்தது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியுள்ள பாஜக எம்.எல்.ஏ.க்களை நேற்று மாலை எடியூரப்பா சந்தித்து ஆலோசனை நடத்தினார். பேரவையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பு குறித்தும், நிதி மசோதாவை நிறைவேற்றுவது குறித்தும் அவர் ஆலோசித்ததாகத் கூறப்பட்டது. இதையடுத்து, இன்று காலை 11 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு தொடங்கியது. அதில் தேவையான பெரும்பான்மையை எட்டி தன்னுடைய முதலமைச்சர் பதவியை எடியூரப்பா தக்கவைத்துக்கொண்டார். எடியூரப்பா அரசு வெற்றி பெற்றதையடுத்து, சபாநாயகர் ரமேஷ்குமார் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

முன்னதாக சபாநாயகர் பதவி விலகாவிட்டால் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர பாஜக திட்டமிட்டிருந்ததாக கூறப்பட்டது. அதனால் சபாநாயகர் பதவி விலகுவாரா இல்லையா என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. குரல் வாக்கெடுப்பு மூலம் கர்நாடகாவில் எடியூரப்பா ஆட்சியைப் பிடித்ததும் சபாநாயகர் ரமேஷ் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார். இதை யடுத்து, எடியூரப்பாவுக்கு இருந்த ஒரே ஒரு தடையும் விலகிவிட்டது.

தற்போது பகீரதபிரயத்னம் செய்து தென்னிந்தியாவில் கால் பதித்தது மூலம் புதிய அத்தியாயத்தை எழுதத் தொடங்கியுள்ளது பா.ஜ.க., அடுத்து உத்தரப் பிரதேசத்தை குறிவைத்து கலைக்க திட்டமிட்டு காய் நகர்த்தி வருவதாகத் தகவல்!