கொல்கத்தாவில் பாஜக நடத்திய பேரணியில் மோதல்!

கொல்கத்தாவில் பாஜக நடத்திய பேரணியில் மோதல்!

கொல்கத்தாவில் பாஜக தலைவர் அமித் ஷா நடத்திய பேரணியில் அவர் சென்ற வாகனம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சி மாணவர் அமைப்பினர் மற்றும் தொண்டர்கள் இடையே மோதல் வெடித்தது. கலவரத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் தடியடியில் ஈடுபட்டனர். இது அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் மோடி – மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இடையே ஆரம்பத்தில் இருந்தே கருத்து மோதல்கள் இருந்து வருகிறது. இருவரும் ஒருவருக்கொருவர் கடுமையாக விமர்சித்து வருவதன் எதிரொலியாக, மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவின் போது, பாஜக – திரிணாமூல் காங்கிரஸ் தொண்டர்கள் இடையே கடுமையான வன்முறை வெடித்தது. இந்நிலையில் அதே போன்றொரு வன்முறை சம்பவம், கொல்கத்தா நகரில் பாஜக தலைவர் அமித்ஷா பங்கேற்ற பேரணியிலும் நேற்று நடைபெற்றது.

நாடு முழுவதும் 6 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்து, வரும் 19ம் தேதி இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மேற்குவங்கத்தில் பாதுகாப்புக்காக துணை ராணுவப்படை குவித்துள்ளதற்கு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில், கொல்கத்தாவில் அமித்ஷா பங்கேற்ற பேரணியில் கம்புகள் மற்றும் கற்கள் வீசப்பட்டதால் வன்முறை உருவானதாக கூறப்படுகிறது.

மேலும் இடதுசாரி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மாணவர் அமைப்பினர் சிலர் கருப்பு கொடி காட்டி அமித்ஷாவிற்கு எதிராக முழக்கமிட, பாஜக மாணவர் அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் இருதரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. கொல்கத்தா பல்கலைகழகத்தின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. பல்கலைக்கழக கட்டிடங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டன. விடுதி வெளியே அமைந்திருந்த ஈஸ்வர் சந்திரா வித்தியாசாகர் சிலையும் இந்த கலவரத்தின் போது சேதப்படுத்தப்பட்டது.

அதை தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். கலவரத்தில் சில இடங்களில் தீவைப்பு சம்பவங்களும் நடைபெற்றதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதனையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகாரளிக்க பாஜக முடிவு செய்துள்ளதாம்.

error: Content is protected !!