நிதி ஆயோக் சுகாதார தர பட்டியலில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் கேரளா! – AanthaiReporter.Com

நிதி ஆயோக் சுகாதார தர பட்டியலில் இந்தியாவின் தலைசிறந்த மாநிலம் கேரளா!

இந்திய அளவில் சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலமாக கேரளா திகழ்கிறது என்று ‘நிதி ஆயோக்’ வெளியிட்டுள்ள சுகாதார தரவரிசை பட்டில் மூலம் தெரிவித்துள்ளது.

இந்திய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறையின் நிலை குறித்து நிதி ஆயோக் கணக்கிட்டு தரவரிசை ஒன்றை வெளியிட்டு வருகிறது. இதில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை 23 காரணிகளை கொண்டு மதிப்பீடு செய்யப்படுகின்றன. இந்தத் தர வரிசையை நிதி ஆயோக், மத்திய சுகாதாரத்துறை மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் தயாரிக்கப்பட்டுகிறது. இந்தத் தரவரிசையில் நாட்டில் உள்ள மாநிலங்களை பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆந்திரா, மகாராஷ்டிரா இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தப் பிரிவில் கடைசி இடத்தில் உத்திரபிரதேசம் உள்ளது. இதற்கு முன்பு பிகார் மற்றும் ஒடிசா இடம் பெற்றுள்ளன. சிறிய மாநிலங்கள் பட்டியலில் மிஷோரம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் சண்டிகர் முதலிடத்தில் உள்ளது.

இந்தத் தரவரிசையை வெளியிட்ட நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார், ‘இந்தச் சுகாதார குறியீடு மூலம் மாநிலங்களின் சுகாதாரத்தை மேம்படுத்த நிதி ஆயோக் முற்படும்’ எனத் தெரிவித்துள்ளார். மேலும் நிதி ஆயோக்கின் உறுப்பினரான வினோத் குமார் பவுல், ‘மத்திய அரசு சுகாதாரத்துறைக்கான செலவினத்தை 2.5%மாக அதிகரிக்கவேண்டும். அதேபோல மாநில அரசுகள் தங்களின் சுகாதாரத்திற்கான செலவினங்களை 4.7% முதல் 8% வரை அதிகரிக்கவேண்டும்’ எனக் கூறியுள்ளார்.

மேலும் இந்தத் தரவரிசை அறிக்கையில் மாநிலங்களின் சுகாதார தரத்திற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் தொடர்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பிகார், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசா உள்ளிட்ட மாநிலங்கள் சுகாதாரத்துறையிலுள்ள பல காரணிகளில் சரியாக செயல்பாடததே இங்கு சுகாதாரத்தின் தரம் குறைய காரணமாக இருந்துள்ளது. அதிலும் குறிப்பாக பிகார் மாநிலம் கருவுறுதல் சதவிகிதம், குறைந்த எடைகளில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை, பாலின விகிதம், காசநோய், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவற்றில் சரியாக செயல்படவில்லை என்று அறிக்கை தெரிவித்தது.

இந்த அறிக்கை மொத்தமாக இந்தியாவிலுள்ள மாநிலங்கள் இன்னும் தங்களின் சுகாதாரத்துறை உயர்த்தவேண்டும் என்று தெரிவித்துள்ளது.

நிதி ஆயோக் வெளியிட்டுள்ள முழு பட்டியல் விவரம்…

கேரளா
ஆந்திர பிரதேஷ்
மகாராஷ்டிரா
குஜராத்
பஞ்சாப்
இமச்சாள் பிரதேஷ்
ஜம்மு – காஷ்மீர்
கர்நாடகா
தமிழ் நாடு
தெலங்கானா
மேற்கு வங்கம்
ஹரியாணா
சட்டீஸ்கர்
ஜார்கண்ட்
அசாம்
ராஜஸ்தான்
உத்ரகாண்ட்
மத்திய பிரதேஷ்
ஒடிசா
பிகார்
உத்திர பிரதேஷ்