கடைக்குட்டி சிங்கம் – திரை விமர்சனம்!

கடைக்குட்டி சிங்கம் – திரை விமர்சனம்!

பாயிண்ட் நம்பர் 1

இன்றைய தேதியில் இந்தியாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட 135 கோடிக்கு மேல் சென்று விட்டது.. கடந்த இருபத்தியேழு வருடங்களில் இந்திய மக்கள் தொகை சுமார் 70% சதவீத வளர்ச்சியைக் கண்டிருக்கிறது. இதே காலகட்டத்தில் பயிர் தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளின் எண்ணிக்கை பெரிய அளவில் வீழ்ச்சியடைந்திருப்பது மத்திய திட்ட கமிஷனின் அங்கமான ‘பயன்பாட்டு மனித வள ஆராய்ச்சி மையத்தின்’ (Institute of Applied Manpower research) ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2011-ம் ஆண்டு துவங்கி 2017 வரையிலான கால அளவில் சுமார் மூன்றரை கோடி விவசாயிகள் ‘இல்லாமல்’ போயுள்ளனர். கடந்த பதினோரு ஆண்டுகளில் மட்டும் சுமார் 12 கோடி விவசாயிகள் விவசாயத்தை விட்டுவிட்டு ‘காணாமல்’ போயுள்ளனர்.

பாயிண்ட் நம்பர் 2

நம் ஒவ்வொருவரின் குடும்ப ஒற்றுமையை உலகிற்கு முதலில் சொன்னது தமிழர்கள்தான். ‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பது தமிழ் பழமொழி. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று புறநாநூறு பாடலில் சொன்னார் கணியன் பூங்குன்றனார். ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக நமக்குள் சந்தோஷங்கள், சிறு சிறு சண்டைகள், சமாதானங்கள் என அனைத்தும் நிறைந்த அற்புத அமைப்பு குடும்பம் அது. ஆனால் இன்றோ சமூக வலைத்தளங்களில் மட்டும் தான் (பேஸ்புக், வாட்சப் குரூப் உருவாக்கி) உறவுகள் கூட்டாக வாழ்கின்றனரே தவிர, கூட்டுக் குடும்பமாக வாழ்வது என்பது அதிசயமாக உள்ளது. ஷாப்பிங், பார்ட்டி, பார்க், பீச், சினிமா, இவைகளை தாண்டி மனிதனுக்கு ஒரு சந்தோஷம் உண்டென்றால் அது கூட்டுக் குடும்பத்தில் மட்டுமே. நாம் இழந்துவரும் பண்பாடுகளில் தற்போது மிக முக்கியமானது கூட்டுக் குடும்பமாகும். குடும்பங்களுக்குள் ஒற்றுமை இருக்கும் வரை, மனிதனுக்கு வாழ்க்கையில் கவலை இருப்ப தில்லை. இன்றோ, தனி மனிதனின் சுதந்திரம் என்று தனிக் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வாழ ஆசைப்படுகிறார்கள். இதனால் பல கூட்டுக் குடும்பங்கள் சிதைந்துபோயின. தனிக்குடும்ப வாழ்வில் நாம் மட்டும் விலகி நிற்க வில்லை. அன்பு, பாசம், நேசம் யாவற்றி லிருந்தும் நாம் சிறிது சிறிதாக விலகி தூரமாக்கப்பட்டு விடுகிறோம். அன்று கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்த காலத்தில் முதியோர் இல்லம் இருந்ததா? இன்றோ காணும் இடங்களில் எல்லாம் முதியோர் இல்லம் முளைத்துள்ளது வருத்தபட வேண்டிய விஷயம்தானே?

கொஞ்சம் சீரியஸான, அதே சமயம் உண்மையான மேற்கண்ட இரண்டு விஷயங்களையும் கோர்த்து விவசாயம், கிராம கதை என்ற மேற்படி விஷயத்தை வெறும் வார்த்தை ஜாலமாக கூறாமல் , முழு படத்திலும் கிராமத்து கலாச்சாரம், ஜல்லிக்கட்டு, ரேக்ளா ரேஸ், குடும்ப உற்வு, முறைப்பெண் பந்தம் என்று மனிதனுக்கு சொந்தமான அத்தனை அம்சங்களையும் மிகவும் நேர்த்தியாக வடிமைத்து வழங்கி சபாஷ் பெறுகிறார் ‘பசங்க’ இயக்குனர் பாண்டிராஜ்.

படத்தின் கதையை சிம்பிளாக சொல்லப் போனால் ஒரு கல்யாணத்தை நடத்த அம்மா, அப்பா, அக்கா, மாமா, அங்காளி, பங்காளி, ஊர்காரர், உறவுக்காரர் என ஒட்டுமொத்த குடும்பத்திடமும் சம்மதம் வாங்கப் போராடும் ’கடைக்குட்டி சிங்கத்தின் கதைதான் முழு படம்.

கொஞ்சம் டீடெய்லாக சொல்வதென்றால் ராணா சிங்கம் (சத்யராஜ்) முதல் மனைவியான விஜி சந்திரசேகரசேகருக்கு 4 பெண் குழந்தைகள் பிறக்கின்றது. ஆனால், ராணா சிங்கத்திற்கு ஆண் குழந்தை வேண்டும் என்று ரொம்ப ஆசைப்பட்டு பானுபிரியாவை இரண்டாம் திருமணம் செய்து கொள்கிறார் . ஆனாலும் இவர்களுக்கு பெண் குழந்தை தான் பிறக்கிறது. இதையடுத்து ராணா சிங்கம் மூன்றாவது திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கும் போது முதல் மனைவியான விஜி சந்திரசேகரசேகருக்கு ஆண் குழந்தை பிறந்து விடுகிறது, அவர் தான் ஹீரோ குண சிங்கம்(கார்த்தி). கல்லூரியில் படித்தாலும் ஒரு விவசாயியாக வளர்ந்து வரும் கார்த்திக்கிற்கு தனது சொந்தத்தில் எப்படியாவது திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சத்யராஜ் நினைக்கிறார்.

கார்த்தியின் அம்மாவான விஜி சந்திரசேகர் தனது மகனுக்கு, தனது மகள் வழி பெண்ணை தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பலவித பகீரதபிரயத்னம் செய்கிறார். ஆனால் கார்த்திக் தனது அக்கா மகள்களான பிரியா பவானி ஷங்கர் மற்றும் பின்னு ஆகிய இருவரில் இருவரையும் பர்சனலாக கண்டு கொள்ளாமல் ஷாயிஷாவை லவ்வி வருகிறார். தாவணி கட்டின பாபி டால் போல இருக்கும் ஹீரோயின் சாயீஷா, ஹோம்லியான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். முழுக்க முழுக்க மாடர்ன் பெண்ணாக சில படங்களில் நடித்திருப்பவர், இந்த படத்தில் மொத்தமாக தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். அவரால் தான் படத்தில் திருப்புமுனை ஏற்படுகிறது

இப்படி கார்த்தி, தனது அக்கா மகள்களை திருமணம் செய்து கொள்ளாததால் அக்கா குடும்பத்திற்கும் கார்திக்கிக்கிற்கும் பிரச்சனை வர இறுதியில் கார்த்தி தனது அக்காக்களுடன் ஏற்பட்டுள்ள பிரச்சனையை தீர்த்தாரா, விவசாயத்திற்காக பாடு பட்டதில் வெற்றி கண்டாரா என்பது தான் படத்தின் முழுக் கதை.

நீண்ட இடைவெளிக்கு பிறகு திரையில் இம்புட்டு ஸ்டார்களைக் கொண்டு ஒரே ஒரு குடும்பமாகக் காட்டி, அவர்களுடைய அன்றாடங்களை, மனசை, நடப்பை ஈரப்பதமான தரையை, வயல் வெளியை, கிராமத்தைப் பார்க்க அவ்வளவு புத்துணர்வாக இருக்கிறது. ஆரம்பக் காட்சியிலேயே ரேக்ளா ரேஸுடன் புழுதி பறக்க ஆரம்பிக்கிறது படம். பிறகு சொந்த பந்தம், அக்கா, மாமா, முறைப்பெண் என ஒவ்வொருதத்தருக்கும் அறிமுகம் தந்து படம் டேக் ஆஃப் ஆக டைம் ஆகிறதுதான். ஆனால், வரும் வீட்டில் கால் வைத்தது போல் ஆளாளுக்கு இழுத்து நலம் விசாரிக்கும் மனநிலையைத் தருவது சிறப்பு. படத்தில் 20 பேருக்கும் மேலான கதா பாத்திரங்களுக்கு முக்கியமான வேடம். ஒவ்வொருவரையும் ரசிகரகள் மனதில் பதிய வைத்துக்கொள்ள ஒரு கனமான காட்சியை வைத்திருக்கிறார் இயக்குநர். சத்யராஜ், சூரி, விஜி சந்திரசேகர், பானுப்ரியா, மௌனிகா, தீபா, ஜீவிதா, யுவராணி, இந்துமதி, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா பினு, சயிஷா, சரவணன், இளவரசு, ஸ்ரீமன், மாரிமுத்து, சௌந்தர் எனப் நடித்தவர்கள் பட்டியல் ரொம்ப நீளம். எல்லோருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். தாவணி கட்டின பாபி டால் போல இருக்கும் ஹீரோயின் சாயீஷா, ஹோம்லியான கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். முழுக்க முழுக்க மாடர்ன் பெண்ணாக சில படங்களில் நடித்திருப்பவர், இந்த படத்தில் மொத்தமாக தன்னை மாற்றிக் கொண்டிருக்கிறார். அவரால் தான் படத்தில் திருப்புமுனை ஏற்படுகிறது

வழக்கமான கமர்ஷியல் படம் தான் என்றாலும் அதில் சொல்லப்படும் ரெகுலரான விஷயங்களை சற்று வித்தியாசமாக சொல்லியிருக்கும் இயக்குநர் பாண்டிராஜ், அதிலும் விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்து பாடம் நடத்தாமல், படம் பார்ப்பவர்களை பாதிக்கும்படி சொல்லி யிருக்கிறார். சண்டைக்காட்சிகளில் கூட கார்த்தியை விவசாயியாகவே காட்டியிருக்கும் பாண்டிராஜ், அவருக்கான ஆயுதமாக ஒரு இடத்தில் தென்னங்கொலை பயன்படுத்தியிருப்பது எல்லாம் ரசிக்க வைக்கிறது. ஜாதி பிரிவினை குறித்தும் சற்று பேசியிருப்பவர் அதை ஒரு புரட்சியாளராக அல்லாமல், சக மனிதராக எளிமையான முறையில் சொல்லியதற்கு ஸ்பெஷல் அப்ளாஸ்.

நாளைய நாயகன் டி.இமானின் இசையில் பாடல்கள் அனைத்து மெலோடி ரகங்கள், வேல்ராஜ் தனது கேமரா மூலம் கதை நடக்கும் கிராமத்தை மட்டும் இன்றி, அதில் இருக்கும் கதா பாத்திரங்களையும் ரொம்ப அழகாக காட்டியிருப்பவர், அந்த ரேக்ளா ரேசை காட்டி இருப்பத்தற்கும் ரசிகர்கள் ஒவ்வொருவரும் கைத்தட்டல் மூலம் பாராட்டை தெரிவிப்பது நெகிழ்வைத் தருகிறது.

மொத்தத்தில் நம் பக்கத்து சீட் ஜர்னலிஸ்ட் சொன்னது போல் காதல், செண்டிமெண்ட், காமெடி, ஆக்‌ஷன் என்று அனைத்தும் நாம் பல படங்களில் பார்த்தது தான் என்றாலும், இதை பாண்டியராஜ் கையாண்ட விதம் என்னவோ சற்று புதிதாகவும் இலகுவாகவும் இருக்கிறது. அதிலும், வில்லனை ரொம்ப பயன்படுத்தாமல், கார்த்தியின் குடும்ப நபர்களே ஒரு கட்டத்தில் வில்லத்தனம் செய்வது போல காட்டியதும், பிறகு அதுவும் பாசத்தில் ஒரு வகை என்று சொல்லியிருப்பது திரைக்கதையின் பலமாக இருக்கிறது. இருந்தாலும் படத்தின் இரண்டாம் பாதி சற்று நீளமாக செல்வது போன்ற உணர்வை கொடுக்கிறது.

அதே சமயம் வீட்டுக்கு வீடு நாள்தோறு பல சேனல் எப்பிசோட் ஒளிபரப்பினாலும் பரபரப்பு குறையாமல் ஒளிபரப்பாக கூடிய ஒரு மெகா சீரியலுக்கு உண்டான கதையையும், கதா பாத்திரங்களையும் இரண்டரை மணி நேர படத்திற்குள் கொண்டு வந்த இயக்குநர் பாண்டிராஜின் திரைக்கதை யுக்திக்கு சபாஷ் சொல்லியாக வேண்டும்.

அதே சமயம் வீட்டுக்கு வீடு நாள்தோறும் பல்வேறு சேனல்களில் பல நூறு எபிசோட் ஒளி பரப்பினாலும் பரபரப்பு குறையாமல் ஒளிபரப்பாக கூடிய ஒரு மெகா சீரியலுக்கு உண்டான ஒத்தை கதையை, ஏராளமான கதாபாத்திரங்களை வைத்துக் இரண்டரை மணி நேர படத்திற்குள் மிக திருப்தியாக கொண்டு வந்த இயக்குநர் பாண்டிராஜின் திரைக்கதை யுக்திக்கு ஒரு பொக்கே கொடுத்தே ஆக வேண்டும்..

மார்க் 5 / 3.25

 

error: Content is protected !!