காஷ்மீர் சிறுமியின் புகைப்பட விவரங்களை வெளியிட்ட ஊடகங்களுக்கு 10 லட்சம் ஃபைன்! – AanthaiReporter.Com

காஷ்மீர் சிறுமியின் புகைப்பட விவரங்களை வெளியிட்ட ஊடகங்களுக்கு 10 லட்சம் ஃபைன்!

அண்மையில் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்ப்டுத்திய ஜம்மு – காஷ்மீரில் கற்பழித்து கொல்லப் பட்ட 8 வயது சிறுமியின் அடையாளத்தை வெளியிட்ட 12 ஊடகங்கள் டெல்லி ஐகோர்ட்டில் மன்னிப்பு கேட்டன.

ஜம்மு-காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தை சேர்ந்த 8 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை எதிர்த்து காஷ்மீர் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இந்நிலையில் கொலை செய்யப்பட்ட சிறுமியின் விவரங்களை 12 ஊடகங்கள் வெளியிட்டன.

ஆனால் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டப்பிரிவு 23 மற்றும் சட்டப்பிரிவு 228 ஏ ஆகியவை பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழுந்தைகளின் விவரங் களை ஊடகங்கள் வெளியிடுவதில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.அந்த சட்டங்களை மீறி சிறுமியின் விவரங்களை வெளியிட்ட 12 ஊடங்களுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் ஏப்ரல் 13ம் தேதி நோட்டீஸ் அனுப்பியது. அதில் 9 ஊடகங்கள் இன்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகின.

டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் நீதிபதி சி. ஹரி சங்கர் கொண்ட அமர்வு முன் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் சிறுமியின் விவரங்களை வெளியிட்ட ஊடகங்களுக்கு நீதிபதிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அதை தொடர்ந்து சிறுமியின் விவரங்களை வெளியிட்டதற்கு ஊடகங்கள் மன்னிப்பு கோரின.

பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட குழந்தைகள் தொடர்பான சட்டங்களை பற்றி அறியாதது மற்றும் இறந்த சிறுமியின் விவரங்களை வெளியிடுவதால் பாதிப்பில்லை என்று நினைத்தது ஆகிய காரணத்தாலேயே இந்த தவறு நடந்ததாக ஊடகங்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் நீதிபதிகளிடம் தெரிவித்தனர்.

விசாரணையின் முடிவில் தவறு செய்த ஊடகங்கள் அனைத்தும் தலா 10 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். இந்த அபராத தொகை ஜம்மு மற்றும் காஷ்மீர் பாதிக்கப்பட்டோர்கான இழப்பீட்டு நிதியில் சேர்க்கப்பட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  டைம்ஸ் ஆப் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ், டெக்கான் கோர்னிகல், நவபாரத் டைம்ஸ், பயானீர், பர்ஸ்ட் போஸ்ட், தி வீக் ஸ்டேட்ஸ்மேன்,…என்டிடிவி, ரிபப்ளிக் டிவி, இந்தியா டிவி இந்த அனைவருக்கும் தலா 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது…

மேலும் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் விவரங்களை வெளியிடுவது தொடர்பான சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் குறித்து ஊடகங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

பிசிஐ உத்தரவு

கிரிமினல் குற்றங்களில் ஈடுபடும் குழந்தைகள் மற்றும் பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளத்தை ஊடகங்கள் வெளியிட கூடாது என பிசிஐ (PCI – Press Council of India) எனப்படும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியா உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக ஏப்ரல் 16ம் தேதி பிசிஐ வெளியிட்ட அறிக்கை இன்று பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டது.

‘பாதிக்கப்பட்ட குழந்தைகளின் விவரங்களை ஊடகங்கள் வெளியிடுவது பத்திரிகை நெறிமுறைகளுக்கு எதிரானது மட்டுமல்லாமல், சிறுவர் நீதி (குழந்தை பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015 மற்றும் பாலியல் குற்றங்கள் சட்டம் (POCSO) 2012 ஆகியவற்றை மீறும் செயல்’’

‘‘ஊடகங்களின் இந்த நடவடிக்கை கவலை அளிக்கிறது. இனி ஊடகங்கள் குற்றம் சாட்டப்பட்ட அல்லது பாதிக்கப்பட்ட குழந்தைகளின் அடையாளங்களை வெளியிடுவதில் கடும் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும்’’ என பிசிஐ தலைவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.