சுகாதார மற்றும் உடல்நலக் குறியீடு பட்டியலில் கேரளா முதலிடம்! – AanthaiReporter.Com

சுகாதார மற்றும் உடல்நலக் குறியீடு பட்டியலில் கேரளா முதலிடம்!

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்கிறது குறள். நோயற்ற வாழ்வு என்பது வெறும் உடல்நலக் கேடு சார்ந்தது மட்டுமல்ல, மன நலனையும் சார்ந்தது. இன்று பல நோய்கள் வருவதற்கு மன அழுத்தம் மிக முக்கியக் காரணியாக மாறியுள்ளது. உடல் உழைப்பு சார்ந்த வேலைப்பளுவும் கடந்த காலங்களை ஒப்பிடும்போது குறைந்து வருகிறது. இந்தியாவில் சுகாதாரத்தின் நிலை என்ன? மத்திய அரசு மற்றும் மாநில அரசு சுகாதாரத்தின் நிலையை மேம்படுத்த எடுத்து வரும் முயற்சிகள் என்ன? மத்திய,மாநில அரசு சுகாதாரத்திற்காக ஒதுக்கும் பட்ஜெட் போதுமானதா? இந்திய அளவில் குழந்தைகளின் பிறப்பு-இறப்பு விகிதம், சராசரி ஆயுள், ஒரு பெண் சராசரியாக எத்தனை குழந்தைகளைப் பெறுகிறாள், தங்கள் நலனிலும் சுற்றுச் சூழலைப் பேணுவதிலும் மக்களிடம் போதுமான அளவு பொறுப்பும் அக்கறையும் இருக்கிறதா? சுகாதாரத்தைப் பேணிக் காக்கும் பொறுப்பு யாருடையது?

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டம் பிரிவு 7ன் கீழ், சில துறைகளின் சட்ட மயமாக்கும் உரிமை மத்திய அரசின் பட்டியலில் (Central List) உள்ளது. சில துறைகளின் சட்டமயமாக்கும் சுதந்திரம் மாநில அரசின் பட்டியலில் (State List) உள்ளது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் இணைந்து சட்டமாக்கிச் செயல்படுத்தும் வகையில் சில துறைகள் பொதுப் பட்டியலில் (concurrent List) உள்ளன. அவ்வகையில் பலரும் பொதுச் சுகாதாரத்தைப் பற்றிப் பேசும்போது மத்திய அரசை நோக்கிச் சாடுகிறார்கள். உண்மையில் பொதுச் சுகாதாரம் மாநில அரசின் பட்டியலில் உள்ளது. அதாவது மாநில அரசிற்கே சுகாதாரம், துப்புரவு, மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்கள் ஆகியவற்றை அமைக்கும் பொறுப்பு உண்டு. மத்திய அரசு

இந்தியாவை ஆளும் அரசென்பதால் மத்திய அரசும் சுகாதாரத்திற்கென பட்ஜெட்டை ஒதுக்குகிறது. பல்வேறு நடவடிக்கைகளை சுகாதாரம் சார்ந்து மேற்கொள்ள நடவடிக்கைகளையும் திட்டங்களையும் கொண்டு வருகிறது. மத்திய அரசு சுகாதாரத்திற்கென ஒதுக்கும் பட்ஜெட் ராணுவத்திற்கு ஒதுக்கும் பட்ஜெட்டோடு ஒப்பிட்டால் மிகக் குறைவு என்பது வருத்தமான விஷயமே

இதனிடையே நிதி ஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ள நாட்டின் சுகாதார மற்றும் உடல்நலக் குறியீடு பட்டியலில் கேரளா முதலிடம் பிடித்துள்ளது. தமிழகம் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பிஹார் போன்ற மாநிலங்கள் மிக மோசமான நிலையில் உள்ளன.

நம் நாடுமுழுவதும் மக்களுக்கு கிடைக்கும் சுகாதார வசதி, உடல்நலம் பேணும் செயல்பாடுகள் தொடர்பாக பல்வேறு மாநிலங்களில் நிதி ஆயோக் ஆய்வு செய்துள்ளது. உலக வங்கி மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மக்களின் வாழ்நாள், நோய் எதிர்ப்பு சக்தி, எச்ஐவி உள்ளிட்ட பாதிப்புகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

நாடுமுழுதும், 2015- 16ம் ஆண்டில், 730 மாவட்டங்கள், அங்குள்ள முக்கிய மருத்துவமனைகளில் புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு இதன் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக அனைத்து புள்ளிகளின் அடிப்படையில் கணக்கிட்டால் 80 புள்ளிகளுடன் கேரளா முதலிடத்தில் உள்ளது.

பஞ்சாப் 65.21 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், தமிழ்நாடு 63.38 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. குஜராத் 61.99 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், இமாச்சல பிரதேசம் 61.02 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

அதேசமயம் சுகாதார குறியீட்டில் அதிகம் பின் தங்கிய மாநிலங்களில் உத்தரப் பிரதேசம் முதலிடம் வகிக்கிறது. இதைத் தவிர,ராஜஸ்தான், பிஹார், ஒடிசா, மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் கடைசி இடங்களில் உள்ளன. எனினும் கடந்தமுறை நடந்த ஆய்வை ஒப்பிடுகையில், தற்போது அந்த மாநிலங்களில் சுகாதாரத்துறையின் செயல்பாடுகள் சற்று மேம்பட்டுள்ளன.

எச்ஐவி சிகிச்சையில் மணிப்பூரும், காசநோய் சிகிச்சையில் லட்சதீவும் முதலிடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்க்து.