காயங்குளம் கொச்சுண்ணி – விமர்சனம்!

காயங்குளம் கொச்சுண்ணி – விமர்சனம்!

சமீபகாலமாக தமிழில் அட்டகாசமான கதை அம்சங்கள் கொண்ட படங்கள் ரிலீஸாகி ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழலில் பெரும்பாலும் பரிட்சாத்த முறைகளில் படமெடுத்து ஹிட் அடிக்கும் மோலிவுட்டில் தயாராகி வெளி வந்துள்ள படம் காயம்குளம் கொச்சுண்ணி. தமிழில் ஜோதிகா நடித்த 36 வயதினிலே படத்தை இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸ்  முதன் முறையாக ஒரு பீரியட் படத்தை நிவின்பாலியை கதாநாயகனாகவும் மோகன்லாலை முக்கிய வேடத்திலும் நடிக்க வைத்து இயக்கி வெளியிட்டுள்ளார். இது கேரளாவில் 1980களில் வெள்ளையர் ஆட்சிக்காலத்தில் பிரசித்தி பெற்ற ராபின்ஹூட்டை போன்ற ஒரு மலையாளக் கொள்ளைக்காரன் ஒருவனின் நிஜக் கதை.

கொஞ்சம் சுருக்கமாக சொல்வதென்றால் கேரளாவில் காலங்காலமாக செவிவழிக் கதையாக, நாடோடிப் பாடல் வடிவிலும், அமர் சித்ரா கதா காமிக் புத்தக வடிவத்திலும் (நம்ம தமிழில் மலை யூர் மம்பட்டியான், வாட்டாக்குடி இரணியன் போல்) சில பல மலையாளச் சினிமாக்களுமாக மறுபடி மறுபடியும் சொல்லப் பட்டுக் கொண்டே இருக்கிற கதைதான். கொஞ்சம் டீடெய்லாக சொல்வதென்றால் காயங்குளத்தில் தந்தைக்கு திருட்டுப்பட்டம் கட்டப்பட்டதால் சாப்பாட்டுக்கு வழியின்றி தனது பத்து வயதிலேயே வேறு ஊருக்கு சென்று தஞ்சம் புகுகிறார் நிவின்பாலி என்னும் ஏழை இஸ்லாமியர் (காயம்குளம் கொச்சுண்ணி). போன இடத்தில் எக்காரணம் கொண்டும் திருடவே கூடாது என வைராக்கியமாக இருக்கும் நிவின்பாலியை தங்களது சுயலாபத்துக்காக பயன்படுத்தும் சிலர், சோ கால்ட் உயர் ஜாதியினர் தாங்கள் மாட்டிக் கொள்ளாமல் இருக்க, கொச்சுண்ணிக்கு திருட்டு பட்டம் கட்டி தண்டனை கிடைக்க செய்கின்றனர்.

அந்த சமயத்தில் ஆங்கிலேய ஆட்சியாளர்களை கதி கலங்க வைத்துக் கொண்டிருந்த மிகப் பெரிய கொள்ளையனான மோகன் லால் (இத்திக்கர பக்கி) நிவின்பாலியை காப்பாற்றி, நாடே வணங்கும் கொள்ளைக்காரர் காயங்குளம் கொச்சுண்ணியாக உருவாக்குகிறார். ஆம்.. ஏழைகளை காப்பாற்ற கொள்ளையடிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி அவருக்கு கொள்ளை அடிக்க பயிற்சி அளித்து மாபெரும் கொள்ளையனாக மாற்றுகிறார்.

அதை அடுத்து பணம் படைத்தவர்களிடம், பொருட்களை கவர்ந்து ஏழைகளுக்கு உதவும் நிவின் பாலி, பக்கி (மோகன்லால்) போல் அரசாங்கத்திற்கு சிம்மசொப்பனமாக மாறுகிறார். அதன் பிறகு, அவர் சந்திக்கும் தொடர் துரோகங்களைக் கடந்து, கையெடுத்து வணங்கும் மனிதக் கடவுளாக மக்கள் மனதில் எப்படி இடம் பிடித்தார் என்பதுதான் மிச்சக் கதை.

ஒண்ணுக்கு(ம்) போகத் தெரியாத இளைஞன், ஆக்ரோஷ கொள்ளையன் என கிடைத்த அரிதான ரோலுக்காக ரொம்ப மெனக் கெட்டு அட்டக்காசம் செய்து இருக்கிறார் நிவின்பாலி. குறிப்பாக இது நாள் வரை செய்திராத அளவுக்கு இதில் ஆக்சன் காட்சிகளில் பின்னி எடுத்திருக்கிறார் மனிதர். கடும் உழைப்பை கொடுத்து அதற்கான வெற்றியையும் அறுவடை செய்திருக்கிறார்.

கிட்டத் தட்ட இருபது நிமிஷங்கள் என்றாலும் அய்யே ஞான் கெஸ்ட் ரோல் இல்லே என்று ரசிகன் மண்டைக்குள் சொல்ல வைத்து ஒட்டு மொத்த படத்திலும் இருப்பது போன்ற எனர்ஜியை காட்டி செல்கிறார் மோகன்லால். ஒத்தைக் கண்ணை மட்டும் சுருக்கிக் கொண்டு தலையை சாய்த்தபடி அவர் பேசும் ஸ்டைலே தனி.

அதிலும் மரத்துண்டின் மேல் ஒற்றைக் காலை வைத்து நிற்கும் காட்சியும், மரக்கிளையில் ஸ்ரீரங்கர் ஸ்டைலில் சாய்ந்திருக்கும் காட்சியும் படம் முடிந்த பிறகும் மனப் பிம்பத்தில் நிற்கும்படி செய்து இருக்கிறார் தி கிரேட் லாலேட்டன். கொச்சுண்ணியை காதலித்ததை தவிர வேறெந்த குற்றமும் செய்யாத பிரியா ஆனந்தியின் தலைமுடியை மழித்து ஊரை விட்டே துரத்தப்படும் வேடத்தில் தனிக் கவனம் பெறுகிறார்.

கேஷவனாக வரும் சன்னி வெய்ன் ரியல் வில்லத்தனம் காட்டி மிரட்டி இருக்கிறார். அது போல் களரி குருவான பாபு ஆண்டனி கம்பீரம்..கடைசியில் க்ளைமாக்ஸ் திருப்பத்திற்கு இவர் துணைபோவது எதிர்பாராதது.

இவர்கள் தவிர ஆதிக்க சாதிக்காரர் என்பதை அடிக்கடி பறைசாற்றி அதிகாரம் செய்யும் சுதீர் காரமணா, மேல்சாதிக்கரர் என்றாலும் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல்கொடுக்கும் ஷைன் டாம் சாக்கோ, நண்பனின் உயிரை காப்பாற்றுவதாக நினைத்து துரோகத்துக்கு விலை போகும் மணி கண்ட ஆச்சாரி, நம்ம எம்.எஸ். பாச்கர் என்று அத்தனை பேரும் அட்டகாசம் என்று சொல்ல வைத்து விட்டார்கள்

தற்போதைய டெக்னாலஜி சூழலில் எதுவும் ஈசியே என்றாலும் 18ஆம் நூற்றாண்டிற்கே பார்வை யாளனை அழைத்து சென்று அங்குள்ள கேரக்டர்களுடன் நம்மையும் உலாவர செய்வதில் ஒளிப் பதிவாளர் பினோத் பிரதான் தனி பாணியை கையாண்டு சபாஷ் சொல்ல வைத்து விட்டார். இசை கோபி சுந்தர் . இந்த படத்துக்கு தன்னால் என்ன முடியுமோ அதை வழங்கி இருக்கிறார். படத் தொகுப்பு செய்துள்ள ஸ்ரீகர் பிரசாத் இன்னும் கொஞ்சம் தன் கத்திரி கோலை தீட்டி இருக்க்லாம்.

ஒரு கொள்ளையனின் உண்மை வரலாற்றை மிக நேர்மையாக பதிவு செய்துள்ள இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் அந்த 18ம் நூற்றாண்டில் இங்கிருந்த சாதிய ஏற்றத் தாழ்வு, குறிப்பாக பிரா மணர்களுக்கும் இடைநிலை சாதியினர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் இடையிலான உறவு முறை, அதில் கொச்சுண்ணி போன்ற இஸ்லாமியர் நிலை, இவர்களின் பிரச்னைக்குள் ஆங்கிலே யர்கள் நுழைய முடியாத போக்கு போன்றவற்றை ரொம்ப கேஷூவாலாக எக்ஸ்போஸ் பண்ணி அசத்தி இருக்கிறார்..

மொத்ததில் மோலிவுட்டில் கோகுலம் கோபாலன் பெரும் பட்ஜெட்டில் தயாரித்துள்ள இந்த ‘காயங் குளம் கொச்சுண்ணி’யை சினிமா ஆர்வலர்கள் சகலரும் பார்த்தே தீர வேண்டும்.

மார்க் 3.5 / 5

error: Content is protected !!